மின் நூல்

Saturday, May 11, 2019

வசந்த கால நினைவலைகள்....

                                                                        23                 

        
பொதுப்பணித் துறை அலுவலகத்தில் எங்கள் ஆறு பேரையும்  இன்னொரு  அறைக்குக் கூட்டிச் சென்று விட்டு விட்டு  அந்த  அறிவிப்பாளர் போய் விட்டார்.  எங்கள் அறுவரில் ஒரு  பெண் பிள்ளை கூட இல்லாதது இன்னொரு  ஆச்சரியம்.   நாங்கள் ஒருவருக்கொருவர்  யார், எங்கிருந்து வருகிறோம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த பொழுது  என் அனுபவத்தையும் அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.  அந்த சமயத்தில்  ஐம்பது வயது  மதிக்கத்தக்க தோற்றமளித்த ஒருவர் சில காகிதங்களுடன் உள்ளே நுழைந்தார்.

அவரைப் பார்த்ததும் எங்கள் கலகலப்பு நின்றது.  சட்டென்று எழுந்தவர்களை அன்பாக உட்காரச் சொன்னார்.   தன்னை பாலசுப்பிரமணியன்,  செக்ஷன் ஆபிஸர்  என்று எங்களுக்கு  அறிமுகப்படுத்திக் கொண்டார்.   தன் கையில் கொண்டு வந்திருந்த காகிதத்தைப் பார்த்து  எங்கள் ஆறு பேர் பெயரையும் படித்தார்.   பெயர்களைப் படித்த  வரிசையில் எங்களை அமரச் சொன்னார்.  முதலாவதாக கஜேந்திரன், அடுத்தது கமலேஷ், அடுத்தது நான் என்று அமர்ந்த பொழுது இந்த வரிசை தான் செலக்ஷன் லிஸ்ட் என்றார்.  ஆக நான் மூன்றாவது நபராய் வரிசையில் இருக்கிறேன் என்று தெரிந்து கொண்டேன்.

அடுத்து  எத்தனை பேருக்கு வேலை,  எங்கு வேலை,  என்ன வேலை,  எப்பொழுது வேலையில் ஜாயின் பண்ண வேண்டும் என்பதைச் சொன்னார்.    ஒருவருக்குத் தான் வேலையாம்.   பணியிடம்  கிருஷ்ணகிரிக்கு  அருகில் உள்ள கிருஷ்ணகிரி ரிஸர்வாயர் ப்ரோஜக்ட் உதவிப் பொறியாளர் அலுவலகம்,  டைபிஸ்ட் வேலை, இப்போதைக்கு இரண்டு மாதத்திற்கு  தற்காலிக வேலை என்ற தகவல்களைச் சொன்னார். 

அவர் சொல்லி முடித்தவுடனேயே கஜேந்திரன்  தனக்கு வெளியூர் வேலைக்கு போக முடியாத குடும்பச் சூழ்நிலை என்று சொன்னான்.  கமலேஷ்  என்ன சொன்னான் என்று ஞாபகமில்லை.  மொத்தத்தில் அவனும் இல்லை என்று  ஆன பிறகு பந்து  என் கோர்ட்டுக்கு வந்தது.   நான் போகத் தயார் என்றதும் அந்த செக்ஷன் ஆபிஸர் என் அருகில் வந்து கைகுலுக்கினார்.  மற்றவர்களைப் பார்த்து 'பெஸ்ட் லக் நெக்ஸ்ட் டைம்' என்று சொன்னார்.  மற்றவர்கள் வெளியேற நான் மட்டும் அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என்பதற்குக் காத்திருந்தேன்.   என்னை அந்த அறையிலேயே இருக்கச் சொல்லி விட்டு அவர் மட்டும் வெளியேறினார்.

கொஞ்ச நேரத்தில்  என்னைக் கூப்பிடுவதாக  ஒருவர் வந்து அழைத்துப் போய் இன்னொரு  அறைக்குள் போகச் சொன்னார்.   அந்த அறை தான் தலைமை அதிகாரி அறை போலிருக்கு.  அங்கு பாலசுப்ரமணியம் நிற்க அதிகாரி அவரிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தார்.  நான் உள்ளே நுழைந்து அவருக்கு வணக்கம் சொன்னேன்.  அந்த அதிகாரி என்னிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தார்.  "இந்த   அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை கிருஷ்னகிரி   ரிஸர்வாயர் ப்ரொஜக்ட் ஏ.இ. கிட்டே கொடுத்திடுங்க..    திங்கட்கிழமை பத்து மணிக்குள் வேலையில் சேர்ந்திடணும்.."  என்று என்னிடம் வேலை நியமன ஆணை தட்டச்சு செய்திருந்த காகிதத்தைக் கொடுத்தார்.

"நன்றி, சார்.." என்று வாங்கிக் கொண்டேன்.  'நீங்கள் போகலாம்..' என்கிற மாதிரி பாலசுப்ரமணியன்  ஜாடை காட்ட வெளியே வந்தேன்.

நேரே ஜாப் டைப்பிங் ஆபிஸ் வந்து அய்யங்காரிடம்  வேலை கிடைத்த விஷயத்தைச் சொன்னேன்..  அவருக்கும் சந்தோஷம்.. "தெரியுமோல்யோ?" என்றார் அய்யங்கார்.   "கிருஷ்ணகிரி  ரிஸர்வாயர்  ப்ரொஜெக்ட் என்றால் கிருஷ்ணகிரிக்கு முன்னாலேயே இருக்கு. ஆக்சுவலி கிருஷ்ணகிரி டாம் இருக்கற இடம்.  பஸ்லே தான் போகணும்.  கண்டக்டர் கிட்டே சொல்லி மெயின் ரோடிலேயே இறங்கிக்கோ..  அங்கிருந்து  உள்ளே போக லோக்கல் பஸ் வரும்.  இல்லேனா  உள்ளே போகிற வேன் ஏதாச்சும் வந்தாலும் ஏறிக்கோ...  ஏ.இ. ஆபிஸ்ன்னு சொன்னேனா,  வாசல்லேயே விட்டுடுவாங்க.." என்றார்.

இதெல்லாம் பற்றித்  தெரியாமலேயே   இருந்திருக்கிறேன்.  அந்த ஆபிஸ்லேயே  விசாரித்திருக்கலாம்.  அதுவும் செய்யாமலேயே    இருந்திருக்கிறேன்.  நல்லவேளை, அய்யங்கார் சொன்னார் என்றிருந்தது.     இப்படி வாழ்க்கை பூரா எத்தனையோ விஷயங்கள்.  ஒவ்வொண்ணும் பாடமாத்  தான் இருந்திருக்கு என்று  இப்பொழுது நினைத்துக் கொள்கிறேன்.

"சுகவனத்துக்கு சொல்லி அனுப்பிச்சிடறேன்.  நீ போய்ட்டு வா.  அந்த வேலையெல்லாம் முடிச்சுட்டு எப்போ வேணா நீ இங்கே வரலாம்.  யதா செளகர்யம்.." என்று சொல்லிக் கொண்டே எழுந்திருந்தார்.  சுகவனம் அவருக்குத் தெரிந்தவர்.  கால் டியூட்டி டைப்பிஸ்ட் மாதிரி.  அய்யங்காருக்கும் வேண்டப்பட்டவர்.  அதனால் அவர் வந்து அய்யங்காருக்கு உதவியாய் இருப்பதில் எந்த சங்கடமும் இருக்காது என்று நினைத்துக் கொண்டேன்.

அந்தக் கடை அறையின்  மூலையிலேயே  ஒரு இரண்டடி உயரத்திற்கு  டெஸ்க் மாதிரி மரப்பெட்டி அய்யங்கார் உபயோகத்தில் இருந்தது.  பக்கத்திலேயே  உட்கார்ந்து பெட்டியைத்  திறப்பதற்கு  வாகாக  ஒரு  சின்ன ஸ்டூல்  போட்டிருக்கும்.  அந்த ஸ்டூலில் போய்  உட்கார்ந்து கொண்டு பூணுலில் கோத்திருந்த சாவியால் பெட்டியைத்  திறந்தார்.  நான் ரோடைப் பார்க்கிற மாதிரி திரும்பிக் கொண்டேன்.

"இந்தா.." என்றார் அய்யங்கார்.  "ஐம்பது ரூபாய் இருக்கு..  இதை வைச்சுக்கோ.." என்றார்.   'இந்த  மாசம் பத்து நாள் போலத் தான் வேலை செஞ்சிருப்பேன்.  மாசச் சம்பளத்தையே கொடுத்திருக்கிறாரே' என்று நினைத்துக் கொண்டேன்.

அய்யங்கார் முதல்லேயே சொல்லி வைத்திருப்பார் போலிருக்கு.  சுகவனமும் வந்தார்.  என்னைப் பார்த்ததும், "என்னடா.. போன விஷயம் என்னாச்சு?.. வேலை கிடைச்சிடுத்தில்லையோ?" என்றார்.

"ஆமாம்.." என்று புன்னகைத்தேன்.

" நீ சூரப்புலிடா.." என்று என்னைத் தட்டிக் கொடுத்தார்..  "அய்யங்கார் சார்.. வேலை கிடைச்சதும் பையன்  முகத்திலே என்ன களை பாருங்க.."

"இப்போத் தான் முதல் தடவையா  கவர்ன்மெண்ட் ஆபிஸ் வேலைக்குப் போறான்.  நீ ரொம்ப அவனை சதாய்க்காதேடா.." என்றார் அய்யங்கார்.

"நான் வரேன், மாமா.." என்று  அய்யங்காரிடம் சொல்லிக் கொண்டு, சுகவனத்தைப் பார்த்து கையாட்டி விட்டு கடைப் படிகளில் இறங்கி ரோடுக்கு  வந்தேன்.

வீட்டுக்குப் போனதும் எல்லோருக்கும் சந்தோஷம்.   இரண்டு நாள் தான் இருக்கு.  இரண்டு  மாச உபயோகத்திற்கு எல்லாத்தையும் எடுத்து வைச்சிக்கணும்.  எங்கே தங்குவேன், என்ன செய்வேன் என்று எதுவும் தெரியவில்லை.  கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது.

 ஞாயிற்றுக் கிழமை சாயந்திரம் வாக்கிலேயே அங்கேப் போய்ச் சேருவது  நல்லது போலிருந்தது.  அப்போத் தான்  பத்து மணிக்குள்ளே வேலையில் சேர முடியும் என்ற நினைப்பு மேலோங்கியது.

கிடைத்திருந்த  வேலை பற்றி இந்த இடத்திலாவது சொல்ல வேண்டும். அரசு வேலைகள் குறித்த ஆணையில்  10 (A) (1) என்று குறிக்கும் பகுதி ஒன்று உண்டு.   இப்பொழுது அமுலில் இருக்கிறதா, தெரியவில்லை.  அரசு அலுவலகங்களில் நிரந்தர வேலை பார்ப்பவர்கள்  நீண்ட விடுப்பு எடுத்திருந்தால்  அவர்கள் பணியைச் செய்ய தற்காலிகமாக அலுவலர் வேண்டி வேலை வாய்ப்பு அலுவலகத்திற்குத் தெரியப்படுத்துவார்கள். வேலை வாய்ப்பு  அலுவலகமோ தங்களிடம்  பதிந்திருப்பவர்களின் பணித் தேவைக்கான தகுதி பார்த்து அந்தந்த அலுவலகங்களுக்கு அனுப்புவார்கள்.  அவர்களை தேர்ந்தெடுத்து உபயோகப்படுத்திக்  கொள்வது அந்தந்த அலுவலகத்தின் வேலை.   வேலை வாய்ப்பு அலுவலகத்தால் அனுப்பப் பட்ட நபரை உபயோகப்படுத்திக் கொண்ட, அவர்களைப் பணி அமர்த்தல், நீக்கல் 
 சம்பந்தப்பட்ட எல்லா விவரங்களின் ஆணைகளில் ஒரு நகல் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கும் அனுப்பப்படும்.   அதனால்  இதெல்லாம் பற்றி வேலை வாய்ப்பகம் தகவல்களை சீறாக நடைமுறைப்படுத்தி வந்ததினால்  எல்லாம் முறைப்படி நடந்தன.

அரசாங்க விஷயங்களில் எந்தவிதமாக அரசியல் தலையீடுகளும் இல்லாத பொற்காலம் அது. 

(வளரும்)
 
            

16 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நான் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தபோது என் பணியாணையின் நகல் தஞ்சையிலுள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதை நான் அறிவேன்.

Bhanumathy Venkateswaran said...

உங்களுக்கு அரசாங்க வேலை கிடைத்ததை படித்ததும் எனக்கே நிம்மதியாக இருந்தது. நல்ல நடை.
//அரசாங்க விஷயங்களில் எந்தவிதமாக அரசியல் தலையீடுகளும் இல்லாத பொற்காலம் அது.// கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. மறுபடியும் அந்த பொற்காலம் வருமா?

கோமதி அரசு said...

//அரசாங்க விஷயங்களில் எந்தவிதமாக அரசியல் தலையீடுகளும் இல்லாத பொற்காலம் அது. //

மகிழ்ச்சி. படிக்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பக்கத்தில் பெரும் தலைவர் காமரஜர் படம் போட்டு இருப்பது
அவர் காலம் அது இல்லையா?
அவர் காலம் பொற்காலம்தான்.

ஜீவி said...

@ Dr. B. Jambulingam A.R. (Retd)

அந்தளவுக்கு அந்நாட்களில் எது நடக்க வேண்டுமோ அதெல்லாம் அரசு ஆணைகளில் சொல்லியபடி முறைப்படி நடந்தன. அதிகாரிகளும் அன்புடன் செயல்பட்டார்கள். அலுவலகங்கள் அங்கு பணியாற்றியவர்களின் கூட்டு ஒத்துழைப்புடன் நியதிப்படி செயல்பட்டன என்பதை அழுத்தமாகச் சொல்லலாம். இதெல்லாம் எங்கே போயிற்று என்று தெரிந்து கொள்ள முடியாத ஏமாற்றம் தான் இன்றைக்கு.

ஸ்ரீராம். said...

நானும் 10 (A) (1)ஆக வேலைக்குச் சேர்ந்தவன்தான். அப்புறம் நிரந்தரம் செய்யப்பட கதை தனிக்கதை! அது வேறு மாதிரி! இடைவெளி இல்லாமல் தொடர்ந்து 240 நாட்களோ ஏதோ வேலை செய்தால் நிரந்தரம் ஆகி விடலாம். நீங்கள் சொல்வதை டென் ஏ ஒன் என்று சொல்வதைவிட லீவ் வேகன்ஸி என்று சொல்வார்கள்!

மேலும் இன்னொரு விஷயம் அரசுப்பணியில் TNPSC மூலமாக சேருபவர்கள் இதில் வரமாட்டார்கள். மற்றவர்கள் பணியில் வந்து ரெகுலரைஸ் ஆகவேண்டும், பின் ப்ரொபெஷன் முடிக்க வேண்டும்... ஒவ்வொரு வருடம்!

ஜீவி said...

@ Bhanumathy Venkateswaran

இது இரண்டு மாதங்களுக்கான தற்காலிக வேலை தான். 10 (A) 1 ஆணைப் பிரிவுபடி இரண்டு மாதங்களுக்கு மேல் பணியாற்ற மூடியாது. இரண்டு மாத பூர்த்தியில் வேலையிலிருந்து நீக்கி அடுத்த நாள் புது உத்திரவு போட்டு அடுத்த இரண்டு மாதங்களுக்கு பணியில் நீடிக்க வைக்கலாம். ஆனால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பணியாற்றுவதற்குரிய நியாயங்கள் (justification) இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து அதற்கான அனுமதி வாங்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகம் அனுப்பிய நபர் தொடர்பான பணி ஆணைகள் அனைத்தையும் வே.வா. அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். தான் அனுப்பிய நபர் எங்கங்கே பணியாற்றுகிறார்கள், அவர்களின் வேலை நியமன நாள், தற்காலிகப் பணியிலிருந்து எப்பொழுது விடுவிக்கப்பட வேண்டும் போன்ற எல்லா விவரங்களின் துல்லிய ரெகார்ட் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உண்டு. எல்லாம் முறைப்படி நடந்தன என்பதை இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரிய கனவாக இருக்கும்.

ஜீவி said...

@ கோமதி அரசு

தொடர்ந்து நீங்கள் வாசித்து வருகையிலேயே அந்தப் பொற்காலத்தின் மகிமை புரியும்.
கவியரசன் கம்பன் சொன்ன மாதிரி கண்ணிழந்தான் பெற்று இழந்த காலம் இது.
வாராது வந்த மாமணியை பறி கொடுத்த காலம் இது. திரும்பி வருவதற்கரிய கனாக் காலம் அது.

இது புலம்பல் அல்ல. ஏன் இப்படி ஆயிற்று என்ற யோசனையை ஏற்படுத்தத் தான். அந்த யோசிப்பு கூட இல்லை என்றால் புத்தம் புதிய எதிர்காலத்தை நம்மால் சமைக்க முடியாது.

G.M Balasubramaniam said...

வாழ்வில் ஓரளவு முன்னேற என்ன வெல்லாம் சந்திக்க வேண்டி இருந்தது என்பதில் நிறைய ஒற்றுமைகள் நமக்குள்

ஜீவி said...

@ ஸ்ரீராம்

நான் விவரித்துக் கொண்டு வருவது 10 A1 பற்றித்தான். நிரந்தரப்பணியாளர்கள் நீண்ட கால விடுப்பில் செல்லும் போது அந்த இடத்திற்கு வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து ஆள் பெறுவார்கள் என்று தெளிவாகச் சொல்லி வருகிறேனே?.. அந்நாட்களில் சம்பந்தப்பட்ட பணி ஆணைகளில் இதை 10 (A) 1 என்று தான் குறித்திருக்கிறார்கள்.
அலுவலகங்களில் 'அவர் 10 A 1 புண்ணியவான்' என்றும் வேடிக்கையாகக் குறிப்பிடுவார்கள்.

எந்தப் பிடித்தமும் இல்லாமல் முழு சம்பளமும் பெற்றதால் புண்ணியவான்கள் ஆனோம்.

TNPSC--க்கு இன்னும் போகவே இல்லை. அடுத்து தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி வேலை வாய்ப்பு பெற்றதைப் பற்றியும் சொல்லப் போகிறேன்.

1959 மார்ச்சில் பள்ளி இறுதி வகுப்பை முடித்தவன் 1963 ஜூலை வரைக்குமான இடைப்பட்ட காலத்தில் என்னன்ன பணி வாய்ப்புகள் எல்லாம் என் வாழ்க்கையில் குறுக்கிட்டன எனபதைப் பற்றி விவரமாக சொல்கிறேன்.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

அப்படியா, ஐயா! சிந்திய வியர்வைத் துளிகளின் வாசம் புரிகிறது. தங்கள் மனம் நிறைந்த பகிர்தலுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஜீவீ சார் படிக்கப் படிக்கப் பிரமிப்பாக இருக்கிறது.போகும் இடத்தைப் பற்றிக் கேட்காமல் இருந்ததில் அதிசயம் இல்லை. சின்ன வயதுதானே.

அந்த வேலை கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.
வரும் நாட்களும் சௌகர்யமாக இருக்க வேண்டும்.

ஜாப் டைப்பிங்க் அய்யங்கார் பற்றிப் படிக்க சந்தோஷம். நல்லவர்கள் நிறைந்த காலம்.
சேலத்தில் சுகவனங்கள் நிறைய இருப்பார்கள். காமராஜர் தோற்றபோதே நம்
தமிழகம் பாதிக்கப் பட்டது.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

எஸ். சின்ன வயசு நிகழ்வுகளை அப்போதைய சின்ன வயசு நினைப்புகளூடையே இப்பொழுது எழுதுகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக அனுபவங்களின் அடிப்படையில் வளர்ச்சி ஏற்படுவது வாசிப்பவருக்கும் தெரிகிற மாதிரி நிகழ்வுகள், உரையாடல்கள், யோசிப்புகள் எல்லாம் அமையும். எனது அன்றைய அரசியலிருந்து இன்றைய அரசியல் வரை ஒரு பயணமும் நிகழும்.

சேலத்தின் தெய்வமே சுகவனேஸ்வரர் தானே!..

நீங்கள் நல்லவர்கள் நிறைந்த காலம் என்று சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.
நல்ல மனிதர்களின் மனவிசாலங்கள் நல்லதையே விளைச்சல் காணுவதாக இருந்தது.
முக்கியமாக தேசம் ஒன்று என்று நினைத்த காலம். பிரிவினைச் சிந்தனைகள் ஜனக்கூட்டத்தைப் பிரிக்காதிருந்த காலம்.

சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற தலைவர்கள் தாங்கள் கண்ட கனவுகளின் நிகழ்வுகளாக நாட்டை சமைப்பதில் அக்கறை கொண்ட காலம். காமராஜர் கூட ஒரு காலத்தின் அடையாளச் சின்னம் தான். தெளிவாகச் சொல்லப் போனால் அவர், அவர் காலத்தின் பிரதிநிதி. சுதந்திரப் போராட்ட சிறை வாசங்களிலிருந்து முகிழ்த்து வெளிவந்த
மலர். அவர் அடைந்த துயரங்கள் அவருக்குத் தான் தெரியும். வெள்ளையர் ஆதிக்கத்தில் எதற்காக சிறையேகினாரோ, அதற்கான விளைச்சல்களை சுதந்திர இந்தியாவில் சமைக்க அவருக்கே வாய்ப்புகள் அமையும் போது மனத்தை விரோதித்துக் கொண்டு வேறு விதத்தில் அவரால் செயல்பட்டிருக்க முடியாது. இதுவே உண்மை. அந்த உண்மைக்கான போராட்டமாகத் தான் கடைசி வரை அவர் வாழ்வு அமைந்து விட்டது.

வே.நடனசபாபதி said...

//அரசாங்க விஷயங்களில் எந்தவிதமாக அரசியல் தலையீடுகளும் இல்லாத பொற்காலம் அது.//

இப்போதாக இருந்தால் அந்த 10(A )(1) பணி நியமன ஆணையைக்கூட முதலமைச்சர் கையால் கொடுத்து விளம்பரப்படுத்தியிருப்பார்கள்.

புதிய இடத்திற்கு எப்படிப் போய் சேர்ந்தீர்கள்? அங்கு ஆற்றிய பணி பற்றியும், சக ஊழியர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு பற்றியும் அறிய ஆவல்.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

இலவச டிவியில் ஆரம்பித்தது; இன்னும் விடியவில்லை.

அடுத்த பகுதி அது தான் சார்.. தொடர்கிறேன். நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

//அரசாங்க விஷயங்களில் எந்தவிதமாக அரசியல் தலையீடுகளும் இல்லாத பொற்காலம் அது//
என்ன அருமையான காலம் அது. இப்போதைய தமிழ்நாட்டின் காலத்தை நினைத்தால் மனம் சோர்ந்துதான் போகிறது. இப்போது இப்படியானதற்குக் காரணங்கள் பல சொல்லலாம்.

உங்களின் தற்காலிக வேலை அப்புறம் என்ன ஆனது? இந்த வேலையில் என்ன அனுபவம், ரிசர்வாயர் எப்படி இருந்தது? என்பதை அறிய மிகுந்த ஆவல். அடுத்த பகுதிக்குச் செல்கிறேன்

கீதா

ஜீவி said...

@ தி. கீதா

அதை இரண்டு பகுதிகளில் முடித்து விடலாம் என்றிருக்கிறேன்.

தொடர்ந்து வாருங்கள், சகோதரி!

Related Posts with Thumbnails