மின் நூல்

Sunday, May 12, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                          24


ஸ் கண்டக்டரிடம் முன் கூட்டியே சொல்லி   வைத்திருந்து  கிருஷ்ணகிரி  அணைக்குப் போகும் குறுக்குப் பாதை அருகில் மெயின் ரோடிலேயே இறங்கிக் கொண்டேன்.  கையில்  அந்தக் கால டிரங்க் பெட்டி.

சிறிது நேரத்தில் கிருஷ்ணகிரி பக்கமிருந்து ஒரு டவுன் பஸ் வந்து குறுக்குப் பாதையில் நின்றது.  கிருஷ்ணகிரி  டேம் (DAM) என்று  எழுதியிருந்ததை கவனித்து ஏறிக் கொண்டேன்.   வெளியே பார்த்துக் கொண்டே வந்தேன்.    பத்து நிமிஷப் பயணத்தில்  துணைப் பொறியாளர் அலுவலக வாசலிலேயே பஸ் நிற்பதைக் கவனித்து திடீரென்று மனத்தில் கிளைத்த ஒரு  குட்டி சந்தோஷத்துடன் இறங்கிக் கொண்டேன்.

அப்பொழுது  மாலை  சுமார் ஆறு மணி இருக்கும்.  இருட்டு கவிவதற்கு  அப்பொழுதே முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

உள்ளே நுழைந்த என்னைப் பார்த்ததும் உள் பக்கமிருந்து ஒருவர் வேகமாக என்னை நோக்கி வந்தார்.  "யார் சார் வேணும்?"

விஷயத்தைச் சொன்னேன்.  "அப்படியா?" என்றவர் "நான் தான் இங்கே ஆபீஸ் ப்யூன்,  தோட்டக்காரன் எல்லாம்.." என்றார்.  "சாப்பிட்டாச்சா, சார்?"

'இல்லை.. இனிமேல் தான்.."

"அப்போ சீக்கிரம் வாருங்கள்.  கேண்டீன் மூடி விடுவார்கள்.." என்று என்னை துரிதப்படுத்தி என்னிடமிருந்து டிரங்க் பெட்டியை வாங்கிக் கொண்டார்.

அலுவலத்திற்குள் நுழைந்து  முன் பக்கமிருந்த ஒரு அறையில் என் பெட்டியை வைத்து விட்டு அறையை தன்னிடமிருந்த சாவிக்கொத்தை எடுத்து பூட்டினார்.  "வாங்க, போலாம்.."

'நல்லவேளை.. எங்கேயும் அலைய வேண்டாம்.  இங்கேயே காண்டீன் இருப்பது  செளகரியம் தான்'  என்று நினைத்துக் கொண்டே அவருடன் பேச்சுக் கொடுத்தபடியே போனேன்.

கொஞ்ச தூரம் நடந்து திரும்பியதும்  காம்பவுண்டுக்குள்ளேயே ஒதுக்குப் புறமாக ஓரிடத்தில் இருந்தது காண்டீன்.  அதை ஒட்டி சின்னதாக ஒரு குடிசை வேறே.

நாங்கள் போனதும், "சார்  தான் நம்ப ஆபிசுக்குப் புதுசா வந்திருக்கிறவர்" என்று அங்கு வாட்ட சாட்டமாக நின்று கொண்டிருந்த ஒருவரிடம் சின்னசாமி -- ப்யூன் பெயர்-- அறிமுகப்படுத்தினார்.

"வணக்கம், சார்.." என்றார் அவர்.  நானும் வணக்கம் சொன்னேன்.

"இன்னும் கொஞ்ச நேரம் கழித்து வந்திருந்தீர்கள் என்றால் ஒன்றும் இருக்காது..  அஞ்சு மணிக்கெல்லாம் ஆபீஸ் மூடிறாங்க, இல்லையா?" என்றார் அவர்.  "என்ன சாப்பிடுறீங்க..?"  என்ன இருக்கு என்று கேட்டு தோசை மட்டும் போடச் சொல்லி சாப்பிட்டேன்.  தொட்டுக்க அவர் போட்ட வெங்காய சட்னி  காரமாக இருந்ததால் ஒதுக்கி வைத்து விட்டேன்.  சின்னசாமி தனக்கு ஒன்றும் வேண்டாம் என்றார்.  வற்புறுத்தியதில் ஒரு டீ மட்டும் குடித்தார்.

"எங்கே தங்கப் போறீங்க?..  பேச்சுலரா?..   அப்படின்னா ஆபிஸ்லேயே தங்கிக்கலாமே?..   எதுக்குச் சொல்றேன்னா, இங்கேயே எல்லாம் இருக்கு..  கிருஷ்ணகிரி போய் வருவது தேவையில்லை.  அங்கே ரூம் எடுத்தீங்கன்னா  அது வேறே செலவு.." என்று எல்லாம் சொல்லி விட்டு, "பாத்து செய்யுங்க.." என்றார் கேண்டீன் உரிமையாளர்  ஜவஹர்லால்.. நல்ல பெயரில்லை?..  அவர் அப்பா காங்கிரஸ் காரராம்.  அதனால் அப்படி பெயர் வைத்தாராம்.  "எனக்கு ஒரு மகன் மட்டுமே.."  என்று சொசுறு தகவலையும் சொன்னார்.

"உங்க பையனுக்கு நீங்க என்ன பேர் வைச்சிருக்கீங்க?.." என்று ஒரு எதிர்ப்பார்ப்போடு  கேட்டேன்.   அந்தக் கால வழக்கப்படி நெடுஞ்செழியன், மதியழகன் என்று ஏதாவது இருக்கும் என்ற எண்ணமும் மனசுக்குள் ஓடியது.

"என் பையனுக்கங்களா?.." என்று கேட்டவர், "லால்பகதூர்ன்னு பேர் வைச்சிருக்கேன்..." என்று இலேசாக புன்முறுவலித்துச் சொன்னார்.

மொத்தத்தில் அவர் ஒரு வித்தியாசமான நபராகத் தென்பட்டார்.  போகும் போது  "இங்கே தானே ஆபிஸ்லே தங்கப் போறீங்க.. காலைலே எட்டு மணிக்கெல்லாம் இட்லி கிடைக்கும்" என்றார்.

"அப்படியா?.. வந்திடறேன்.." என்று கிளம்பினேன்.

என்  டிரங்க் பெட்டியை  வைத்து பூட்டிய அறைக்கு சின்னசாமி என்னைக்  கூட்டிக் கொண்டு போனார்.  அறைக்கதவை திறந்தார்.   உள்ளே போய்ப்  பார்த்ததில் அறை  கொஞ்சம் விசாலமாகத் தான் தெரிந்தது.  "இந்த அறையை என் உபயோகத்துக்காகத் தான்  கொடுத்திருக்காங்க.. நீங்க இங்கேயே தங்கிக்கலாம்.." என்றார்.   அவர் குடும்பம் கிருஷ்ணகிரியில் இருப்பதாக ஏற்கனவே சொல்லியிருந்தார்.

"அப்போ உங்களுக்கு?"

"நான்   நைட் டூட்டி  தானே? வெளிப்பக்கம் தான் இருப்பேன்.  ஆபீஸ் சம்பந்தப்பட்டவங்க அகால நேரத்லே வந்தாங்கன்னாலும் இந்த அறையைக் கொடுக்கறது வழக்கம்.  பெரிய ஆபிஸர்ல்லாம் தங்கறத்துக்கு சூட் இருக்கு. வேறே தொந்தரவு ஏதும் இல்லே. அதுனாலே நீங்க இங்க இருக்கப் போற ரெண்டு மாசமும் இங்கேயே தங்கிக்கலாம்.  அந்த மூலைலே பாத்ரூம்லாம்  கூட இருக்கு.." என்றார்.. 
 அவர் சொன்னது எனக்கும் பிடித்திருந்தது.  "சரி.." என்றேன்.

வெளியே வந்தோம்.   அலுவலகத்தைச் சுற்றி பிர்மாண்டமான தோட்டம்.  சாயந்தரம் வரும் பொழுதே பார்த்துக் கொண்டேன்.   நிறைய  செடி கொடிகள்.  குரோட்டன்ஸ் பூத்துக் குலுங்கியது.  "பிரமாதமாய்  மெயிண்டைன்
பண்ணுகிறீர்கள், சின்னசாமி.." என்றேன்.

"பெரிய ஆபிஸரும் இதைத்  தான்  சொல்வார், சார்.." என்று சின்னசாமி முறுவலித்தார்.

அவரைப் பற்றிச் சொன்னார்.  அவர் குடும்பம், குழந்தைகள்  பற்றிச் சொன்னார்.    இரண்டும் ஆண் பிள்ளைகள்.  பெரியவன் ஆறாவது,  சின்னவன் நாலாம் வகுப்பு.  இரண்டு மணி நேரப்  பழக்கத்தில் என்னை மிகவும் பிடித்துப் போய் விட்டது என்றார்.

"அப்படியா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

"ஆமாம், சார்.. எங்களமாதிரி சப் ஸ்டாப்  கிட்டே இப்படி அன்பா யாரும் பழக மாட்டாங்க, சார்.."

"சின்னசாமி!  நான் இன்னும் வேலைலேயே ஜாயின் பண்ணலே..  அதுவும் வெறும் டெம்பரவரி ஆசாமி..."

"இருக்கட்டுமே, சார்! எப்படியாயிருந்தா என்ன? மனுஷாளுக்குள்ளே அதெல்லாம் முக்கியமில்லே, சார்.."

சின்னசாமி எப்படி அப்படி ஒரு முடிவுக்கு வந்தார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் எனக்கிருந்தது. "இப்போத்  தான்  வந்திருக்கேன்.. அதுக்குள்ளே சொன்னா எப்படி?" என்று கொக்கி போட்டேன்.

"அதெல்லாம் பாத்தாலே தெரியும் சார்.." என்று ஒரே வரியில் சின்னசாமி முடித்துக் கொண்டார்.

இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன்.  எத்தனை  வருஷங்களுக்கு முன்னால்  முழுசாக நான் உருவாவதற்கு   முன்னேயே  எனக்கே தெரியாத எதிர்கால  என்னை  சின்னசாமி மனசில் படம் பிடித்துப் பார்த்து விட்டார் என்று வியப்பாகத் தான் இருக்கிறது.

(வளரும்)

18 comments:

ஸ்ரீராம். said...

அவர் பெயர் ஜவஹர்லால் ...

அட! பையன் பெயர் லால்பகதூர்!

அடடே...

அலுவலகத்திலேயே தங்கிக்கொள்ள வசதி என்பதும் சௌகர்யம். துணைக்கு ஆளும் கிடைத்து விட்டது...

எனக்கும் வாய்த்தது இதெல்லாம்...

கோமதி அரசு said...

"நான் தான் இங்கே ஆபீஸ் ப்யூன், தோட்டக்காரன் எல்லாம்.." என்றார். "சாப்பிட்டாச்சா, சார்?"//

அருமையான அன்பான விசாரிப்பு.

கேன்டீன் வைத்து இருப்பவர் அதற்கு மேல்.
அன்பானவர்களுக்கு உலகமே அன்புமயமானது.

அருமையான நினைவலைகள்.

வல்லிசிம்ஹன் said...

நல்ல எதிர்காலத்தை சின்னசாமி சார் எடுத்துக் காட்டி விட்டார்.
எல்லாம் நல்லபடியாக அமைந்தது மகிழ்ச்சி.

அடுத்த நாள் காலைக் காப்பிக்குக் காண்டீன் போக வேண்டுமா. நல்ல நினைவலைகள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அனுபவங்கள்.... அன்பு சூழ் உலகு.

சில நாட்களாக வலையுலகம் பக்கம் வர இயலாத சூழல். விடுபட்ட பதிவுகளை படிக்க வேண்டும்.

வே.நடனசபாபதி said...

//இரண்டு மணி நேரப் பழக்கத்தில் என்னை மிகவும் பிடித்துப் போய் விட்டது என்றார்.//
//எங்களமாதிரி சப் ஸ்டாப் கிட்டே இப்படி அன்பா யாரும் பழக மாட்டாங்க, சார்.."//
'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.' என்ற பழமொழி திரு சின்னசாமிக்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் முதல் பார்வையிலேயே உங்களை அறிந்துகொண்டார் என நினைக்கிறேன். நாம் பாகுபாடின்றி எல்லோரிடமும் பழகினால் உதவிகள் கேட்காமலே வரும் என்பது தங்களின் அனுபவம் சொல்கிறது.

தங்களின் அலுவலகப் பணி பற்றியும், அலுவலக வாசம் பற்றியும் அறிய காத்திருக்கிறேன்.

நெல்லைத்தமிழன் said...

ரொம்ப இண்டெரெஸ்டிங் ஆகச் செல்கிறது. நாமே கடந்த வாழ்க்கையை அசைபோடும்போது எத்தனையோ நல்ல விஷயங்களும் அல்லனவைகளும் வந்து நம் மனதில் மோதும்... முட்டுச் சந்தில் இருக்கும்போது தனக்கு வழிகாட்டியவர்கள்/வழிகாட்டிய எண்ணங்கள் எல்லாம் வந்து போகும்.

தொடர்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

என்ன அன்பான விசாரிப்பு உபசரிப்பு கேண்டீன் ஜவஹர்லாலும் சரி சின்னசாமியும் சரி! அன்பான மனிதர்கள்.

ஜவகர் அவர் மகனுக்கு வைத்த பெயர் லால்பகதூர் என்பதும் அட போட வைத்தது!
அலுவலகக் கட்டிடத்திலேயே தங்கிக் கொள்ளலாம் என்றால் சௌகரியாம் தான் இல்லையா அதுவும் கேண்டீனும் உள்ளேயே இருக்கிறது வசியாகிப் போச்சு.

உங்கள் எதிர்காலம் பற்றி சின்னசாமி ஒரே வரியில் சொல்லிவிட்டாரோ.

ரொம்பவே ஸ்வாரஸியமாக போகிறது. அடுத்த பகுதி என்ன என்று அறிய ஆவலுடன்.

கீதா

Bhanumathy Venkateswaran said...

//எத்தனை வருஷங்களுக்கு முன்னால் முழுசாக நான் உருவாவதற்கு முன்னேயே எனக்கே தெரியாத எதிர்கால என்னை சின்னசாமி மனசில் படம் பிடித்துப் பார்த்து விட்டார் என்று வியப்பாகத் தான் இருக்கிறது. எளிய மனிதர்களுக்கே உள்ள திறமை இது. நினைவலைகள் ஸ்வாரஸ்யமாக செல்கிறது.

ஜவஹர்லால், லால்பகதூர் பெயர்கள் ஒரு கேள்வியை எழுப்புகிறது. இப்போதெல்லாம் ஏன் யாரும் அரசியல் தலைவர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைப்பதில்லை?

எஸ்.ஏ.பி. யின் மகன் பெயர் கூட ஜவஹர் என்று நினைக்கிறேன். எங்கள் அப்பா அவருடைய சிறு வயதில் ஜவஹர் யூத் கிளப் என்று ஒன்று ஆரம்பித்து அதற்கு தலைவராக இருந்தாராம். என் சிறு வயதில் நேருவின் பெரிய படம் ஒன்று எங்கள் வீட்டு ஹாலை அலங்கரித்துக் கொண்டிருந்தது நினைவில் இருக்கிறது. //
ஜீவி said...

@ ஸ்ரீராம்

//எனக்கும் வாய்த்தது இதெல்லாம்...//

எனக்கு வாய்க்கவில்லையே, ஸ்ரீராம்!

ஜீவி said...

@ கோமதி அரசு

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?.. வள்ளுவ பெருமானின் வாய்ச்சொல் பொய்த்ததில்லை. அது எக்காலத்துக்கும் பொருத்தமானது தான்.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

அடுத்த அத்தியாயத்தை இனிமேல் தான் எழுத வேண்டும்.
எழுத ஆரம்பிப்பதற்குள் ஏகப்பட்ட யோசனைகள்.
இருந்தாலும் உண்மையைச் சொல்லித் தானே ஆக வேண்டும்?
சொல்கிறேன்.

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜ்

எங்கே காணோம் என்று நானும் எதிர்ப்பார்த்துக் கொண்டு தான் இருந்தேன்.

நீங்கள் வாசிக்கத் தொடங்கியிருப்பதற்கு மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள்.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

//தங்களின் அலுவலகப் பணி பற்றியும், அலுவலக வாசம் பற்றியும் அறிய காத்திருக்கிறேன்.//

அடுத்த அத்தியாயத்திற்கான பொருள் அது தான் சார்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//ரொம்ப இண்டெரெஸ்டிங் ஆகச் செல்கிறது.//

இண்டெரெஸ்டிங்காக சொல்வதால் இருக்கலாம். அது தான் எஸ்.ஏ.பி. கற்றுத் தந்த பாடம்.

எனக்கேற்பட்ட அனுபவங்கள் என்றாலும் சொந்த விஷயமாக அணுக்காத கோணத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்டபடியால் எல்லாவற்றையும் விலகியிருந்து பார்க்கக் கூடிய பேறு கிடைத்திருக்கிறது. இனி வரப்போகின்ற விஷயங்களை என் சம்பந்தப்படுத்தாமல் என்னையும் உங்களில் ஒருவனாகக் கொண்டு மூன்றாம் மனித கோணத்தில் அலச ஆரம்பித்தீர்கள் என்றால் இந்தத் தொடரை வாசிப்பதில் வேறு சில சிந்தனைகளைக் கூட நீங்கள் கொள்ளலாம். அப்படியாக உங்கள் யோசிப்புகளைக் கிளறும் விஷயங்களை பகிர்ந்து கொண்டால் வேறு சில எல்லைகளை நாம் தொடலாம்.

தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

ஜீவி said...

@ தி.கீதா

அடுத்த பகுதியிலோ அல்லது அதற்கடுத்த பகுதியிலோ நீங்கள் கேட்டிருக்கிற வினாக்களுக்கு விடை கிடைக்கும். கொஞ்சமாக நடப்பு அத்தியாயத்தைத் தொட்டு விட்டீர்களே! பிரமாதம்!

ஜீவி said...

@ பானுமதி. வி.

ஆமாம். அவரின் மகன் பெயர் ஜவஹர் தான்.

வழக்கமாக குமுதத்தில் தலையங்கம் எழுதுவது எஸ்.ஏ.பி. அவர்கள் தான்.
ஜவஹர்லால் மறைந்த பொழுது எழுதிய தலையங்கத்தில் 'அவர் காலமாகி விட்டார்' என்ற
சாதாரணமாகச் சொல்லும் இரங்கல் வார்த்தையை அவர் 'காலம் ஆகி விட்டார்' (ஆவர் காலமாகவே ஆகிவிட்டாற் போல) என்று பொருள் பொதிந்த வார்த்தையாக எழுதியிருப்பார்.

அந்த நேரத்தில் 'ரோஜாவின் ராஜா' என்று கண்ணதாசன் ஓர் அற்புதமான கவிதையை ஜவஹர்லாலுக்குக் காணிக்கையாக்கியிருந்தார்.

பின்னாளைய வாலிபர் சங்கம் தான் அந்நாளைய யூத் கிளப். சரித்திரத்தில் சிலருக்கு மட்டும் ஒருவிதமான வசீகரத்தன்மை அமைந்து விடுகிறது. மக்களின் ஏகோபித்த அபிப்ராயம் இருப்பதாலேயே அவர்களுடன் அவர்களுக்கான வசீகரம் வாழ்கிறது.

//இப்போதெல்லாம் ஏன் யாரும் அரசியல் தலைவர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைப்பதில்லை? //

நல்ல கேள்வி.

அரசியல் தலைவர்கள் என்று மக்கள் ஏற்றுக் கொண்டவர்கள் இருந்த அறை காலியாகி விட்டது. நம் யுகத்திலேயே நமக்குத் தெரிந்த பல தலைவர்கள் பற்றிய நினைப்பு வெகுஜனங்களின் மனத்தில் இல்லாமல் காணாமல் போக்கி விட்டார்கள். இளைய தலைமுறைக்கு அவர்கள் பற்றிய அறியாமை திட்டமிட்டே வளர்க்கப்படுகிறது.. .
இதற்குக் காரணங்கள் பல.

இருந்தவர்களின் வீச்சும் இப்பொழுது இருப்பவர்கள் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு உச்சம் கொண்டிருந்தது அடுத்த தலைமுறை தலைவர் இன்மைக்குக் காரணமாகவும் இருக்கப் போகிறது.

//என் சிறு வயதில் நேருவின் பெரிய படம் ஒன்று எங்கள் வீட்டு ஹாலை அலங்கரித்துக் கொண்டிருந்தது நினைவில் இருக்கிறது. //

அது ஒரு பெரிய ஓவல் சைஸ் வட்டத்திற்குள் இருந்த நேருஜியின் புகைப்படமா?

இந்தியன் காபி ஹவுஸின் எல்லாக் கிளைகளிலும் நேருவின் பெரிய சைஸ் புகைப்படம் ஒன்று மாட்டப்பட்டு இருக்கும். பார்த்திருக்கிறீர்களா?..

G.M Balasubramaniam said...

இளவயதில் வேலைக்காக காத்த்ருந்ததும் அது சார்ந்த நினைவுகளுமா உங்கள் வசந்தகாலம்

ஜீவி said...

@ ஜிஎம்பீ

வசந்த காலத்திற்கு இட்டுச் சென்ற ஏணிப்படிகள் இவை. ஏணிப்படிகளில் ஏறாமல் வாழ்க்கையில் ஏற்றமில்லை.

Related Posts with Thumbnails