மின் நூல்

Friday, November 22, 2019

மனம் உயிர் உடல்

20.   மனம்  நம்  தோழன்

பொதுவாக எல்லோருக்கும் தாங்கள் விரும்புவதை அடைய வேண்டும் என்ற ஆசை ஏற்படும்.   அடைவது இருக்கட்டும். ஒன்றை அடைய வேண்டும் என்ற  அந்த விருப்பம் ஏற்படுவது எப்படி?

சொந்தத்தில் வீடு வாங்க வேண்டும்  என்று என் நண்பன் ரமணிக்கு ரொம்ப நாளாக ஆசை.  சமீபத்தில்   என் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்திருந்தவன்   என்னிடம் "இந்த மாதிரி நிறைய  கிரகப்பிரவேசத்திற்கு வந்தே, எனக்கும் ஒரு வீடு வாங்க வேண்டும் என்று  மனதில் ஆசை ஏற்பட்டு விட்டதடா." என்றான்.

"அப்படியா?.. உன்னோட மனசு தானே ஆசைப்பட்டது.. உன் மனசே அந்த ஆசையை நிறைவேற்றி வைக்கும், பார்.." என்றேன்.

"என்னடா இப்படி சொல்லிட்டே?  இந்த விஷயத்தில் ஒருவர் மனசு என்ன செய்யும்?" என்று ஆவலோடு கேட்டான்.

"தனக்கு  ஆசை ஏற்பட்டதை எப்படி நிறைவேற்றிக் கொள்வது என்று உன் மனசுக்கேத் தெரியும்... அது  அப்பப்போ இந்த விஷயத்தில் சொல்ற ஆலோசனைகளை மட்டும் கவனமா கேட்டுக்கோ.. அதன் படி நட.  அது போதும்.. கிட்டத்தட்ட வீடு வாங்கிட்ட மாதிரி தான்.." என்றேன்.

அவனுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.  "தேங்கஸ் டா.   நீ கூட உன் மனம் தான் ஆசைப்பட்டு இந்த வீட்டை வாங்கியிருக்கையா?" என்றான்.

"என் கதையும் அதாண்டா.. நியாயமான விஷயத்திற்கு ஆசை படும் மனசை மட்டும் ஏமாத்தாதே.. அது சொல்றபடி நடந்துக்கோ.." என்றேன்.

"நீ இவ்வளவு தூரம் சொல்றத்தே கோட்டை விடுவேனா?.. அப்படியே நடந்துக்கறேன்..  ஏதாவது சந்தேகம்ன்னு வந்துட்டா,  உன் வீட்டு வாசல்லே தான்  வந்து நிப்பேன்..  இந்த விஷயத்திலே ப்ளீஸ் ஹெல்ப் பண்ணூடா.." என்றேன்.

"உனக்கு இல்லாமலாடா?..  யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்.." என்றேன்.

ஒரு வாரம் ஓடிப்போனதே   தெரியவில்லை.   ஒரு  ஞாயிற்றுக்கிழமை.   ரமணி  என்னைப் பார்க்க வந்திருந்தான்.

"என்னடா, ரமணி?  உன்  வீட்டுக் கனவு என்னாயிற்று?" என்றேன்.

"அதைச் சொல்லத்தாண்டா வந்திருக்கேன்.." என்று சொல்லிச் சிரித்தான்.
அவன் முகத்திலேயே உற்சாகம் பொங்கியது..

"உன் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு  வந்த முகூர்த்தம்  தான் எல்லாம்.  அடுத்த  நாள் என் மனைவி பேப்பரில் வந்த ஒரு  விளம்பரத்தைக் காட்டினாள்.  இடத்தைப் போய்ப் பார்த்தோம்.  பில்டரும் பிரபலமானவர்.  நிறைய கட்டிடங்களைக் கட்டி இருக்கிறார்.   விசிட்டர்ஸ் ரூம்லேயே  டாக்குமெண்ட்களின்  ஜெராக்ஸ் காப்பி  எல்லாம் வைத்திருந்தார்கள்.   அந்த அளவில் எல்லாம் திருப்தியாக இருந்தது..   அதனால் அட்வான்ஸ் பணம் மட்டும் கொடுத்து  ஒரு அப்பார்ட்மெண்டை நிச்சயித்து விட்டு வந்திருக்கிறோம்..  ஒரே வாரத்தில் இப்படி ஒவ்வொன்றாக வரிசைஆக எப்படி நடந்தது என்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது " என்றான் முகம் நிறைந்த சந்தோஷத்துடன்.                                                                                       

"நல்லது, கெட்டது என்றில்லை.   நம் மனம் மட்டும் எந்த ஒரு  விஷயத்திலும்  ஆழ்ந்து குவிந்து விட்டால் இப்படித் தான்.  எல்லாம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நடக்கும்.." என்று நண்பனுக்கு பதில் சொல்லி விட்டேனே தவிர இதைப் பற்றியே அன்று பூராவும் யோசனை நீண்டது என்னவோ உண்மை.

ள் மனம்,  வெளி மனம் என்ற வார்த்தைகள் எல்லாம் நம்மில் பலருக்குத் தெரிந்தது தான்.  மனசில்  நெஜமாகவே அப்படி ஏதும் தனித்த பிரிவுகள் இல்லை.   நம் மூளையின்  ஆயிரம் கோடி   நியூரான்களின் இணைப்பைத் தான் அவற்றின் சில செயல்பாடுகளை விளக்கிச் சொல்வதற்காக அப்படிப் பிரித்துக் கொள்கிறோம். 

ஒரு பிரிட்ஜ் வாங்க வேண்டும் என்று மனசில் நினைப்பு அலைபாய்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  தானாக அலைபாயவில்லை.  இன்னொரு வீட்டில் இருக்கும்  பிரிட்ஜையும் அதன் உபயோகத்தையும் பார்த்த பிறகு நமக்கும் இப்படி ஒன்று  இருந்தால் என்ன என்ற  நினைப்பின் உருவாக்கத்தை   மனம் கொள்கிறது.  ஆரம்பத்தில்  கொஞ்ச நாட்கள் ஏற்படும் எந்த எண்ணமும் மனதில் ஊறப் போட்ட ஊறல் நிலையிலேயே இருக்கும்.  தேவையின் எண்ணத்தின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க  வாங்கியே ஆக வேண்டும் என்ற உறுதி பிறக்கும்.  உடனே தான் இந்த வெளி மனம் தன் வேலையை ஆரம்பிக்கும்.  சந்தையில் இருக்கும் பிரிட்ஜ் தயாரிப்பாளர்களில் லிஸ்ட்,  அவற்றின்  தர வரிசை,  நமக்கு தோதுப்பட்ட விலைக்கான தேர்வு,  மொத்தப்  பண பட்டுவாடாவா - இல்லை இன்ஸ்ட்டால்மெண்ட்டா போன்ற எல்லா விவரங்களையும் இந்த  வெளி மனசு தீர்மானித்து சேகரித்து விடும்.

இன்னொன்று உள் மனம் இல்லையா?..  இது அல்லாவுதீன் அற்புத விளக்கு மாதிரி..  அளப்பரிய சக்தி ஆற்றல் கொண்டது.  வெளிமனம் மாதிரி தர்க்க ரீதியாக அலசத்  தெரியாது.  அதனால் வெளிமனம் என்று நாம் அழைக்கிற நியூரான்களின் சேர்க்கைப் பகுதி எந்த விஷயத்தையும்  அலசி ஆராய்ந்து உள்மனத்திற்கு  சித்திர வடிவில் தகவல் தெரிவித்து நினைப்பை நடத்தி வைக்கிறது.  இதெல்லாம் பொதுவான லோகாயதமான செயல்பாட்டிற்கு.

ஆனால் உள்மனம் தன்னுள் புதைத்துக் கொண்டிருக்கும்  புதையல்களின் சமாச்சாரமே வேறே.   அன்றாடம் நாம் செயல்படும் செயல்பாடுகளின் களம் தான் உள்மனத்தின் ஆரோக்கியத்திற்கு அடித்தளம்.   இன்பம், துன்பம், ஏமாற்றம், கசப்புணர்வு,  அன்பு, கோபம்,  வெறுப்புணர்வு, காமம் போன்ற அனுபவிப்புகள் ஆழமாக உள்மனத்தில் புதைக்கப்படுகின்றன.

நமது அனுபவிப்புகளாக சில விஷயங்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம்.  உண்மையிலேயே உள் மனதின் அனுபவங்களாகத் தான் அவை  ஆகின்றன.    அந்த அனுபவிப்புகளின்    சாரம் பிடித்திருந்தால் வேட்கையாகவும் 
பிடிக்கவில்லை என்றால் வெறுப்பாகவும்   உள் மனம் என்று நாம் பெயர் சூட்டியிருக்கிற நியூரான்களின் ஆக்கிரமிப்பு பகுதியில் உணர்வுப் படிமங்களாகப்  படிகின்றன.   வேட்கைகள்  தகுந்த சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருக்கும்.  சந்தர்ப்பம் அமைய ஏங்கும்.  அப்படியான சந்தர்ப்பம் கிடைத்தால் வெளிமனத்தின் தடுப்பு வேலியையும் நொறுக்கி நினைப்புகளை சாத்தியமாக்கும்.  மீண்டும் மீண்டும்  அப்படியான அனுபவிப்புகளுக்கான ஆசையை  கிளர்த்திக் கொண்டே இருக்கும்.   சில நேரங்களில் வெளிமனம்  தான் பெற்ற அனுபவ அறிவு ஞானத்தில்  உள் மனத்தின் வேட்கைகளை சமனப்படுத்துவதும் உண்டு. அதைக் கேட்டுக் கொண்டு உள்மனம் சமாதானம் அடைவதும் உண்டு.

வேட்கை என்பது ஒரு விஷயத்தை   செயல்படுத்துவதில் கொண்டுள்ள தாகம்.   வேட்கை என்பதில் நல்லது, கெட்டது போன்ற பிரிவுகள் உண்டு.  யாருக்கு நல்லது  கெட்டது என்றால்  செயல்படுகின்ற கர்த்தாவிற்கு.  அதாவது செயல்படுகின்றவனுக்கு. 

கண் போன போக்கிலே  கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன  போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

---  போன்ற இதோபதேசங்கள்  உள் மனத்திற்குத் தான்.   அதனால் உள் மனத்தில் நாம் விதைக்கத் துடிக்கும் விதைகளில் கவனம் கொண்டிருக்க வேண்டும்.

(வளரும்)


9 comments:

G.M Balasubramaniam said...

ஆசை இருக்கிரது தாசில் பண்ண. அதிர்ஷ்டமிருக்கிறது கழுதை மேய்க்க என்றும் சொல்வது உண்டு

ஸ்ரீராம். said...

உள்மனதில் உள்ளவற்றை எல்லாம் வெளிமனம் வெளிப்படையாக வெளியில் சொல்ல அனுமதிக்குமா?  ஆழ்மன ஆசைகளை எப்போதும் வெளிமனம் அறிந்திருக்குமா?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

விதைக்கத் துடிக்கும் விதைகளில் கவனம் செலுத்தவேண்டும்...இது ஒவ்வொருவரும் மிகவும் கவனமாக செயல்படுத்தவேண்டிய ஒன்று. நானும் முயற்சி செய்து வருகிறேன்.
தமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.

ஜீவி said...

@ GMB

இதே மாதிரி மீசை நரைத்தாலும்... என்று ஒரு வழக்கு உண்டு.

எதுகைக்காக சொல்லியிருப்பார்களே தவிர நடைமுறைக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை.. :))

ஜீவி said...

@ ஸ்ரீராம்

வெளிமனத்தின் ஆளுகையில் உள் மனதை வழி நடத்தலாம். அதற்கு வெளி மனதை நம் ஆளுகைக்குக் கொண்டு வர வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தான் வரவிருக்கும் தியானத்திற்கான அடிப்படை.

பொதுவாக தியானங்கள் என்பதை எதற்காக செய்கிறார்கள் என்று யாரிடமாவது கேட்டு அல்லது படித்துத் தெரிந்து கொண்டதுண்டா?

உங்கள் பதில் இந்தத் தொடருக்கு உதவும். அதனால் தான் கேட்கிறேன்.

நெல்லை இதற்கான பதிலைச் சொன்னால் கூட தேவலை.



ஜீவி said...

@ Dr. B. Jambulingam

தங்கள் விக்கிபீடியா முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். முயற்சி திருவினையாக்கும் என்பது பேராசான் வாக்கு. அருள்வாக்குகள் என்றுமே அருளைச் சொரியாமல் இருந்ததில்லை. மீண்டும் வாழ்த்துக்கள், ஐயா.

வே.நடனசபாபதி said...

எல்லாவற்றுக்கும் வெளி மனம் ஆசைபட்டாலும் ‘விரலுக்கு தகுந்த வீக்கம்’ என்பதுபோல் நம் சக்திக்கு எது முடியுமோ அதைத்தான் உள் மனம் அங்கீகரிக்கும் என நினைக்கிறேன். வெளிமனதின் ஆசைக்கு உள்மனம் கடிவாளம் போடுகிறது என்பது சரியா? தங்கள் கருத்தை அறிய காத்திருக்கிறேன்.


ஜீவி said...

@ வே. நடன சபாபதி

வெளிமனத்திற்கு ஆக்க சக்தி கிடையாது. ஆனால் உள்மனத்திற்கு அளப்பரிய ஆக்க சக்தி உண்டு என்ற அடிப்படையில் நாம் செயல்படும் காரியங்கள் அமைகின்றன.

வெளிமனம் எதையும் அலசி ஆராய்ந்து படமாக உள் மனத்திற்கு அனுப்பி வைக்கிறது. வெளிமனம் தீர்மானித்து விட்டால் அதை உள்மனம் செயல் வடிவாக்கி விடும். அதனால் வெளிமனம் நம்மை ஏமாற்றி விடாமல்
நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதில் நாமென்று எதுவுமில்லை.. இருந்தாலும் வெளிமனத்தை இப்படித் தான் இருக்க வேண்டும் என்று உருவாக்கம் சக்தியை நாம் பெற வேண்டும். கண்டதெற்கெல்லாம் ஆசைப்படும் வெளிமனத்தை நம் கண்ட்ரோலுக்குக் கொண்டு வருவதே இதற்கான வழி.

நம் மனமே நாம், நாமே நம் மனம் என்பது ஒரு குழப்பமான சூத்திரம் மாதிரி வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும் சில உறுதியான சக்தியை உள் மனத்திடமிருந்து பெற்று வெளிமனத்தின் சபலங்களை அடக்கி ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்.

அந்தக் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான உபாயங்களைக் கொண்டது தான் இந்த தியானம். அந்த அந்த பகுதி வரும் இதையெல்லாம் தெளிவாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.

நன்றி, ஐயா.

கோமதி அரசு said...

//உள் மனத்தில் நாம் விதைக்கத் துடிக்கும் விதைகளில் கவனம் கொண்டிருக்க வேண்டும்.//

எப்போதும் எந்த நேரத்தில் இந்த கவனம் அவசியம்.

மிக அருமை.

Related Posts with Thumbnails