மின் நூல்

Tuesday, May 7, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                        21


காலையில்  ஒன்பது மணி சுமாருக்கு   மதிய உணவு டிபன் பாக்ஸோடு கிளம்பினேன்   என்றால் மாலை ஆறு  மணியளவில் வீடு திரும்பி விடுவேன்.  தினம் நாலைந்து கடிதங்கள் தட்டச்சு செய்ய  வேண்டும்.  வேலை  அவ்வளவு தான்.  கிருஷ்ணமூர்த்தி சாரைத்  தவிர கந்தசாமி, கோதண்ட ராமன் என்று மற்றும்  இருவர்.  மூன்று பேரும் உறவினர்கள் தான். ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர்கள்.  யாரானும் இருவர் எப்போதும் இருப்பார்கள். இல்லை, கண்டிப்பாக ஒருத்தர்.   பெரும்பாலும்  தெலுங்கில்  தான் ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொள்வார்கள். 

அலுவலகத்திற்கு வெளியே விக்கெட் கேட் பொருத்திய  பெரிய கேட்.  செக்யூரிட்டி.  உள்ளே வந்தோம் என்றால் இடது பக்கம் அலுவலக அறை.  பத்துக்கு இருபது தேறும்.  அதை   தாண்டி உள்ளடங்கி  Factory இருந்தது.  சந்தன எண்ணை தயாரிப்பகம்.  ஒரே   ஒரு  தடவை  கிருஷ்ணமூர்த்தி  சார் என்னை உள்பக்கம் அழைத்துப் போய் தயாரிப்பைக் காட்டியிருக்கிறார்.

எனக்கு உள்பக்கம் வேலையில்லை என்பதினால்  லஷ்மண ரேகா இழுத்த மாதிரி வெளிப்பக்க அலுவலகத்தோடு சரி.   அந்த அறையிலேயே வாஷ் பேசின், ரெஸ்ட் ரூம் எல்லாம்   இருந்தது.  மூன்று முதலாளிகளில் யாராவது  அந்த அறையில் இருந்து கொண்டே   இருப்பார்கள்.   வேலையில்லா விட்டாலும்  எதையாவது கொடுத்து தட்டச்சு செய்யச் சொல்வார்கள்.
இப்பொழுது கூட அது மறக்காமல் நினைவிலிருக்கிறது; 

அது   என்னவோ தெரியவில்லை சம்பளப் பணத்தை ஒரு  ரூபாய் நோட்டாகத்  தான்  தருவார்கள்.   அத்தனையும் அழுக்கு நோட்டாகத் தான் இருக்கும்.  ஒண்ணோடு ஒண்ணு ஒட்டிக் கொண்டு மடிந்தும்  புரண்டும்.. எண்ணிப் பார்த்து சரியாயிருக்கிறது  என்று திருப்தி ஏற்படுவதற்குள்  ஒருவழியாகி விடும்.     அவர்கள் கணக்கு வைத்திருந்த வங்கியில் வித்ட்ரா பண்ணும் பொழுது அப்படித் தான் அழுக்கு நோட்டாக அவர்களுக்குத்  தருவார்கள் போலும் என்று நினைத்துக் கொள்வேன்.  ஒரு தடவை கூட 'நல்லா நோட்டாத் தான் தாருங்களேன்'' என்று இவர்கள் கேட்க மாட்டார்கள் போலிருக்கு..

சந்தன எண்ணைக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து ஐந்து மாதங்கள் கூட ஆகியிருக்காது.. ஒரு நாள்,   கிருஷ்ண மூர்த்தி சார் என்னிடம்,  "அடுத்த மாதத்திலிருந்து அதிக வேலை  இருக்காது.  அதனால் நீங்கள் வரவேண்டி  இருக்காது என்று  நினைக்கிறேன்.." என்றார்.

அவர் சொன்னதற்கு அடுத்த  நாள் சித்தூரிலிருந்து ஒரு பையன்  வந்திருந்தான்.  உறவினர் பையன் என்று கிருஷ்ணமூர்த்தி அவனை எனக்கு  அறிமுகப்படுத்தி வைத்தார்.  அவனுக்கும் தட்டச்சு தெரியும் என்று கூடுதல் தகவலையும் என்னிடம் சொல்லி வைத்தார்.  நானும் ஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்று கணக்கு போட்டு வைத்துக் கொண்டேன்.  என் கணக்கு தப்பாகவில்லை.

சரியாக அந்த மாதக் கடைசி நாளோடு கணக்கை முடித்து என் சம்பளப் பணத்தை வழக்கம் போல ஒரு ரூபாய் அ. நோட்டுகளாகவே கொடுத்து ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டிய பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள்.

நானும் விடைபெற்றேன்.  வழக்கம் போல செக்யூரிட்டியின் சோதனைக்குப்  பிறகு வெளி வந்தேன்.  இனிமேல் தினந்தோறும் இந்தப் பக்கம் வர வேண்டிய  வேலை  இருக்காது என்பதை நினைக்கையில் ஒருவிதத்தில் சந்தோஷமாகத்  தான்  இருந்தது.
                                                                                                                                   
டுத்த வேலைக்கு ரகுவும் என்னோடு சேர்ந்து கொண்டான்.   எங்கள் இருவருக்குமே மனசுக்கு மிகவும்    பிடித்தமான வேலை.  நடமாடும் வாடகை லைப்ரரி.  வார, மாத இதழ்களை வீட்டுக்கு வீடு சப்ளை  பண்ணுகிற வேலை.  வாடகை நூல் நிலைய உறுப்பினர்கள் இரண்டு நாட்களில் படித்து முடித்து வாங்கிக் கொள்ளும் புத்தகங்க்வளைத் திருப்பி விட வேண்டும்.   கலைமகள் வாடகை நூல் நிலையம் என்று பெயரையும் தேர்வு செய்து விட்டோம்.  அந்தப் பெயரில் ஒரு ரப்பர் ஸ்டாம்பும் தயாராயிற்று.

எங்கள் லிஸ்ட்டில் அந்நாட்களில் வெளிவந்த   கிட்டத்தட்ட அத்தனை பருவ  இதழ்களூம் இருந்தன.  ஆரம்பத்தில் அதிக அலைச்சல் வேண்டாம் என்று  எங்கள் தெருவிற்கு அருகாமையில் இருந்த ஏரியாக்களை மட்டும் தேர்தெடுத்தோம்.   மேட்டுத் தெரு, மரவனேரிப்  பகுதி, மூன்றாவது அக்ரஹாரம், கிச்சிப் பாளையம் என்று  சின்ன வட்டத்திற்கே இருபது வீடுகள் தேறி விட்டன.   இருபது  வீடுகளை இரண்டு பகுதிகளாகப் பிரித்ததில் வாங்கிய புத்தகங்களையும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்க முடிந்தது.   ஒரு பகுதிக்கு ஆனந்த விகடன்  என்றால் இன்னொரு பகுதிக்கு குமுதம் இப்படி.  திங்கள், புதன், வெள்ளி  ஒரு பகுதி என்றால் செவ்வாய், வியாழன், சனி இன்னொரு பகுதி.    ஞாயிறு எங்கள் நடமாடும் நூலகத்திற்கு  விடுமுறை.

பத்திரிகை வந்த முதல் நாளே  படித்து விட வேண்டும் என்று சிலருக்கு எதிர்பார்ப்பு  இருந்தது.   போன வாரம் வாசித்து விட்ட தொடரின் அடுத்தப் பகுதியை தெரிந்து கொள்வதில் அப்படி ஒரு ஆர்வம் அவர்களை ஆட்டிப் படைத்ததை அனுபவ பூர்வமாகவே உணர்ந்தோம்.  மூன்றாவது
அக்கிரஹாரத்தில் ஒரு மாமி.. "நீ படிச்சிருப்பேன்னு தெரியும். அப்புறம் அந்த  மஹேந்திர பல்லவர் எங்கே தான்  போய்த் தொலைச்சார்?.. பல்லவப் படை பாசறைக்கு வந்து சேர்ந்தாரா?.. இந்த வாரத்தில் அதைப் பற்றி  எதுனாச்சும் போட்டிருக்காங்களா?.." ன்னு இந்த மாதிரி அப்பப்போ அடுத்த வாரத்தில் தொடரப் போகிறதைத் தெரிஞ்சிக்கற ஆர்வத்தில் கேட்பார்.  (இது எந்தத் தொடர்கதைன்னு யாரானும்  யூகித்துப் பாருங்கள்..)

பொதுவாக  தொடர்கதைகள் வெளிவரும்  வார இதழ்கள் அப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன.  அதனால் வார இதழ்களை மட்டும் இரண்டு பிரதிகள் வாங்கி, அது பின்பு மூன்றாகி.. இப்படியான நிர்பந்தங்களுக்குத்  தள்ளப்பட்டோம்.  பக்கத்து வீடு, அடுத்த வீடு, எதிர்த்த வீடு என்று ஆரம்பத்தில் இருபது இருந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒரே மாதத்தில் ஐம்பதாக எகிறியதும் விழி பிதுங்கிப் போயிற்று.   பெரும்பாலும் வீட்டரசிகள் தாம் எங்கள் நூல் நிலைய உறுப்பினர்கள்.  ஆண்கள் வார, மாத இதழ்களைப் படிக்கவே மாட்டார்களோ என்ற பெருத்த சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகிற அளவுக்கு  பெண்களின்  வாசிப்பு ஆர்வம் எங்களை பிரமிக்க வைத்தது.   தொடர்கதைகள் என்ற ஏரியாவை அத்தனை பேரும் குத்தகைக்கு எடுத்திருந்தார்கள் என்றே சொல்லலாம்.

வார, மாத  இதழ்களை வைத்து மட்டும் சமாளிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட பொழுது  பிரேமா பிரசுர துப்பறியும் நாவல்களை பருவ இதழ்களோடு சேர்த்துக் கொண்டோம்.   சிரஞ்சீவி,  மேதாவி, சந்திர மோகன், அரு.ராமநாதன் எல்லோருமே எங்களுக்கும் நெருக்கமாக ஆனார்கள். 

"எப்படிப் பார்த்தாலும்  நாலு வீட்டுக்கு புத்தகம்  கொடுக்க முடியாம இடிக்கும் போலிருக்கு..  ஒண்ணு செய்யலாம்.. நேத்திக்கு வாங்கினோமே  சிரஞ்சீவி, மேதாவி  புது   நாவல்கள்? -- அதை நாளைக்கு  சர்க்குலேஷனுக்கு விட்டுடலாமாடா?"  --  ரகுராமன் கேட்பான்.  தினமும் சாயந்தரம் எங்கள் சந்திப்பு  இருக்கும்.


"ரெண்டைப் படிச்சிட்டேன்.  அதை மட்டும் தர்றேன். எடுத்துக்கோ.. இன்னும் ரெண்டிலே இருபது பக்கம் போல பாக்கியிருக்கு.  சிலதை  இன்னும் தொடவே இல்லை..  ஒழிஞ்ச நேரத்திலே முடிச்சிடறேன்.  சனி, ஞாயிறு வர்றது.. திங்கட்கிழமை சர்க்குலேஷனுக்கு  வைச்சிக்கலாமே?"

தனக்கு  மிஞ்சித் தான் தான தருமம் எல்லாம் என்பார்கள்.   இந்த இதழ்கள், புத்தகங்கள் விஷயத்தில் நாங்க புரட்டிப் பார்த்த பிறகு  தான் எதுவும் நூல் நிலைய வாசகர்களுக்குப் போகும் என்பதை தவிர்க்க முடியாத  நியதியாக நாங்க ரெண்டு பேருமே கொண்டிருந்தோம்.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக  எங்க இரண்டு பேரையும் இந்த  நடமாடும் நூல் நிலையம் மிகவும் பாதிச்சிருந்தது.  கத்தை  கத்தையாக நிறைய தொடர்கதைகள்,  முக்கியமான விஷயங்கள் என்று சேர்த்து  வைத்திருந்தோம். பைண்ட் பண்ணியும் பண்ணாமலும்..  சொல்லப் போனால் அதுக்குத் தான் இந்த வேலையே இறைவன் கொடுத்த வரமாக நடந்த மாதிரி நினைக்கிறேன்.

(வளரும்)


26 comments:

நெல்லைத்தமிழன் said...

மஹேந்திர பல்லவன் - சிவகாமியின் சபதமாயிருக்கும். அதுதானே பலப் பல வருடங்களாக தொடர்கதையாக கல்கியில் வந்தது.

வல்லிசிம்ஹன் said...

புத்தம்புது நோட்டுகளாகக்கொடுக்கக் கூடாதோ.
நாசூக்காகச் சொல்லி விட்டீர்கள் உறவினர் வருகையால் நம் வேலை
பாதிக்கப் படுவதை. நாங்களும் இது போல அனுபவித்திருக்கிறோம்.

கலைமகள் வாடகை நூல் நிலையம் சுவாரஸ்யம். ஆனால் அலைச்சல் ஜாஸ்தி. அப்போது
பார்த்திபன் கனவு தொடராக வந்ததோ.இல்லை சிவகாமியின் சபதமோ.
மஹேந்திர சாமியார் மிகவும் பிடித்த காரக்டர்.

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான, மிக சுவாரஸ்யமான அனுபவங்களாய் இருந்திருக்கும். இதில் பணவரவு எப்படி என்று சொல்லவில்லை நீங்கள். புத்தகம் வாங்கிப் படிக்க ஆர்வம் காட்டும் அன்பர்கள் பணவிஷயத்தில் கஞ்சர்கள் என்பது என் அனுபவம்!

ஸ்ரீராம். said...

நீங்கள் சொல்லி இருக்கும் கதை நெல்லைத்தமிழன் சொன்னதுபோல சிச அல்லது சாண்டில்யனின் ராஜமுத்திரையோ, ராஜதிலகமோ! தொடர் வெளிவந்த காலம் பார்த்தால் தெளிவாகி விடக்கூடும்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மறுநாள் வேலையில்லை என்றதும் என் அனுபவம் நினைவிற்கு வந்தது. படிப்பு முடித்து பணிக்காலத்தில் பட்ட சிரமங்களில் ஒன்று. சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது (வழக்கமாக முதல் தேதி சம்பளம் என்ற நினைப்பில் இருந்துவிட்டேன்) ஏழாம் தேதிதான் சம்பளம் என்று கூறினார்கள். அந்த ஆறு நாள்கள் பணத்திற்காக நான் திண்டாடியதை என்றுமே மறக்கமுடியாது.

G.M Balasubramaniam said...

ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது ரூபாய் நோட்டுகளில் ஹிந்தியில் எழுதுவது முன்பெல்லாம் இருக்கவில்லையாமே

கோமதி அரசு said...

//சித்தூரிலிருந்து ஒரு பையன் வந்திருந்தான். உறவினர் பையன் என்று கிருஷ்ணமூர்த்தி அவனை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவனுக்கும் தட்டச்சு தெரியும் என்று கூடுதல் தகவலையும் என்னிடம் சொல்லி வைத்தார். நானும் ஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்று கணக்கு போட்டு வைத்துக் கொண்டேன். என் கணக்கு தப்பாகவில்லை.//

வேலையை உறவினருக்கு கொடுக்க எவ்வளவு கெட்டிக்காரதனமாக பேச்சு!

கோமதி அரசு said...

"//நீ படிச்சிருப்பேன்னு தெரியும். அப்புறம் அந்த மஹேந்திர பல்லவர் எங்கே தான் போய்த் தொலைச்சார்?.. பல்லவப் படை பாசறைக்கு வந்து சேர்ந்தாரா?.. இந்த வாரத்தில் அதைப் பற்றி எதுனாச்சும் போட்டிருக்காங்களா?.." ன்னு இந்த மாதிரி அப்பப்போ அடுத்த வாரத்தில் தொடரப் போகிறதைத் தெரிஞ்சிக்கற ஆர்வத்தில் கேட்பார். (இது எந்தத் தொடர்கதைன்னு யாரானும் யூகித்துப் பாருங்கள்..)//

பார்த்திபன் கனவு.

கோமதி அரசு said...

//பைண்ட் பண்ணியும் பண்ணாமலும்.. சொல்லப் போனால் அதுக்குத் தான் இந்த வேலையே இறைவன் கொடுத்த வரமாக நடந்த மாதிரி நினைக்கிறேன்.//

ஆமாம், இறைவன் கொடுத்த நல்ல வரம், நல்ல வாய்ப்பு.
புத்தகங்களை படித்தபின் சுற்றுக்கு கொடுத்து அருமையான வரபிரசாதம் தான்.
எத்தனை எத்தனை கதைகள்!
உங்கள் மலரும் நினைவுகள் வசந்தகாலம் தான்.

வே.நடனசபாபதி said...

தட்டச்சு பணியிலிருந்து விடுபட்டது தங்களுக்கு சந்தோஷமாகத்தான் இருந்திருக்கும். ஏனெனில் அது உங்களுடைய பணியே அல்ல. ஆங்கிலத்தில் சொன்னால் It is not your cup of Tea! அதுவேண்டுமானால் பிற்காலத்தில் தங்களுடைய படைப்புகளை தட்டச்சு செய்வதற்கான பயிற்சிக்களம் எனலாம். ஒரு Net Practice போல.

தங்களுக்கு சம்பளத்தை ஒரு ரூபாய் நோட்டுகளாக அதுவும் அழுக்கு நோட்டுகளாக தந்த அந்த நிறுவனத்தினரின் பெருந்தன்மையை என்னவென்று சொல்ல. வங்கியில் பணத்தை எடுக்கும்போது அழுக்கு நோட்டுகளாகத் தரமாட்டார்கள். அதை வேண்டுமென்று கேட்டு நிறுவனத்திரே வாங்கி தங்களுக்குத் தந்திருக்கலாம்.

அடுத்து நீங்கள் தொடங்கிய பணியான நடமாடும் நூலகம். தங்களுக்கு அலைச்சலைக் கொடுந்திருந்தாலும், மனநிறைவை கொடுத்திருக்கும் என எண்ணுகிறேன். முதலில் தொடங்கிய நூலகப்பணியும் . பின்னர் தொடங்கிய நடமாடும் நூலகப்பணி யும் தான் உங்களின் எழுத்தார்வத்தைத் தூண்டுயிருக்கும் என்பதில் ஐயமில்லை. எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிட்டுவதில்லை.

சுவையான அனுபவங்களை படிக்கக் காத்திருக்கிறேன்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

கரெக்ட். முதல் பின்னூட்டமாய் சரியான விடையைச் சரியாகச் சொல்லி விட்டீர்கள். வாழ்த்துக்கள். சரித்திரக் கதை படிக்கறதுன்னா அவ்வளவு இஷ்டமோ உங்களுக்கு?..

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

நெல்லை சரியாகச் சொல்லி விட்டார். சிவகாமியின் சபதம் தான்.

1. வாடகை நூல் நிலைய உறுப்பினர்கள் மாதச் சந்தாவாகக் கொடுத்த பணத்திலேயே இதழ்கள் வாங்கியதால் கைக்காசு செலவழிக்காமாலேயே பருவ இதழ்கலை வாங்கினோம்.

2. இதழ்கள் கடைக்கு வந்த நாளிலேயே வாங்கி வாசிக்க முடிந்தது.

3. நிறைய தொடர்கதைகளை பைண்டிங் பண்ணினோம். பைண்டிங் செலவுகளுக்குக் கூட சந்தாத் தொகை தான் உபயோகப்பட்டது.

-- இதெல்லாம் கலைமகள் நூல் நிலையத்தால் கிடைத்த உடனடி பலன்கள்/.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

இல்லை, ஸ்ரீராம். பண நெருக்கடி ஏற்படவேயில்லை. எல்லாம் வசதியானவர்கள். ஒன்றாம் தேதி ஆச்சு என்றால் அவர்களே மறக்காமல் எடுத்து வைத்திருந்து கொடுப்பார்கள்.

எல்லா பத்திரிகைகளும் வாசிக்க வீட்டுக்கு கொண்டு வந்து தருகிறார்கள். வாசித்து விட்ட புத்தகங்களை வாங்கிக் கொண்டு இன்னொன்றைப் புதுசாகத் தருகிறார்கள். -- இதெல்லாம் அவர்கள் உணர்ந்த செளகரியங்கள்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

சி.ச.-வே தான். நெல்லை இந்த விஷயங்களில் அத்துப்படி. கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம்.

ஜீவி said...

@ Dr. B. Jambulingam A.R (Retd)

நான் வீட்டிலேயே வேளாவேளைக்கு சாப்பிட்டு வேலைக்குப் போனதால் வேலைக்குப் போவது என்பது ஒரு ஹாபி மாதிரி செளகரியமாக இருந்தது. வீட்டுச் சாப்பாடு பாதித்த நேரமும் ஒன்று உண்டு. அதையும் சொல்கிறேன். ஒவ்வொரு இடத்திலும் ஒரு படிப்பினை அஸ்திவாரத்தைப் பலப்படுத்தியது.

நிரந்தர வேலை கிடைப்பதற்கு முன் நிறைய அனுபவங்கள். இன்னும் 4 இடங்களில் செய்த வேலைகள் பாக்கி இருக்கின்றன..

ஜீவி said...

@ ஜிஎம்பீ

நம் தேசத்து ஒரு ரூபாய் நோட்டுக்கு 101 வயசு ஆகிறதாம்.

1910 வாக்கில் பிரிட்டிஷார் காலத்து ரூபாய் நோட்டுகளில் தமிழ் உள்பட எட்டு மொழிகள் இருந்தனவாம். இந்தி இல்லை. 1953-க்குப் பிறகு தான் இந்தி மொழி ரூபாய் நோட்டுகளில் இடம் பிடித்தனவாம். :)

கூகுள் தரும் சேதி இது. நீங்கள் கேட்டதால் தான் இதுவும் தெரிந்தது. நன்றி.

ஜீவி said...

@ கோமதி அரசு (1)

வியாபார உலகத்து மனிதர்கள் தங்களுக்கு சாதகமாகவே வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் பழக்கப்பட்டவர்கள். அது அவர்கள் மைண்ட் செட்டப். சொல்வதற்கு எதுவுமில்லை.

ஜீவி said...

@ கோமதி அரசு

தொடரின் தொடர்ச்சி பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருந்தவர்கள் ஜட்ஜ் வீட்டம்மா.

நெல்லை சரியாகச் சொல்லி விட்டார்.

ஜீவி said...

@ கோமதி அரசு (3)

இதழ்களைச் சுடச்சுட படித்து சுற்றுக்குக் கொடுத்து பைண்டு பண்ணி.. மூன்றாவது சொன்னது வரம் தான். இப்பொழுது கூட பழைய இதழ்கள் பைண்டிங்குகள் கூட நிறைய கைவசம் இருக்கின்றன.

நேற்று குமுதம் பைண்டிங்கில் ஒரு விஷயம் படித்தேன். மதுரையில் இந்திரா காந்தி அவர்களைத் தாக்க தீய சக்திகள் முயன்ற பொழுது தலையணைகளால் வீசிய கற்களைத் தடுத்து அவரை எப்படி பாதுக்காப்பாக அழைத்துச் சென்றார்கள், பழ. நெடுமாறன் அவர்கள்
தடுத்தாண்டு தான் காயம் பட்டது, மருத்துவ மனையில் இந்திரா அவரைப் பார்த்து, 'மகனே! என்னைக் காப்பாற்றினாய்!' என்று நன்றி சொன்னது-- இதெல்லாம் இன்றைய அவரது பேரனுக்குக் கூட தெரியாத விஷயங்கள்...

பழைய இதழ்கள் சரித்திரப் புதையல்கள்!

நெல்லைத்தமிழன் said...

//எல்லா பத்திரிகைகளும் வாசிக்க வீட்டுக்கு கொண்டு வந்து தருகிறார்கள்.// - இங்கு வந்த புதிதில், ஒருவர், இங்கு லெண்டிங் லைப்ரரி வைத்திருக்கிறேன்... எல்லாப்புத்தகங்களும் தருகிறேன் (பத்திரிகைகள்). 200 ரூபாயிலிருந்து 700 ரூபாய் வரை வெவ்வேறு விதமாக மாத சந்தா இருக்கு என்றார். எனக்கு ஆசை (நான் அவ்வளவு வேகமாகப் படிப்பவன்). என் மனைவியும் பசங்களும், அதெல்லாம் வேண்டாம், யார் யார் புத்தகங்களை எங்கெங்கு வைத்துப் படித்தார்கள் என்று யாருக்குத் தெரியும் என்று சொல்லிவிட்டார்கள். 30+ வருடங்களுக்கு முன்பு அப்படி இல்லை என்று நினைக்கிறேன்.

நெல்லைத்தமிழன் said...

எனக்கும் யாராவது இந்த மாதிரி பைண்ட் செய்யப்பட்ட நாவல்கள் (அதிலும் குறிப்பா குமுதம் இல்லைனா விகடன்) கொடுக்கமாட்டாங்களான்னு பார்க்கிறேன்.

கோமதி அரசு மேடம் அதற்கு ஒரு முறை, அவ்வளவு ஆசையாக பைண்ட் பண்ணினதை யாராவது கொடுப்பார்களா என்று சொல்லிவிட்டார்....

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன் (2)

என்னைப் பொறுத்த வரையில் reference-க்காகத் தான். எந்த நேரத்தில் எந்தக் குறிப்பு தேவைப்படும் என்று சொல்ல முடியாது. என் வீட்டு லைப்ரரியில் இருக்கும் புத்தகங்களை நானே இன்னும் முழுமையாகப் படித்ததில்லை.

Bhanumathy Venkateswaran said...

அனுபவங்களை சிறப்பாக பகிர்ந்து கொள்கிறீர்கள்.

Bhanumathy Venkateswaran said...

நான் ஒரு முறை நான் படித்தவற்றில் சிறப்பானவை என்று தோன்றிய சிறுகதைகளை பைண்ட் பண்ணினேன். சிறிது நாட்கள் கழித்து அவைகளில் சிலவற்றை அந்த தொகுப்பில் சேர்த்திருக்க வேண்டாம் என்று தோன்றியது.

அப்போதெல்லாம் கோடை விடுமுறையில் ஊருக்குச் செல்லும் பொழுது தொடர் கதைகளை பைண்ட் பண்ணி வைத்திருக்கும் மாமிகளிடம் கெஞ்சி புத்தகள்கள் வாங்கி படித்திருக்கிறேன். சிலர் அவர்கள் வீட்டிலேயே உட்கார்ந்து படித்து விட்டு தர வேண்டும். என்பார்கள்.

ஜீவி said...

@ பானுமதி வெங்கடேஸ்வரன்

புத்தகங்களை வாங்கினோம் என்றால் அவற்றை வாசிக்கிறோமோ இல்லையோ, பொறுப்பாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மனதின் ஒரு மூலையில் இருந்தாலும் அதை செயல்படுத்துவதில் சுணங்கிப் போகிறோம்.

ஸ்ரீராம் தன்னிடமிருந்த லா.ச.ராமாமிர்தம் கதைத் தொகுப்பைக் கொடுத்து எவ்வளவு காலம் ஆகிறது தெரியுமா?.. இரண்டு வருடங்களுக்கு மேலாக இருக்கும். இன்னும் நன்றியுடன்
திருப்பிக் கொடுத்த பாடில்லை.

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா! நடமாடும் நூல்நிலையம் செம இன்ட்ரெஸ்டிங்க் ஐடியா! சூப்பர் அண்ணா. இப்படி யாராவது இப்ப செய்ய மாட்டார்களா என்று எனக்குத் தோன்றியது.

அந்த உறவுக்காரப் பையன் வந்தது எதற்கு என்று தோன்றிவிட்டது. உங்களை வேலையிலிருந்து நீக்கினாலும் அதைவிட உங்களுக்கு மிகவும் பிடித்தமான இந்த நடமாடும் நூலகம் மிகவும் ஆத்மார்த்தமாகச் செய்திருப்பீங்க...

உங்களின் ஒவ்வொரு அனுபவமும் ஆஹா போட வைக்கிறது.!!

கீதா

Related Posts with Thumbnails