மின் நூல்

Sunday, May 26, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                     29


ஞாயிற்றுக் கிழமை மாலையே குமார பாளையம் போய்ச் சேர்ந்து விட்டேன். குருசாமி பாளையம்  மாதிரியே அதுவும்  போஸ்ட் மாஸ்டர் வீடு அட்டாச்டு தபால் அலுவலகம் தான். ஆனால் பத்து மடங்கு பெரிசாய் பெரிய ஹாலுடன் ஆறேழு கவுண்ட்டர்களுடன் பிரமாதமாக இருந்தது.   நான் போனது  ஞாயிற்றுக் கிழமையாதலால் போஸ்ட் மாஸ்டர் அவர் வீட்டில் இருந்தார்.    நல்ல வேளை அலுவலகத்தில்  டெலிகிராபிஸ்ட் இருந்தார்.  அவர் என்னிடம் விவரங்களை விசாரித்ததும்  "பெட்டியை வைத்து விட்டு சாப்பிட்டு வாருங்கள்; பக்கத்திலேயே தான் ஓட்டல் இருக்கிறது.  நான் இரவுப் பணி தான். இன்று இங்கேயே தங்கிக் கொள்ளலாம்" என்றார்.

அவர் சொன்னபடியே  பெட்டியை உள் பக்கம்  வைத்து விட்டுக் கிளம்பினேன்  ஐந்து நிமிட நடையில்  ராமாஸ் கேப் என்று  உயர்தர சைவ ஓட்டலைப் பார்த்து உள்ளே  நுழைந்தேன்.   இட்லி, ரவா தோசை, காப்பி என்று அருமையான சிற்றுண்டி கிடைத்தது.  இந்த ராமாஸ் கேப் என் நினைவில் பதிந்த ஓட்டல்.   எனது பல கதைகளில் இந்த  ஓட்டலை கதை ஓட்டத்திற்குப் பொருந்துகிற மாதிரி பொருத்திப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.    எனது 'கனவில் நனைந்த  நினைவுகள்'  குறுநாவலில் கூட    இந்த ஓட்டல் பற்றி வரும்.

குமாரபாளையம் சேலத்தின் கடைக்கோடியில் இருக்கும் ஊர்.  பக்கத்தில் தான் பவானி.  பவானி என்றதும் சங்கமேஸ்வரர் கோயில்,  கூடுதுறை  எல்லாம் உங்கள் நினவுக்கு வரும்.   குமார பாளையத்தையும் பவானியையும் இணைக்கிற மாதிரி ஒரு பாலம் உண்டு.  பாலத்தின் கீழ்  காவிரி.   காவிரியின் ஒரு பக்க கரை குமாரபாளையத்திலும் மறுபக்கக் கரை பவானியிலும் இருக்கும்.  குமார பாளையம் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தும் பவானி கோவை மாவட்டத்தைச் சேர்ந்தும் அந்த நாட்களில் இருந்தது.

இரவு தங்கல்  தபாலாபீஸில்.  அடுத்த நாள் காலையில் போஸ்ட் மாஸ்டரிடம் கடிதம் கொடுத்து பணியில் சேர்ந்தேன்.  போ.மா. பெயர் சுலைமான்.  வெகு சாதாரணமாக இயல்பாய் பழகுகிறவர் மாதிரி பார்வைக்குத் தெரிந்தார்.  பத்துக்கு மேற்பட்ட தபால்காரர்கள்.  அவர்களில் மிக வயதானவர் போல தோற்றமளித்த ஒருவருடன் என்னைச் சேர்ந்து   பணியாற்றச் சொன்னார்.   பெரியவரின் பெயர் மாணிக்கம் என்று   பின்னால் தெரிந்தது.   டெலிவரிக்காக பஸ்ஸில் வந்திறங்கிய தபால் பைகளை  பேக்கர் பிரித்துப் போட்டார்.  மொத்த தபால்களையும்  பெரிய  பெரிய மேஜைகளில் மேல் பரப்பினர்.  ஒரே ஒரு பையை மட்டும் போஸ்ட் மாஸ்டர் முன்னிலையில் பிரித்து அதிலிருந்த சிவப்பு நிற  பையை எடுத்து போஸ்ட் மாஸ்டர் மேஜையின்  மேல் வைத்தார்.  கணக்காளர்  சுப்பிரமணியன் அந்தப்  பையை எடுத்து மேலோட்டமாக சோதித்து விட்டு தனியாக தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த மேஜையின் மேல் வைத்துக் கொண்டார்.

பைகளிலிருந்து பிரித்துப் போட்ட கடித உறைகள் கிட்டத்தட்ட ஐநூறுக்கு மேலிருக்கும்.   மாணிக்கம் என்னை அழைத்து இந்தக் கடிதங்களில் போஸ்ட் பாக்ஸ் நம்பர் போட்டிருக்கிற கடிதங்களை மட்டும் தனியாகப் பிரிக்க வேண்டும் என்றார்.  நானும் அவரும் சேர்ந்து அந்த வேலையைச் செய்தோம்.
அப்படி போஸ்ட் பாக்ஸ் எண் போட்டிருந்த கடிதங்கள் மட்டும் இருநூறு இருந்திருக்கும். 

போஸ்ட் ஆபிஸிற்கு உள்ளடங்கிய வெளித்திண்ணையில்   லாக்கர் மாதிரி   எண்கள் பொறித்திருந்த   நிறைய ஸ்டீல் பீரோக்கள் இருந்தன.     ஒரு பீரோவிற்கு ஏறத் தாழ இருபது லாக்கர்கள் தேறும்.  அந்த மாதிரி ஆறு பீரோக்கள்.  ஆக 120 போஸ்ட் பாக்ஸ் எண்கள்.  சேலம் மாவட்டத்திலேயே சேலம் தலைமை அஞ்சலகத்திற்கு அடுத்தபடி போஸ்ட் பாக்ஸ்கள் அதிகம் இருந்த தபாலாபீஸாக குமாரபாளையம் தபாலாபீஸ் அந்நாட்களில் திகழ்ந்தது.

பூட்டப்பட்டிருந்த ஒவ்வொரு லாக்கரின் மேல் பகுதியில் ஒரு கடித உறையைப் போடுகிற அளவில் துவாரம் இருந்தது.  கையிலிருந்த  கடிதக் கற்றையின் மேலேக் குறிப்பிட்டிருக்கும் போஸ்ட் பாக்ஸ் எண் பார்த்து அதே எண்ணுள்ள லாக்கரின் அந்த துவாரத்திற்குள் செருக வேண்டும்.  இது தான் வேலை..  குழந்தையும் செய்து விடும் என்று கருதுகிற மாதிரி சுலபமாகத் தான் தெரியும்.  ஆனால் மிகுந்த பொறுப்பும் செயலாற்றலும் இந்தப் பணிக்குத் தேவை என்று போகப் போகத் தெரிந்து கொண்டேன். 

காலை எட்டு மணி சுமாருக்கு போஸ்டல் வேன் வந்து  கித்தான்  பைகளை டெலிவரி செய்ததும் தபால்களை உத்தேசமாக போஸ்ட் பாக்ஸ் எண் வரிசைப்படி அடுக்கிக் கொண்டு  அவற்றை எட்டரை மணிக்குள் அந்தந்த போஸ்ட் பாக்ஸ் லாக்கருக்குள் போட்டு விட முடியாது.   22-ம் எண்ணுள்ள போஸ்ட் பாக்ஸ் ஒரு பக்கம் அடுத்த கடித 54-ம் எண் போஸ்ட்   பாக்ஸ் வேறிடம் என்று  இருக்கும்.  அவசரத்தில் அடுக்கிக் கொள்வதில் சில சமயங்கள் வரிசை எண்கள் மாறிப் போயிருக்கும்.  கடைசியில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஓடிக் கொண்டிருக்க  வேண்டியது தான்.   ஒன்பது மணிக்கெல்லாம் தங்கள் போஸ்ட்  பாக்ஸில் இருக்கும் தபால்களை எடுத்துக் கொள்வதற்கு ஆட்கள் வந்து விடுவார்கள்.   சில நேரங்களில் எப்பொழுதுடா வெளிக்கதவைத் திறப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் வெளியே கடைப் பையன் சைக்கிளில் காலூன்றிக்  காத்திருப்பார்கள்.

மாணிக்கத்திற்கு  எந்த  இடத்தில் எந்த   எண்ணுள்ள போஸ்ட் பாக்ஸ் இருக்கிறது  என்பது மனப்பாடம்.  அதே மாதிரி கடைகளின்   போஸ்ட் பாக்ஸ் எண்களும் தலைகீழ்ப் பாடம்.  மாணிக்கம் என்னிடம் "நான்கு நாட்கள் உங்களுக்குப் பழக்கம் ஆவதற்காக நான் கூட இருக்கிறேன்..  அப்புறம் நீங்கள் தான் தனியாகச் செய்ய வேண்டும்.." என்று சொல்லியிருந்தார்.  ஆகவே ஓரளவு  போஸ்ட் பாக்ஸ் எண்ணிட்ட அத்தனை கடிதங்களையும் வரிசை எண்படி அடுக்கிக் கொள்ள வேண்டும்,  அதை அந்தந்த போஸ்ட் பாக்ஸ்களில் கவனமாக நுழைத்து விட வேண்டும் என்பதை உன்னிப்பாக  கவனித்துக் கொண்டிருந்தேன்.

ஒன்பதுக்குள் இந்த வேலையை முடித்து விட்டு லாக்(G) புக்கில் கையெழுத்திட்டு விட்டு  காலை உணவு  முடித்து விட்டு    பதினோரு மணி  வாக்கில் அலுவலகம் வந்தால் போதும்.  வந்ததும் வெளியே இருக்கும் தபால் பெட்டியிலுள்ள கடிதங்களை   எடுத்துக் கொண்டு வந்து  Sort  பண்ண வேண்டும்.   மர அலமாரி போன்ற அமைப்பில்  பெரிய அளவில் அறை போல தடுப்புகள் இருக்கும்.  இதை பீஜன் ஹோல்கள் என்று சொல்வார்கள்.  அந்த தடுப்பின் மேல்  எந்தப் பகுதிக்கான 'தபால் பிரிப்பு அது'  என்று எழுதியிருக்கும். 

குமார பாளையத்திலிருந்து ஆத்தூர் என்ற இடத்திற்கு ஒருவர் கடிதம் போடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அந்தக் கடிதம் நேரடியாக ஆத்தூருக்குப்  போகாது.  சேலம் மாவட்டத்திலேயே இருக்கும்  ஒரு நகராட்சி ஆத்தூர் என்பதினால் சேலம் தலைமை அஞ்சலகத்திலிருக்கும் DSOக்கு (District Sorting Office)  சென்று அங்கிருந்து ஆத்தூருக்கான  கடிதங்களுடன் கலக்கப்படும்..  ரயில் நிலையங்கள் இருக்கும் ஊர்களில்  RMS (Railway  Mail Service) மூலம் தபால் பைகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

சேலம், அதன் சுற்று வட்டார ஊர்கள், தாலுக்காக்களுக்கு போக வேண்டிய  கடிதங்கள் சேலம் DSO  பீஜன் ஹோலில் அடுக்குவார்கள்.  இந்த மாதிரி மாநிலத் தலைநகர்களுக்குச் செல்ல வேண்டிய கடிதங்கள்,  வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியவைகள் என்று  தனித்தனி பீஜன் ஹோல்களில் பிரிக்கப்படும்.  அதற்கேற்ப தனித்தனி கித்தான் பைகளில் போட்டு   எந்த இடத்திற்குப் போக வேண்டிய பை அது என்று  ஒரு மஞ்சள் அட்டையில் எழுதி கட்டப்பட்டு  அரக்கு சீல் வைக்கப்படும். 

ஆரம்பத்தில் ஒரு சிவப்பு பை பற்றி குறிப்பிட்டது நினைவு இருக்கும்.  அந்தப் பைக்கு அக்கவுண்ட் பேக் என்று பெயர்.  அந்தப் பைக்குள்  மணியாடர் போன்ற இனங்களில் பட்டுவாடா  செய்ய வேண்டிய தொகை பணமாக இருக்கும்.  அந்த சிவப்புப் பை உள்ளடங்கி இருக்கும் கித்தான் பையைக் கட்டும் பொழுது அதனுள் சிவப்புப் பை இருக்கிறது என்ற குறிப்பு கொண்ட சிலிப் எழுதி சீல் வைப்பார்கள்.  அதனால் அந்தப் பை வெகு ஜாக்கிரதையாகக் கையாளப்படும்.

குமாரபாளையம் தபாலாபீஸில் பணியாற்றிய ரத்தினம் என்பவர் பணியில் சேர்ந்த  நாளன்றே பழக்கமானார்.  அவர் தான் தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்துப் போனார்.  ஒரு பெரிய வீடை வாடகைக்கு எடுத்து கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்டோர் அங்கு தங்கியிருந்தனர்.   இரத்தினம் ஒருவர் தான் தபாலாபீஸ்.. மற்றவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்கள் என்று  தெரிந்தது.

குமாரபாளையத்தில்  தமிழில் புலவர்  (அந்நாட்களில் வித்வான்-- பிற்காலத்தில் பி.லிட்.,) படிப்புக்காக  கல்லூரி  ஒன்று  இருந்தது.   அந்த கல்லூரியில் சேர்ந்து படித்தவர்களில் சிலர்  இந்த வீடை வாடகைக்கு எடுத்திருந்தனர்.   தான் தங்கியிருக்கும் அந்த இடத்திற்கு தான் ரத்தினம் என்னைக் கூட்டிச் சென்றார்.

நாங்கள் அங்கு போன  நேரத்தில்  ஹாலில் சிலர் அமர்ந்து  சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.  பெரும்பாலும் என்னை விட வயதானவர்களாகத்  தெரிந்தனர்.  ரத்தினம் என்னைப் பற்றிச் சொன்னார்.  நானும் அங்கு தங்கிக் கொள்ள அவர்களுக்கு  ஆட்சேபணை ஏதும் இல்லை என்று  தெரிந்தது.

(வளரும்)19 comments:

ஸ்ரீராம். said...

வழக்கம்போல சுவாரஸ்யமானஅனுபவங்கள்.

கடைப்பையன்கள் தங்கள் கடை எண்களுக்கான பெட்டியிலிருந்து தபால்களை எடுத்துச் சென்று விடுவார்கள் சரி, தினசரி வீடுகளுக்குப் பட்டுவாடா நடக்கும் தபால்கள்பிரிக்கப்படுவது பற்றிச் சொல்லவில்லையே...

வல்லிசிம்ஹன் said...

பெரிய அலுவலகம் தான்.
காலையில் தபால்களைப் பிரிக்கும் வேலை.
மாலை தபால் கித்தான் பைகளில் கட்டப்பட்டு சீல் வைக்கப் பட்டு. வேனில்
ஏறி ரயில் நிலயத்துக்குப் போய் விடும்.

எனக்கு வரும் கடிதங்கள் 8.45 மணீக்கு அப்பாவே கொண்டு வந்து தந்து விடுவார்.
பத்து தபால்காரர்களா. குமாரபாளையம் பெரிய ஊர் போலிருக்கிறது.

பாலமும் சங்கமேஸ்வரர் படித்துறையும் கண் முன் நிழலாடுகின்றன உங்கள் எழுத்தில்
சுவையான நினைவுகள்.

கோமதி அரசு said...

//பக்கத்தில் தான் பவானி. பவானி என்றதும் சங்கமேஸ்வரர் கோயில், கூடுதுறை எல்லாம் உங்கள் நினவுக்கு வரும். //

ஆமாம், நினைவுக்கு வந்தது.
தாபல்களை பிரிப்பது எப்படி பட்ட பொறுப்பான பணி என்பது தெரிந்து இருந்தாலும், மேலும் உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்.

அருமையான நினைவலைகள்.

G.M Balasubramaniam said...

குறிப்பிட்ட நேரத்துக்குள் ச்ய்து முடிக்கும் வேலைகளில் கவனம் தேவை எந்த ஒரு வேலைக்குப் பின்னும் ஒரு டெடிகேஷன் வேண்டும் அல்லவா

ஜீவி said...

@ ஸ்ரீராம்

போஸ்ட் பாக்ஸ் கடிதங்கள் தவிர அன்றைக்கு டெலிவரி ஆக வேண்டிய மீதிக் கடிதங்களை தபால்காரர்களே பிரித்துக் கொள்வார்கள். ஒவ்வொரு தபால்காரரும் ஊரின் பீட்களாக பிரித்து விடப் பட்டிருக்கும். அவரவர் பீட்களுக்கான கடிதங்களை அவரவர்களே சேகரித்துக் கொள்வார்கள்.

கணக்காளர் சிவப்புப்பை அக்கவுண்ட் பேக்கை வாங்கிக் கொண்டார் இல்லையா?.. அந்த அக்கவுண்ட் பேக்கில் மணியாடர், ரிஜிஸ்தர் லெட்டர்கள், அதற்கான விவரங்கள் கொண்ட பூர்த்தி செய்யப்பட்ட அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட் இருக்கும். அக்கவுண்டண்ட் அவற்றையெல்லாம் சரி பார்த்து மணியாடர்கள் + அதற்கான பட்டுவாடா பண்ண வேண்டிய தொகையை அந்தந்த பீட் போஸ்ட்மேன்களுக்கு தனித்தனி கணக்காக வழங்குவார். டெலிவரியெல்லாம் முடிந்து திரும்பும் தபால்காரர் மாலை 3 மணி சுமாருக்கு தான் பட்டுவாடா செய்த தொகை போக பாக்கித் தொகையையும் அதற்கான மணியாடர் பாரங்களையும் கணகாளர் கிட்டேயே தந்து விடுவார். அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள் என்று பீட்டில் போடப்படும் மணியாடர்களும் உண்டு. பண விஷயங்கள் சம்பந்தப்பட்டவற்றை கணக்காளரே நேரடியாகப் பார்த்துக் கொள்வார். அதே மாதிரி வி.பி.பி (Value Payable Post) தபால்களையும் கணக்காளரே நேரடியாக கவனித்துக் கொள்வார். சுருக்கமாக பனம் சம்பந்தப்பட்டதெல்லாம் கணக்காளர்.

ரிஜிஸ்டர் தபால்களை மட்டும் ரிஜிஸ்தர் தபால் கிளார்க்கிடம் அக்கவுண்டண்டு கொடுத்து விடுவது உண்டு. அவற்றிற்கு கணக்கு வைத்துக் கொண்டு ரிஜிஸ்டர் செக்ஷன் கிளார்க்
தபால்காரரிடம் அவர்கள் பீட் எல்லைகளுக்கேற்ப கொடுப்பார். பட்டுவாடா ஆகாமல் திரும்பும் ரிஜிஸ்டர் தபால்களை தபால்காரர் ரிஜிஸ்தர் கிளார்க்கிடம் தந்து தினம் தினம் என்று மூன்று நாட்களுக்கு வாங்கிப் போவார். அதற்குப் பிறகு முகவரிக்காரருக்கு 'உங்களுக்கு ஒரு ரிஜிஸ்தர் தபால் வந்திருக்கிறது. நீங்கள் இல்லாததினால் டெலிவரி செய்ய முடியவில்லை. அது இந்த போஸ்ட் ஆபிஸில் இருக்கிறது. தாங்கள் நேரடியாக தகுந்த அடையாள குறிப்புடன் போஸ்ட் ஆபிஸில் வந்து பெற்றுக் கொள்ளவும்..' என்ற சிலிப்பை வீட்டின் கதவு பூட்டியிருந்தால், பூட்டின் இடைவெளியில் சொருகி விட்டு வந்தி விடுவார். முகவரியாளர் ரிஜிஸ்தர் லெட்டரை வாங்கிக் கொள்ளா சம்மதம் இல்லையென்றாலும், டிபாஸிட்டில் இருக்கும் ரிஜிஸ்தர் லெட்டர் அந்த குறிப்பிட்ட காலத்திற்கு வாங்கிக் கொள்ளாமல் இருந்தாலும் அவை தகுந்த குறிப்புடன் அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பப்பட்டு விடும்.

ஜீவி said...

@ வல்லி சிம்ஹன்

உங்கள் நினைவுகளும் சேர்ந்தே மலர்வதில் ரொம்பவும் சந்தோஷம்.


//பாலமும் சங்கமேஸ்வரர் படித்துறையும் கண் முன் நிழலாடுகின்றன உங்கள் எழுத்தில்
சுவையான நினைவுகள். //

எனது கனவில் நனைந்த நினைவுகள் குறுநாவலின் நிலைக்களம் பவானியும், சங்கமேஸ்வரர் கோயிலும், இந்தப் பாலமும், குமாரபாளையமும் தான். கும்பகோணம் எழுத்தாளர் அமரர் எம்.வி.வி. பற்றிய நினைவுகளும் உண்டு.. Amazon Kindle -லில் இந்த நூல் கிடைக்கிறது.

அடுத்த மூன்று வருடங்களில் பவானியில் பணியேற்கிறேன். அப்பொழுது பவானி பற்றிய தகவல்கள் பலதைப் பகிர்ந்து கொள்கிறேன்.

வாசித்து வருவதற்கு நன்றி, வல்லிம்மா.

ஜீவி said...

@ கோமதி அரசு

சங்கமேஸ்வரர் கோயிலும், கூடுதுறையும் உங்கள் நினைவுக்கு வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

இந்த சங்கமேஸ்வரர் கோயிலைக் கட்டி முடித்து கும்பாபிஷேகம் போது நான் பவானியில் இருக்கிறேன். திருமுருக கிருபானந்த வாரியாரின் தொடர் சொற்பொழிவுகளை மறக்கவே முடியாது.

தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

டெடிகேஷன் இல்லையென்றால் ஏனோ தானோ.
மனம் ஆழ்ந்து போனால் தன்னாலே டெடிகேஷன் வரும். டெடிகேஷன் இருந்து விட்டால்
மனமும் திருப்தி படும்.
எனக்கு அடிக்கடி மனம் தான் மனிதனாகத் தோன்றும்.
ஆனால் பெரும்பாலும் இந்த மனதை கொச்சைபடுத்தித் தான் எல்லாரும் பேசுகிறார்கள்!
(உங்கள் பதிவுக்கு ஒரு பொருள் !)

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி ஜீவீ சார். நீங்கள் எழுதும்போது பெற்றோர்களுடன் இனிமையாகச் சென்ற
நாட்கள் மனதில் வந்து நிற்கின்றன. பொற்காலம் என் வாழ்வில் அது. எழுத்தாளர் எம்வி.வெங்கட் ராம் மிகப் பிடித்த எழுத்துக்குரியவர்.
உங்கள் நாவல் கிண்டிலில் இருக்கிறதா.
என்னிடம் கிண்டில் இல்லையே.
தபால் அலுவலகப் பசை, பச்சைக் கலரில் இருக்குமே.
அதைச் சொல்ல மறந்து விட்டது. வெகு நல்ல விவரங்கள் கொடுத்திருக்கிறீர்கள்.
அப்பா சில நாட்கள் பணக்கணக்கு டாலி ஆகாமல் சிரமப் படுவார்.
முடித்துவிட்டுத்தான் தூங்க வருவார்.

G.M Balasubramaniam said...

/உங்கள் பதிவுக்கு ஒரு பொருள் !)/புரியாமல் எழுது வதை விடநேரடி எழுத்து என் வகை அதன் பொருள் கொச்சைப்படுத்துதல் என்று உங்கள் மூலம் அறிகிறேன் நன்றி

ஜீவி said...

@ ஜிஎம்பீ

மனம் ஒரு குரங்கு என்று சொல்வார்கள். மனதை அலையவிடக் கூடாது; அடக்கி ஆள வேண்டும் என்பார்கள். இதெல்லாம் பொதுவான உலக வழக்கு.

ஆனால் எனக்கென்னவோ மனம் தான் ஒரு மனிதனைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகத் தோன்றுகிறது. மனம் தான் நம்மை ஆள்வதாகப் படுகிறது. ஒரு முழு மனிதனை உருவாக்குவதாகப் படுகிறது. அறிவு காரியார்த்தனமானது. ஆனால் மனத்தின் செயல்பாடு (அதன் அலைதல்) இல்லை என்றால் எல்லாமே அஸ்தமித்துப் போய்விடும் போலிருக்கிறது. இது ஒரு இனட்ரஸ்ட்டிங் டாப்பிக். அலசி ஆராய வேண்டிய விஷயம்.

நீங்கள் அடிக்கடி எழுதுவதற்கு பொருள் எதுவும் தோன்றவில்லை. அதனால் இந்தக் காணொளியைப் பகிர்ந்து கொண்டேன் என்றெல்லாம் பகிர்ந்து கொள்வதைப் படித்ததுண்டு.

அதனால் மனம் பற்றிய இந்த அலசல் உங்கள் பதிவுக்கான ஒரு பொருள் என்று பகிர்ந்து கொண்டிருந்தேன்.

நல்லவேளை.. மனசிலேயே வைத்துக் கொண்டிருக்காமல் பகிர்ந்தீர்களே! அதனால் தான் விளக்க முடிந்தது. நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நாம் எளிது என நினைக்கும் பல பணிகள் சிரமமாக இருக்கும் என்பது உண்மையே. என் அனுபவத்தில் இதனைக் கண்டுள்ளேன்.

Bhanumathy Venkateswaran said...

மூன்று வாரங்களாக மகள் குடும்பத்தோடு பிஸி. இப்போதுதான் விட்டுப்போன பதிவுகளை படித்து வருகிறேன். உங்கள் நினைவுகள் சுவாரஸ்யமாக செல்கின்றன.
உங்கள் கன்னத்தில் உரசியது எது? ஏன் முகம் வீங்கி இருந்தது? விரிவாக சொல்லுவீர்கள் என்று நினைத்தேன்.
நான் மஸ்கட்டில் இருந்த பொழுது அந்த ஊர் தபாலாபீஸில் ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியாக இருக்கும் பீஜன் ஹோலில் அடுக்கப்பட்டிருக்கும் கடிதங்களை பிரித்து எடுத்து, பின் எல்லாவற்றையும் ஓரேபையில் போட்டுக் கொள்வார்கள். ஏன் அப்படி செய்தார்கள் என்று வியப்பாக இருக்கும்.

ஜீவி said...

@ Dr. B. Jambulingam, Asst. Regtr. (Retd)

அதே மாதிரி சிரமம் என்று நினைக்கும் காரியங்கள் எளிதாக இருந்ததில்லை என்றும் அனுபவம். தங்கள் பகிர்வுக்கு நன்றி.

ஜீவி said...

@ பானுமதி வெங்கடேஸ்வரன்

மூன்று வாரங்கள்?.. கொடுத்து வைத்தவர்கள்.

கன்னத்தில் உரசியது பிரமை என்று தெரியப்படுத்தியதாக நினைவு. அந்த பிரமையின் நீட்சியாக வீங்கியிருப்பதாக நினைத்துக் கொண்டதும் மனப் பிரமை தான்.

மஸ்கட் விஷயம் சுவாரஸ்யம். தெரிந்தவர்கள் யாராவது விளக்கினால் தெரிந்து கொள்ளலாம். நெல்லை அறிவார்?.. தெரியவில்லை..

”தளிர் சுரேஷ்” said...

அஞ்சல் துறை அப்போது கொலொச்சிக்கொண்டிருந்ததை உங்கள் எழுத்துக்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இன்றும் அஞ்சல்துறைதான் கிராமங்களின் உயிர்நாடி என்றாலும் அஞ்சல் அட்டைகளுக்கும் கவர்களுக்கும் ஏகப்பட்ட தட்டுப்பாடு. சந்தா கட்டி வரவழைக்கும் புத்தகங்கள் சரியாக டெலிவரி செய்யப்படுவதில்லை. இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள்.சுவாரஸ்யமாக செல்கிறது தொடர். தொடர்கிறேன்! நன்றி!

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

குறைகளுக்கு காலத்தின் மாற்றமும் காரணம்.

அஞ்சல் துறையை ஒரேடியாக அழித்து விடுவதற்கு தான் தனியார் கூரியர் சர்வீஸ்களை மாற்றாகக் கொண்டு வந்தார்கள். என்னதான் ஊக்குவிப்பு தனியார் துறைகளுக்குக் கொடுத்தாலும் நம் நாட்டில் வழக்கமான நம்பிக்கைகள் சில உண்டு. அரசு சார்புள்ளவைகளை நம்புகிற அளவுக்கு தனியாரை நம்ப மாட்டார்கள். ஏழை எளியவர்களுக்கு அரசு தரும் மாத பென்ஷன் போன்றவரை தபால் துறை மூலம் தான் பட்டுவாடா ஆகிறது. பாஸ்போர்ட் போன்ற முக்கிய ஆவணங்கள் ஸ்பீட் போஸ்ட் மூலமாகத் தான் டெலிவரி ஆகிறது.. அரசின் சில திட்டங்கள்: சிறுசேமிப்பு, PPF, NSC
போன்றவை தபால் இலாகா மூலம் மக்களுக்கு அறிமுகமாகி பெருத்த நிதி ஆதாரத்தை அரசுக்கு ஈட்டித் தருகின்றன.

இன்னொரு முக்கியமான இந்தியா பூராவுக்கு ஒரே இலாகா என்ற பரவல். காஞ்சீபுரத்தில் இருந்தாலும் சரி, கான்பூரில் இருந்தாலும் சரி, வங்கிகள் போல பண பரிவர்த்தனைகள் சுலபமாகியிருக்கின்றன.

தபால் துறை எதிர்காலத்தில் வங்கி போல செயல்படும் பொழுது வங்கிகளை விட வளர்ச்சியடைந்த சேவை குக்கிராமங்களில் எல்லாம் கிடைக்கும்.

ஆனால் இன்றைய அரசுகளுக்கு பிஜேபிக்கும் சரி, காங்கிரஸுக்கும் சரி இதிலெல்லாம் அக்கறை கிடையாது என்பது தெளிவு.

வே.நடனசபாபதி said...

உண்மையில் அஞ்சலகப்பணி மகத்தானது. எத்தனை பேரை அது ஒரு தொடர்பி‌ல் இருக்க உதவியாக இருந்திருக்கிறது என்பதை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. தாங்கள் அந்த துறையில் பணியைத்தொடங்கியதைப் படித்ததும் அந்த துறையில் Sorter ஆக பணியாற்றி பின்னர் பிரபல எழுத்தாளர் ஆன அகிலன் அவர்கள் எனக்கு நினைவுக்கு வருகிறார்.

நீங்கள் பிற்காலத்தில் எழுத்தில் ஜொலிக்கப்போகிறீர்கள் என்பதை அறிந்துதான் மாணிக்கமும் ரத்தினமும் உதவினார்களோ?

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

ஆமாம், சார்! 'பாவை விள்க்கு' அகிலன் அவர்கள் R.M.S.-ல் பணியிலிருந்தார். பின்னால் தான் அகில இந்திய வானொலிக்குப் போனார்.

ரத்தினம் தொடர்ந்து தபால் அலுவலகத்திலேயே பணியாற்றினார். இப்பொழுது எங்கிருக்கிறாரோ?..

தொடர் விட்டு விடாமல் வாசித்து வருவதற்கு நன்றி, சார்.

Related Posts with Thumbnails