மின் நூல்

Tuesday, April 14, 2020

தமிழ் பத்திரிகைகளின் வாசிப்பு அனுபவம்

இது ஒரு விவாத்திற்கான பகுதி.  

சொல்லப் போனால் எங்கள் பிளாக்  வாட்ஸாப்  க்ரூப்பில்  தனி நபர்களாய்  பேசியதின் தொடர்ச்சி..  இந்த மாதிரி விஷயங்களைத் துண்டு துண்டாக தொடர்பு இல்லாமல்  கிடைத்த இடைவெளியில்  ஆளாளாக்கு பேசினால் அதற்கு கோர்வையான ஒரு தோற்றம் கிடைக்காது என்பதினால்  ஒரு பதிவாக  அந்த விவாதத்தின் தொடர்ச்சி இங்கு தொடரப்பட்டிருக்கிறது.   

அந்த விவாதத்தில் பங்கு கொண்ட அன்பர்களையும்   இதை வாசிக்க நேரும் மற்ற நண்பர்களையும்  இந்தப் பகுதியைத் தொடரக் கேட்டுக் கொள்கிறேன்.   ஒரு விஷயத்தை விவாதிக்க ஒருவர் ஆரம்பித்தால்  அதன் தொடர்ச்சியாக அதே விஷயத்தை விவாதித்து அதற்கு ஓரளவு   தீர்வோ முடிவோ கிடைத்த பின்பு அடுத்த விஷயத்தை விவாதிக்கக்  கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்ந்து விவாதத்தில் பங்கு கொள்ளவிருக்கும் அருமை நண்பர்களுக்கு  என் முன்னான  நன்றி.  வாருங்கள், நண்பர்களே!..


மிழில்  நெடுங்காலமாக  வெளியீட்டீல் இருந்து வரும்  பத்திரிகைகள்   ஆனந்த விகடன்,  குமுதம்,   கல்கி.   இந்த மூன்று பத்திரிகைகளோடு  தினமணிக் கதிர்,  குங்குமம்
ஆகிய பத்திரிகைகள் பிற்காலத்தில் சேர்ந்து கொண்டன.
இதே கால கட்டத்தின் பிற்பகுதியில்  சாவி,  இதயம் பேசுகிறது என்று இதே பாணியில் சின்னச் சின்ன மாற்றங்களோடு இன்னும் சில குட்டிப் பத்திரிகைகள்.

பொதுவாக  இந்த ஐந்து பத்திரிகைகளில்  எழுதியவர்கள்,  அல்லது  இந்த  ஐந்து பத்திரிகைகளால்  ஆசிர்வதிக்கப்பட்டு எழுத வாய்ப்பு  கிடைத்தவர்கள் தான்  தமிழ்  எழுத்தாளர்கள் என்று கருதப்படும்  ஒரு பொய்யான  தோற்றம் வழக்கில் இன்றைக்கும்  இருந்து வருகிறது.

இந்த ஐந்து பத்திரிகைகளை  வாசித்தவர்கள் தாம் பெரும்பாலான பத்திரிகை வாசகர்கள் என்பதினால்  இந்தப் பத்திரிகைகளில் எழுதியவர்களைத் தவிர பிற எழுத்தாளர்களை  இயல்பாகவே  தெரிந்து கொள்ள  முடியாமல் போயிற்று.

இந்த ஐந்து பத்திரிகைகளும்  வெவ்வேறு விதமான உள்ளடக்கங்களை,  வெவ்வேறு பாணிகளைக் கொண்டிருந்தவை.    இதைப்  பாமரத்தனமாகச் சொல்ல வேண்டுமானால்,   ஒரு  சிறுகதை என்றால்  இந்தப் பத்திரிகைக்குத்  தான் இந்தக் கதை பொருத்தமாக இருக்கும்  என்று  கணிக்கும் அளவுக்கு அல்லது இந்தப் பத்திரிகைக்கு  என்றால் இந்த மாதிரி தான் எழுத  வேண்டும் என்று  தீர்மானிக்கும் அளவுக்கு  அவற்றின் பாணிகள் இருந்திருக்கின்றன.

அவை இப்படியெல்லாம் தங்களிடம்  வேறுபாடுகள் கொண்டிருந்தாலும்,  பொதுவாக வாசகர்களின்  வாசிப்பு அனுபவத்தை ஒரு பொழுது போக்கு அம்சத்தில்  கொண்டு போய்  இணைப்பதில் இந்தப்  பத்திரிகைகள் தம்மிடையே ஒருமித்த இணைப்பைக்  கொண்டிருந்தமை தான்  இதில் வேடிக்கை.   சமூகத்தின் நலனுக்காக  அதன் மேம்பாட்டிற்காக  சுதந்திரமான   சோதனை முயற்சிகளை எழுத்தில் மேற்கொள்ளத்  துடிக்கும் எழுத்தாளன்  இந்த  நான்கு பத்திரிகைகளை இயல்பாகவே தவிர்த்து விடுகிற நிலை;   இல்லை  எனில், அப்படியான கதைகளை  ---புதுமைப்பித்தன், விந்தன் போன்றோர் எழுதிய மாதிரியான-- கதைகள் படைப்பதைத்  தவிர்த்து விடுவது  தான் புத்திசாலித்தனம் என்று நினைப்பது.

இது ஒரு விபத்து.   இப்படித் தான்  எழுத்தாளன் எழுத வேண்டும்  என்று ஒரு வட்டம் போட்டு தீர்மானிக்கப் பட்டு  விடுவதால்  அந்த வட்டத்திற்குள் தன்னை அடைத்துக் கொள்கிற மாதிரி தான்  எழுத வேண்டிய சுய கட்டுப்பாடு எழுதுகிறவனுக்கு  ஏற்பட்டு விடுகிறது. 

வாசகனுக்கோ  இந்த நாலு பத்திரிகை  உள்ளடக்க எழுத்தைத் தாண்டி வாசிக்க ஏதும் இல்லை  என்றாகிவிடுகிறது.  இதையே தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால்  இப்படியான வாசிப்புக்கே  கோடிக்கணக்கான தமிழக வாசகர்களைப்   பழக்கப்படுத்தியும், வாசகர்கள் இந்த வாசிப்புக்கே  பழக்கப்பட்டும் போய் விட்டார்கள்  என்பதே
உண்மை.

சுஜாதா உட்பட  தமிழகத்தில் வாழ்ந்த பத்திரிகை எழுத்தாளர்கள்  அத்தனை பேரும்  இப்படியான உறவைப் பேணிக் கொண்டு தான் பத்திரிகைகளில் எழுதினார்கள். சுஜாதாவிற்கு இருந்த ஆற்றலுக்கு  வெகு பிரமாதமான சிறுகதைகளை அவர் படைத்திருக்கலாம்.   கணேஷ்-- வசந்தை வைத்துக் கொண்டு இப்படிப்பட்ட  குழந்தைத் தனமான மர்மக் கதைகளை எழுதுவதைத் தான் வாசகர்கள்    விரும்புகிறார்கள் என்றும்,  அதையே உண்மையாக்கியும்  அவரை உபயோகப்படுத்திக் கொண்ட இந்தப் பத்திரிகை உலகம் தன் அழிச்சாட்டிய போக்கில் வெற்றி கண்டிருக்கிறது.   தனது சுயசரிதை போலவான தொடருக்குக் கூட 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்'  என்று வாசகர்களை சுண்டி இழுக்கக் கூட தலைப்பு வைக்கக்  கூடிய நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

அவர் ஆளுமை ஒரு குடத்தில் அடைக்கப்பட்டு குறுகிப் போணதே  நடந்த கதை.  பாவம்,  அவர்  தனது மிகச் சிறந்த  கட்டுரைகளில் தன் அறிவுப்  பசியைத் தீர்த்துக் கொண்டார்.

ஆகப்பெரிய  ஜெயகாந்தன்?.. அவருக்கும் இந்த நிலை தான்.  தனது  நூல் ஒன்றிற்கான  தன்னுரையில்  இப்படி எழுதுவார்:   'இந்த அளவில் தான் வட்டாட வேண்டும் என்ற நிலை;  இதை மீறிப் போனால் உறவு தகர்ந்து போகும்'  என்று.

'ஆ--ஊ'ன்னா அசோகமித்திரன்  என்கிறார்கள்.  அவரும்  இந்தப் பெரும் பத்திரிகைகளால் புறக்கணிக்கப்பட்டவர் தான்.  இத்தனைக்கும் ஜெமினி ஸ்டூடியோவில் பணியாற்றியவர்.   சிறு பத்திரிகைகள் மூலம்  கல்லிடுக்கில் பிளந்து கொண்டு மலரும் ரோஜாவாய் மலர்ந்தவர்  அவர். 

இப்படியான எல்லா எழுத்தாளர்களும் தங்களை சமரசப்படுத்திக் கொள்ளாமல்  தாங்கள் ஏற்றுக் கொள்கிற சிறு பத்திரிகைகளில்  எழுதியிருக்கிறார்கள்.   தனக்காகவே ஒரு பத்திரிகை கிடைக்காதா என்றும் நினைத்திருக்கிறார்கள்.  ஜெய காந்தனின் 'ஞானரதம்'  தோற்றமும்   இப்படிப்பட்டது தான்.

தமிழகத்தில் சிற்றிதழ்கள் பலவும்  இப்படியான  தனக்கான அல்லது தங்களுக்கான  எழுத்துக்காகத் தான் ஆரம்பம் கொண்டவை.    பெரும்பத்திரிகைகளின்  சட்டாம்பிள்ளைத் தனத்திலிருந்து விடுபட்ட சுதந்திர குரல்கள் அவை.

இந்த நாலு  'பெரிய'  பத்திரிகைகள்  வந்த காலத்தும்  தமிழகத்தில்  நாவல்களுக்கென்று  கி.வா.ஜ. ஆசிரியராய் இருந்த  'கலைமகள்' தனித்தன்மையுடன்  திகழ்ந்தது.  அகிலன் போன்றவர்களைத் தேடிக் கண்டுபிடித்தது அந்தப் பத்திரிகை தான்.  தமிழின் மிக உன்னதமான எழுத்துக்களை  கலைமகள்  பிரசுரித்திருக்கிறது.   புதுமைப் பித்தன்  கதைகளை கூட அது  தயக்கத்துடன்  தவிர்த்ததில்லை.

அதே மாதிரி  எழுத்தாளர் விக்கிரமன் (வேம்பு) ஆசிரியராய் இருந்த  'அமுதசுரபி',  கும்பகோணத்திலிருந்து  வெளிவந்த  'காவேரி'  போன்ற பத்திரிகைகளைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.  இன்றும் பெரும் பத்திரிகைகளின் அழுத்தத்திலும்  அமுங்கிப் போய் விடாமல் மெல்லிசாக சுவாசித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

ஆக,  என்னதான்   சொல்ல வருகிறோம்?...

கன்ஸாலிடேட்  பண்ணிச் சொல்கிறேன்.

தமிழகத்தின் பெரும் பத்திரிகைகளால் முத்திரைக் குத்தப்பட்டவர்கள் தான்  தமிழ் எழுத்தாளர்கள் என்றும் திருப்பி திருப்பி அவர்கள்  எழுதியதை மட்டுமே சிலாகித்துப் பேசுவதும்  பாவம்.   அதைத் தாண்டி வருகிற  அறிவுத் தேடலை இந்தப்  போக்கு சிறைப்படுத்தும்.

சுஜாதாவை தாண்டி  யார் யார் எல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்று தேடி வாசித்துப் பாருங்கள்.

'இவர்கள்  எழுத்தெல்லாம்  படிக்க முடியலையே,  சார்!'  என்று சிலரது  முகச்சுணுக்கல்.   ஓரளவு  உண்மை தான்.  பழக்கப்பட்ட  பத்திரிகை எழுத்து முறை காலத்தின் மாற்றமாய் மாறிப் போய் விட்டது.   தன் போக்கில்,  கதாசிரியரே வரட்டுத்தனமாய் முழுக்கதையையும் சொல்கிற மாதிரி' என்று நிறைய அசட்டுத்தனங்கள் பெருகி விட்டன.  வாசகர்களுக்கு பழக்கப்பட்ட  மனசில் இருப்பதை வடிக்கும்  எழுத்துப் போக்கு , கதாபாத்திரங்களின் உரையாடலே இல்லாமல்  கட்டுரை போல நீண்டு கிடக்கிறது.  இப்படி ஏகப் பட்ட குறைபாடுகள்.  இருந்தும்  இவர்கள்  எதையோ ஆத்மார்த்தமாகச் சொல்ல முற்படுகிறார்கள்.  பெரும்பாலும் எளியவர்களின் குரல்கள் அவை.   முடிந்தால் சிரம்பட்டாவது வாசித்துப் பாருங்கள். இல்லையென்றால், விட்டு  விடுங்கள்.  பாதகமில்லை.
வண்ணதாசன்,  வண்ணநிலவன்,   நாஞ்சில் நாடன்,  எம்.வி. வெங்கட்ராம்,  சா. கந்தசாமி,  கு.ப. ராஜகோபாலன். பிச்சமூர்த்தி, நகுலன்,  சி.சு செல்லப்பா  --   என்று பழைய எழுத்து முறை பழக்கப்பட்ட  பெரும் பத்திரிகைகளில்  எழுதாத  ஒரு பட்டாளமே இருக்கிரது.  வாசித்துப் பாருங்கள்.  சுஜாதாவைத் தாண்டி இன்னொரு உலகம் இருப்பது தெரியும்.

நூற்றுக்கும் மேற்பட்ட புதுமைப்பித்தனின் சிறுகதைகளை அந்நாளில் இருந்த பெரும் பத்திரிகைகள் எதுவும் வெளியிடவில்லை.   கலைமகள் அவர் கதையை வெளியிட்டிருக்கிறது,  மணிக்கொடி,  சுதந்திர சங்கு, ஜோதிமணி,  ஊழியன், நந்தன் போன்ற சிறுபத்திரிகளே வெளியிட்டிருக்கின்றன.

'இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சி தானே?'  என்பார் புதுமைப் பித்தன்.   'நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா  ராமன்,  சினிமா நடிகை சீத்தம்மாள்,  பேரம் பேசும் பிரமநாயகம்  --  இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டு இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல்  காதல்,  கத்திரிக்காய் பண்ணிக் கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை,  நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கெளரவக் குறைச்சல் எதுவும் இல்லை'  என்பார் அவர்.

தி.  ஜானகிராமனின்  'அம்மா வந்தாள்'  நாவலை எந்த பெரும் பத்திரிகையும்  வெளியிடவில்லை.  'ஆண்--பெண்  உறவை எழுதுவது  இலக்கியமா?" என்று  கல்கியே ஜானகிராமனை குறை சொல்லிக் குறிப்பிட்டார்.   தி,ஜா.வின்  'மரப்பசு'  கூட  கணையாழியில்  தான் வெளிவந்தது.

எது  எப்படியோ  இலக்கியம்  எது என்பதைத் தீர்மானிப்பது வாசகன் தான்.    அது மட்டும் நினைவிருக்கட்டும்.

வாசகனுக்கு இலக்கியம் வாசிக்க வேண்டிய அவசியம் இல்லாது கூட  இருக்கலாம்.

ஆனால் இலக்கியம் என்பது எது என்று தீர்மானிக்க மட்டும் வாசகனுக்குத் தெரியாது இருக்கக்கூடது.

அந்த முடியாமை  ஒரு வார ஆயுசு கொண்ட  வாரப் பத்திரிகை வகையாறா பக்கங்களையே  புரட்டிப் புரட்டி குறுகிப் போகிற அறிவுச் சோர்வை ஏற்படுத்தி விடும்.
அதில் குப்பை கொட்டும்,  கொட்டிய  எழுத்தாளர்களை மட்டுமே  பேச வைக்கும்.

பதிவுலகே எனக்குப் போதும்  என்று முடங்கிப் போகும் போக்கை நிச்சயப்படுத்தலாகி விடும்.

இது   தான் இப்போது பேச வந்தது.

பின்னூட்டங்களில் தொடர்ந்து  பேசவும்  செய்யலாம்.


24 comments:

நெல்லைத்தமிழன் said...

நல்ல ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். சொல்ல வந்த கருத்தும் சுளீர் எனத் தாக்குகிறது. வெகுஜனப் பத்திரிகை எழுத்தாளர்களைத் தாண்டி நான் வாசித்ததில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர பெரும்பாலும் வாசித்ததில்லை.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க வாசகன் இலக்கியத்தை அருதியிட முடியும், ஆனால் அது மெஜாரிட்டி வாசகர்களாக இருக்க வேணும் என்பது அவசியமில்லை. வெகுஜன ரசிப்பு என்பதை மட்டும் கணக்கில் கொண்டால், நமக்கு சகலகலாவல்லவன், காலா தர்பார் போன்ற படங்களே சிறந்த சினிமாக்கள் விருது பெறுவதைப்போல் ஆகிவிடும்

ஸ்ரீராம். said...

ஆரம்பத்தில் ஜெயகாந்தன் தான் எழுதியவற்றில் எதையும் மாற்றக்கூடாது என்று சொன்னார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னர் அந்நிலை என்று மாறியதோ...

ஸ்ரீராம். said...

அந்நாளிலேயே பெயர்பெற்ற இந்த எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டிருந்த இதே பத்திரிகைகளில், இப்போது பெயரைச் சொன்னால் கூ நினைவுக்கு வருகிற மாதிரி சில எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். உதாரணம் ஏ ஏ ஹெச் கே கோரி, சார்வாகன், ஹேமா ஆனந்ததீர்த்தன்...

வல்லிசிம்ஹன் said...


அன்பு ஜீவி சார்,
இனிய புத்தாண்டுக்கான வாழ்த்துகள்.
தீவிரமான அலசல். உண்மைதான். எங்களது எழுத்து ரசனை இந்த
பத்திரிகைக்குள் அடங்கியது.
கலைமகள் எல்லார் வீட்டிலும் அனுமதிக்கப்
பட்டது.
கல்கி அடுத்தாற்போல. அதற்குப் பிறகு விகடன். கடைசியில் குமுதம்.
இப்பொழுது எல்லாமே மாறிவிட்டது.
கலைமகள் அப்படியே இருக்கிறது என்று நினைக்கிறேன்.

எல்லாமே வேறு கைகளுக்குப் போய்விட்டதாமே.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அத்தனை எழுத்தாளர்களையும்
75 சதவிகிதம் படித்திருக்கிறேன்.
அவர்களுக்குள்
ஒரு வட்டம் சதுரம் போடப் பட்டது தெரியாது.
என்ன ஒரு பரிதாபம்:(
தொடருகிறேன் சார்.

சிகரம் பாரதி said...

பத்திரிகைகள் என்பது வேறு. சஞ்சிகைகள் என்பது வேறு. கல்கி, குமுதம் என்பதெல்லாம் சஞ்சிகைகள். தினகரன், மாலை மலர் போன்றவை தான் பத்திரிகைகள்.

சிகரம் பாரதி said...

படைப்புச் சுதந்திரம் படைப்பாளனுக்கும் வாசிப்புச் சுதந்திரம் வாசகனுக்கும் இருக்க வேண்டியது அவசியம். கல்கி, குமுதம் போன்றவை இதனை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றாலும் ஓரளவுக்காவது நிறைவேற்றியிருக்கின்றன. நிற்க, சிறந்தவை எவற்றுக்கும் முன்னுரிமை கிடைப்பதில்லை என்பது காலம் காலமாக நடப்பது தானே?

Bhanumathy Venkateswaran said...

நல்ல சப்ஜெக்ட்  எடுத்துக் கொண்டு அதை சிறப்பாகவும் அலசியிருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எழுத்தாளர்கள் பலரையும் படித்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். 

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தளம் என்பதானது விரிந்த எல்லையாக இருந்தால் மட்டுமே எழுத்தின் வீச்சினை உணரமுடியும். குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்து, கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டு, அவ்வாறு செய்வதுதான் சரி என்று போகும் நிலையை எழுத்துலகில் காணமுடிகிறது. இவ்வாறாக வரையறுக்கப்படுகின்ற எல்லைக்கு அப்பாற்பட்டு சென்று எழுத்தால் சாதிக்க முடியும். பிறர் அங்கீகரிக்கவேண்டும் என்பதில்லை. நம் எழுத்தை நாம் ரசிக்கும்போதே வெற்றி பெற்றுவிடுகிறது. அடுத்தவரின் அங்கீகாரம் என்பதை இங்கு கொள்ளவேண்டாம் என்று நினைக்கிறேன்.

வே.நடனசபாபதி said...

//எது எப்படியோ இலக்கியம் எது என்பதைத் தீர்மானிப்பது வாசகன் தான்.அது மட்டும் நினைவிருக்கட்டும்.//

ஐயா. நான் இந்த கருத்திலிருந்து மாறுபடுகிறேன். காரணம் இலக்கியம் எது என்று தீர்மானிக்க வாசகனுக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை என்பது என் கருத்து.

வெகுஜன பத்திரிகைகள் என்று சொல்லப்பட்டவை வெளியிட்டதைத்தான் வாசகர்கள் படிக்கவேண்டியிருந்தது. வாசகர்கள் மீது ஒரு குறிப்பிட்ட இரசனையை திணித்து அதை மட்டும் கொடுத்து வணிகம் செய்து வந்தன அந்த பத்திரிக்கைகள். வாசகர்கள் அவற்றை புறக்கணித்திருக்கலாம். ஆனால் வாசகர்களின் இரசனையை அவர்கள் ஏற்கனவே மாற்றி தன்வயப்படுத்திக் கொண்டதால் வாசகர்களால் அவற்றை புறக்கணிக்கமுடியவில்லை

எழுத்தாளர்களையும் குற்றம் சொல்ல இயலாது. ஏனெனில் அவர்கள் பத்திரிக்கைகள் விரும்புவதைத்தான் எழுதமுடியும். இல்லையெனில் அவர்களுக்கு வருமானம் கிடைக்காது. ஏனெனில் அவர்களும் வாழவேண்டுமல்லவா?

திரைப்படத்துறையிலும் இதுபோன்று இரசிகர்களின் இரசனையை சுத்தமாக மாற்றி குப்பை படங்களை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். (இது ஒரு பொதுவான கருத்து தான் ) இரசிகர்கள்/வாசகர்கள் விரும்புகிறார்கள் அதனால் இவ்வாறு செய்கிறோம் என்று சொல்வதெல்லாம் பம்மாத்து வேலை.

ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//நல்ல ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். சொல்ல வந்த கருத்தும் சுளீர் எனத் தாக்குகிறது. வெகுஜனப் பத்திரிகை எழுத்தாளர்களைத் தாண்டி நான் வாசித்ததில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர பெரும்பாலும் வாசித்ததில்லை.//

மனம் திறந்த வெளிப்பாடுகள்.

அந்த குறிப்பிட்ட எழுத்தாளர்களை இந்தத் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றே ஒவ்வொருவராக எழுதிக் கொண்டு வருகிறேன். வாய்ப்பு கிடைக்கும் பொழுது என் தளத்தில் வாசியுங்கள், நெல்லை.

//இதெல்லாம் ஒருபுறம் இருக்க வாசகன் இலக்கியத்தை அருதியிட முடியும், ஆனால் அது மெஜாரிட்டி வாசகர்களாக இருக்க வேணும் என்பது அவசியமில்லை... //

பத்திரிகை, வாசிப்பு பழக்கம் உள்ள எனக்குத் தெரிந்த பதிவுலக நண்பர்களுக்காக நான் சொன்னது அது. 'சுஜாதாவோடு நின்று விடாதீர்கள். அது உங்கள் வாசிப்பபு வளர்ச்சியை குருகலாக்கி விடும். சுஜாதாவை கடந்து வாருங்கள். இவர்கள் பற்றியெல்லாம் எழுதுங்கள். தமிழ் எழுத்துலகின் இருட்டுப் பகுதியை நாம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்' என்று விடுத்த அறைகூவல் அது.

இதையெல்லாம் எழுத ஆரம்பித்தால் யார் படிப்பார்கள் என்ற எண்ணம், வாசக வருகை குறைந்து விடுமோ அச்சம் எல்லாம் தடையாக இருந்து சிலருக்கு தடுக்கலாம். முதலில் நல்ல எழுத்துக்களின் -- அந்த எந்த சப்ஜெக்ட்டாக இருக்கட்டுமே -- வாசிப்பு பழக்கம் தனி நபருக்கு ஏற்பட ஏற்பட அதை தான் தன் பதிவுகளில் எழுதத் தோன்றும் என்பது என் எண்ணம்.

ஒன்று பார்த்திருக்கிறீர்களா, நெல்லை?.. குமுதம் மாதிரியான பத்திரிகைகளிலேயே
திடீரென்று பக்கா இலக்கிய விஷயங்களைப் பற்றி பேட்டி போல ஒரு பக்க அளவில்
-- வல்லிக்கண்ணனைப் பற்றி; இந்தத் தடவை ஞானபீட பரிசு பெற்றவர் -- என்று எந்த தலைப்பிலாவது ஏதாவது செய்வார்கள்..

இந்த மாதிரி விஷயங்களில் ஈடுபாடு கொண்ட 5% வாசகர்களும் குறைந்த பட்சம் தன் பத்திரிகையைப் புரட்டிப் பார்க்கவாவது செய்வார்களே, என்று தான்; இல்லை, இந்த மாதிரி விஷயங்களிலும் எங்களுக்கு அக்கறை உண்டு எனறு காட்டிக் கொள்வதற்காக.
வாசகர்களின் எந்தப் பகுதியையும் விட்டு விடக்கூடாது என்பதற்காக.

பெரிய ஜவுளிக்கடைகளில், 9 கஜம் புடவைகளும் இருப்பது மாதிரி; தைத்த நிலையிலேயே பஞ்சக் கச்சம் இருக்கிற மாதிரி..

அந்த மாதிரியாவது நமக்கு பழக்கமான பதிவர்கள் செய்தால் தேவலை.

எப்படியானும் நல்ல வாசிப்பு அனுபவங்கள் நம்மிடையே கூட வேண்டும் என்பதற்காகத் தான் இத்தனை பாடும், நெல்லை.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//ஆரம்பத்தில் ஜெயகாந்தன் தான் எழுதியவற்றில் எதையும் மாற்றக்கூடாது என்று சொன்னார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னர் அந்நிலை என்று மாறியதோ. //

ஆனந்த விகடனில் எழுத ஜெயகாந்தனை அழைத்த பொழுது "எனக்குத் தெரியப்படுத்தாமல் என் கதையில் எந்தப் பகுதியையும் நீக்கக் கூடாது.." என்பது தான் அவர் போட்ட முக்கியமான நிபந்தனை.

மஹாபாரதக் கதைகளில் வருமே ஒரு வரம் கேட்டாலே போதும், அதில் வேறு சிலவும் உள்ளடங்கியிருக்கும் என்று. அந்த மாதிரியான ஒரு நிபந்தனை இது.

நான் எழுதறதெல்லாம் எழுதுவேன், எதையும் நீக்காமல் நீ பிரசுரம் செய்ய வேண்டும் என்று இதற்கு அர்த்தமில்லை. நான் எழுதியதில் எதையானும் நீக்க நீ நினைத்தால், அதை எனக்குச் சொல்லி விட்டு என் அனுமதிக்குப் பிறகு அதை நீக்கலாம் என்பது தான். எழுதியவன் தன் எழுத்தின் மீது கொண்ட அக்கறை இது. கதையின் மத்தியில் எந்தப் பகுதியையாவது நீக்கப் போய் எழுதிய கதையின் உயிர்நிலையே போய் விட்டதென்றால் எனக்குத் தானே வருத்தம்? எனக்குச் சொல்லி விட்டுச் செய்தால் அதற்கு தகுந்த மாதிரி
மாற்றம் (modification) செய்து தரவும் எனக்கு வசதியிருக்கும் என்பதினால் இந்த நிபந்தனை.

இரண்டு பேருக்கான ஒரு நிபந்தனை என்றால் அதற்கு இரண்டு பகுதியிலும் யோக்யமாக இருக்க வேண்டும் என்பது நியாயவான்களின் குணமாக இருக்கும்.

அந்த மாதிரியே இரண்டு பகுதிகளிலும் இருப்பதற்காகத் தான் 'விகடனில் அச்சேறுவதற்கான எல்லை (limit) தெரிந்து 'இந்த அளவில் தான் வட்டாட வேண்டும் என்ற நிலை; இதை மீறிப் போனால் உறவு தகர்ந்து போகும்' என்கிறார். மிகுந்த பொறுப்புள்ள ஸ்டேட்மெண்ட் இது.

ஜெயகாந்தன் தன் கதைகளில் சில இடங்களில் ஒரு வரிக்குப் பின்னால் மூன்று புள்ளிகள் பொறிப்பது பழக்கம். எழுதுகிறவன் தான் எழுதுகிற சங்கதிக்கு ஒலிக்குறிப்பும் கொடுக்கிறான். இந்த வரி முடிகிற மாதிரி பாவ்லா காட்டிக் கொண்டு அடுத்த வரியையும் இழுத்துக் கொண்டு முடிகிறது என்று தெரியப்படுத்துவதற்காக. வாசகன் வாசிக்கும் பொழுது அதே மாதிரி வாசித்துப் பார் என்று கொடுக்கிற குறிப்பு இது.

ஜெயகாந்தனின் கையெழுத்துப் பிரதியைப் பார்த்த வாசன், "அந்த மாதிரியே அச்சில் எண்ணி மூணு புள்ளி வர்ற மாதிரி பாத்துக்கோப்பா.." என்பாராம். அவருக்கோ டெக்னிகலாக ஜெயகாந்தனுடன் போட்ட ஒப்பந்தத்தில் ஒரு அட்சாரம் பிசகக்கூடாது என்று எண்ணம்!...

இரண்டு பக்கமும் கெளரவஸ்தர்களாக இருந்தால் நிபந்தனைகளெல்லாம் ஒப்புக்கு போட்டுக் கொண்ட மாதிரி பல நேரங்களில் ஆகிவிடும்!..

நான் எழுதிக் கொடுத்த கதையில் சில இடங்களில் வெட்டி விட்டார்கள் என்று அழகாபுரி அழகப்பனோடு நானும் சண்டை போட்டிருக்கிறேன். கதைகளுக்குப் போடும் படங்களில் நேரும் தவறுதல்களையெல்லாம் சுட்டிக் காட்டியதும் உண்டு. பாவம், அவர்.. எதற்காக அப்படியான திருத்தம், படத் தவறுகள் எப்படி நேர்ந்தன. தனக்கும் இப்படி நேர்ந்ததையெல்லாம் சொல்லி விவரமாக இன்லெண்ட் லெட்டரில் எழுதுவார். அப்படி ஓரிரு கடிதங்களை அந்த அரிய நண்பரின் ஞாபகமாக இன்னும் வைத்திருக்கிறேன்.

அவ்வளவு தூரம் போவானேன்?.. 'கல்கியில் பிரசுரமான முதல் கதையில் சில பகுதிகளை வெட்டி விட்டார்கள் என்று அதற்குப் பிறகு கல்கிக்கு கதை அனுப்புவதையே கைவிட்டு விட்டேன்' என்று நம் அருமை நண்பர் ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி கூட சமீபத்தில் எழுதியிருந்தாரே, வாசித்தீர்களா?..

எழுத்தாள மனம் என்பது அனிச்சம் பூ போன்றது.

Thulasidharan V Thillaiakathu said...

மிகவும் ரசித்து வாசித்தேன். உண்மையை, யதார்த்தத்தை மிக மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கீங்க. எனக்கு வாசிப்பு அனுபவம் மிகவும் குறைவுதான். வலையுலகம் வந்த பிறகுதான் என் சிறு, இளம் வயதில் வாசிக்க ஆசைப்பட்டதை இப்போதுதான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன். அதுவும் வலையில் இலவசமாகக் கிடைப்பதை டவுன் லோடு செய்து வைத்துக் கொண்டு.

உங்களின் இந்தப் பதிவு நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறது. நீங்கள் சொல்லியிருப்பவர்களையும் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.

ஜெயகாந்தன் அவர்களின் கண்டிஷனில் எந்தத் தவறும் இல்லை. ஒரு படைப்பாளிக்கு எப்படித் தன் படைப்பில் மற்றவர் கை வைக்க மனசு வரும்? நாம் பெற்ற குழந்தை போல அல்லவா நம் ஒவ்வொரு படைப்பும்...

கீதா

இராய செல்லப்பா said...

ஆக, விஷயம், 'பெரிய பத்திரிகைகள் - சிறு பத்திரிகைகள்' என்ற அடிப்படையான வேறுபாட்டைப் பொறுத்ததே என்று ஆகிறது. இப்படியெல்லாம் நீங்கள் பெரிய பத்திரிகைகளைக் குறை சொல்லப்போய்த்தான் அவர்களே 'தீராநதி' என்றும் 'தடம்' என்றும் சிறு பத்திரிகைகளை ஆரம்பிக்க நேர்ந்தது. அதன் விளைவு என்னவாயிற்று?

'தடம்' நின்று போயிற்று. 'தீராநதி' வற்றிக்கொண்டே வருகிறது!

சிறு பத்திரிகைகளை நம்பி எந்த எழுத்தாளனும் பிழைக்கமுடியாது. அதை நடத்துபவர்களே பிழைக்கமுடிவதில்லை. எனவே இணையம் மற்றும் கிண்டில் போன்ற சுயபதிப்பு முயற்சிகளால்தான் எழுத்தாளர்கள் இனிப் பிழைத்தாகவேண்டும்.

வாசகன் எப்போதுமே அதிக சர்க்குலேஷன் உள்ள பத்திரிகைகளைத்தான் காசுகொடுத்து வாங்குவான். அவைதான் விலை மலிவாக இருக்கும். ஆகவே அதில் எழுதும் எழுத்தாளர்களுக்கு எளிதில் மவுசு வந்துவிடுகிறது. மாதம் முன்னூறு பிரதிகள் அடிக்கும்
சிறு பத்திரிகையால் எவ்வளவு எழுத்தாளர்களுக்கு சோறு போடமுடியும்?

இதுதான் வள்ளுவர் சொன்ன 'இருவேறு உலகத்து இயற்கை.' இது எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். நல்வாய்ப்பாக சமூக ஊடகங்கள் இலவசமாக நம்மைத் தேரில் ஏற்றிக்கொண்டு போகத் தயாராக உள்ளன. அதைப் பயன்படுத்திக்கொண்டு எழுத்தாளர்கள் தங்களைப் பலப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதே கண்கூடு.

-இராய செல்லப்பா, சென்னை.



ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

//அந்நாளிலேயே பெயர்பெற்ற இந்த எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டிருந்த இதே பத்திரிகைகளில், இப்போது பெயரைச் சொன்னால் கூ நினைவுக்கு வருகிற மாதிரி சில எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். உதாரணம் ஏ ஏ ஹெச் கே கோரி, சார்வாகன், ஹேமா ஆனந்ததீர்த்தன்...//

என் கட்டுரையே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. பெரும் பத்திரிகைகளைச் சிறப்பாக உபயோகப்படுத்திக் கொண்ட எழுத்தாளார்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். ஜெயகாந்தன், வையவன், இந்திரா பார்த்தசாரதி, நா.பா., ஜெகச்சிற்பியன், சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், இந்துமதி, வாஸந்தி என்று ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது... ஆனால் இவர்கள் எழுத்தை இந்தத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவோர் இல்லை என்பது தான் என் ஆதங்கம். எங்கள் பிளாக் போன்ற வாசகர் வாசிப்பு அதிகமுள்ள தளங்களில் இவர்கள் பேசப்பட்டால் கைதட்டக் கூடிய முதல் ஆளாக நான் இருப்பேன். அது இல்லை என்பது தான் சோகம்.

சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன் -- இந்த மூவரின் பிரமையைத் தாண்டி வந்தார்களா (தீர்களா?) என்று நீங்களே சொல்லுங்கள்.

ஏ ஏ ஹெச் கே கோரி -- குமுதத்தில் குமுதம் பாணிக்கேற்பவான நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார். என் கணிப்பு அவ்வளவே.

ஹேமா ஆனந்ததீர்த்தன் -- அந்நாளைய குமுதத்தின் ஆஸ்தான எழுத்தாளர். மொழியாக்க வல்லுனர். இவர் மொழியாக்கத்தில் 'தீப்பிடித்த கப்பலில் அம்மணியும் நானும்' என்ற உண்மை நிகழ்வின் விவரிப்பு நேர்த்தியை (மலையாளத்திலிருந்து தமிழுக்கான மாற்றத்தில்) பல வருடங்களுக்கு முன் குமுதத்தில் படித்தது இன்னும் நினைவிலிருக்கிறது. மற்றபடி உங்களைக் கவர்ந்த இவரது சிறப்பு படைப்பு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். அலசலாம்.

சார்வாகன் -- பிரபல அறுவை சிகித்சை நிபுணர் இவர். தொழுநோய்க்கான சிறுப்பு மருத்துவத்தில் தேர்ந்த டாக்டர். தனக்கிருந்த எழுத்தார்வத்தில் பல்வேறு தொழில்முறை பணிகளுக்கிடையேயும் எழுதியவர் இவர். நகுலன், சி.சு. செல்லப்பா போன்றவர்களின் அன்பைப் பெற்றவர். நகுலன் தான் தொகுத்த 'குருஷேத்திரம்' என்ற நூலில் இவரது படைப்புகளைச் சேர்த்திருக்கிறார். சி.சு. செல்லப்பா தனது எழுத்து பத்திரிகையில் இவரது கவிதைகளை வெளியிட்டிருக்கிறார். மொத்தத்தில் இவரை சீறாட்டியது சிறு பத்திரிகைகள் தாம்.

சாலிவாஹனன் என்று இன்னொரு சிறப்பான எழுத்துச்சிற்பி இருந்தார். இவர் அந்நாளைய 'சுதேச மித்திரன்' வார இதழில் நிறைய எழுதியிருக்கிறார். கலைமகளோடு மித்திரனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சுதேச மித்திரன் இதழின் பங்களிப்பு அற்புதமானது. பெரியவர் ஆர்வியின் 'திரைக்குப் பின்னால்' போன்ற நல்ல நாவல்களை வெளியிட்ட இதழ் அது.

ஆக, சிறப்பாக எழுதிய நல்ல எழுத்தாளர்கள் ஏன் நினைவு கூறப்படவில்லை என்பது தான் என் ஆதங்கம். தேடிப் படிக்கும் இன்றைய வாசகர்களுக்குக் கூட தட்டுப்படாமல் போனது ஏன் என்பது தான் கேள்வி.

பின்னூட்டங்கள் பதிலோடு முடிந்து விடுவதில்லை. உங்களுக்கு ஏற்படுகிற ஐயங்களைக் கேளுங்கள். உங்கள் தளங்களில் மறந்து போய் விட்ட தமிழ் எழுத்தாளர்களை அவர்கள் படைப்புகளுடன் நினைவு கொள்ளுங்கள்.

உங்களிடம் நான் வேண்டிக் கொள்வது இந்தப் பணி ஒரு இயக்கமாகவே நடைபெற வேண்டும்.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

கலைமகள் சவரட்சணை இல்லாத குழந்தை போல இளைத்துப் போயிருக்கிறது. அமுத சுரபி பரவாயில்லை. ஸ்ரீராம் க்ரூப்பின் போஷாக்கில் திருப்பூர் குமரனின் அயராத உழைப்பில் 'எழுத்து - எழுத்துலகம்' என்று நிறைய உள்ளடக்கங்களைத் தாங்கி வருகிறது.

மூன்றில் குங்குமம் பரவாயில்லை. கல்கியின் பழம்பெருமைகளை மீட்டெடுக்க யாருமில்லை போலிருக்கிறது. விகடன் டைஜஸ்ட் மாதிரியான முயற்சியில் சுலபமாக வாசிக்கக் கூடிய இயல்பான மொழி ஆளுமை இல்லாத அவஸ்தை. ஏதோ பிர்மாண்ட ஹாலிவுட் பட பங்கு கொண்டோரின் பெயர் பட்டியலை திரையில் பார்க்கிற மாதிரி ஒரு பக்கத்திற்கு பொடி பொடி எழுத்துக்களில் நிர்வாகக் குழுவினரின் பெயர் பட்டியல். பழைய விகடன் இல்லை; பத்திரிகையின் சைஸ் மாற்றியதிலிருந்து எல்லாமே அந்நியப்பட்டுப் போய்விட்டன. மகளிர் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்பவைகளில்
குங்குமம் குழும 'தோழி' எடுப்பாக இருக்கிறது. எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்ள இதழொன்று வாங்கி வந்து புரட்டிப் பார்த்த பொழுது, 'அட! நம்ம ரஞ்சனி நாராயணன்! அவர் கட்டுரையை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது!

//அவர்களுக்குள்
ஒரு வட்டம் சதுரம் போடப் பட்டது தெரியாது.
என்ன ஒரு பரிதாபம்:( //

????

தி.ஜா.வை பிறர் கணித்ததையா சொல்கிறீர்கள்?..

அதெல்லாம் பற்றி ஒரு தொடரே எழுதலாம்! ஒன்றுக்கானும் தி.ஜா. அசரவே இல்லையே!
கருமமே கண்ணாயினார் வர்க்கம் அவர்!



ஜீவி said...

@ சிகரம் பாரதி

//பத்திரிகைகள் என்பது வேறு. சஞ்சிகைகள் என்பது வேறு. கல்கி, குமுதம் என்பதெல்லாம் சஞ்சிகைகள். தினகரன், மாலை மலர் போன்றவை தான் பத்திரிகைகள். //

அப்படியா சி.பா?..

சென்ற தலைமுறை பத்திரிகையாளர் மத்தியில் பத்திரிகைகள் என்று சொல்வது தான் வழக்கம். 'தி ஹிந்து' போலவானவற்றை செய்தித் தாட்கள் (News Paper) என்று அழைப்பது வழக்கம். உரையாடலில், "'ஹிந்து' பேப்பரில் போட்டிருக்காங்க, பார்த்தையா?"

இதைத் தெரிந்து கொள்ளவாவது ஒரு விகடன் இதழ் வாங்கிப் பாருங்கள். பத்திரிகை பற்றிய தகவல் குறிப்பில் பத்திரிகை விற்பனைப் பிரிவு என்று தான்
குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் பத்திரிகை என்று குறிப்பிடுவது தான் பத்திரிகை பாஷை! :))

வார இதழ்கள் -- மாத இதழ்கள் என்ற வார்த்தை புழக்கத்தில் இதழ்கள் என்றும் குறிப்பிடுவது உண்டு. சிலருக்கு பருவ இதழ்கள்! (கவர்ச்சிக்கு கவர்ச்சி வேறே)

திராவிட கட்சிகள் வந்ததும் 'ஏடு' என்று அழைக்கலாயினர். 'கல்கி'யும் ஏடு தான்;
'இந்தியன் எக்ஸ்பிரஸூம்' ஏடு தான்.

இதெல்லாம் இருக்க, அரசு பாஷையில் எல்லாமே நியூஸ் பேப்பர்கள் தாம். எல்லா பத்திரிகைகளும் 'Registered as a Newspaper' கள் தாம். எந்த இதழைத் திருப்பிப் பின் அட்டையில் பார்த்தாலும் Registered with Registrar of Newspapers என்று குறிப்பிட்டு பத்திரிகையின் Regd.No. போட்டிருப்பார்கள். பத்திரிகையை ரிஜிஸ்டர் பண்ண வேண்டியது அவசியம். அப்படி செய்து கொண்டால் பல சலுகைகள் உண்டு. தபாலில் அனுப்ப, நியூஸ் பிரிண்ட் கோட்டா என்று. இரண்டாவது சொன்னது பகாசுர விஷயம்!

சிகரம் இணைய இதழ் தானே?.. கத்தியில்லா யுத்தம் மாதிரி, காகிதமில்லா அச்சடித்தல்! ஜமாயுங்கள்!

ஜீவி said...

@ சிகரம் பாரதி

படைப்புச் சுதந்திரத்திற்கும் வாசிப்பு சுதந்திரத்திற்கும் எந்தக் குறைசலுமில்லை!

வேண்டியாங்கு வேண்டியவை விரவிக் கிடக்கின்றன! நமது தேர்வுச் சுதந்திரத்தில் தான் கோளாறு!

புத்தகச் சந்தையில், சுஜாதாவின் ஸ்ரீரங்கம் தேவதைகளும், 'களப்பிரர் கால வரலாறு' என்றும் நூல்கள் இருந்தால் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள், சொல்லுங்கள்!

ஜீவி said...

@ பா.வெ.

மகிழ்ச்சி. மனசுக்குகந்த எழுத்தாளர்கள் பற்றி நானெழுதும் பகுதியில் தங்கள் கோணத்தில் அந்தந்த எழுத்தாளர்களை நீங்கள் பார்த்த பார்வை பற்றியும் அல்லது நான் எழுதாமல் விட்டு விட்ட செய்தி ஏதாவது பற்றியும் குறிப்பிட்டால் மிகவும் மகிழ்ச்சி.

குறிப்பிட்ட அந்த எழுத்தாளரின் கதை ஒன்றை எடுத்துக் கொண்டு விவரித்தால் இந்தப் பகுதி இன்னும் சிறப்பாக இருக்குமா?..

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?.. சொல்லுங்கள், பா.வெ.

ஜீவி said...

@ Dr. Jambulingam. A.R (Retd.) Tamil university

//பிறர் அங்கீகரிக்கவேண்டும் என்பதில்லை. நம் எழுத்தை நாம் ரசிக்கும்போதே வெற்றி பெற்றுவிடுகிறது. அடுத்தவரின் அங்கீகாரம் என்பதை இங்கு கொள்ளவேண்டாம் என்று நினைக்கிறேன்.//

வாழ்ந்து மடிந்த தமிழ் எழுத்தாளர்களின் சாதனைகளை வரும் தலைமுறைக்கு நினைவு படுத்தி அயராது தமிழ்ச் சுடரை ஏந்தி தமிழ் ஒளி பரப்ப வேண்டும் என்ற வேட்கையின் அடிப்படையில் வேண்டுகோள் விடுத்தேன். அவ்வப்போது வாழ்கிறவர்களை, சமீப காலம் வரை வாழ்ந்தவரை மட்டுமே நினைவில் ஏந்தி செயல்படுவது என்பது விட்டில் பூச்சி போல ஒரு நொடி பளபளத்து விட்டு மறைந்து விடுகிறது. அதற்கென்று இருக்கும் அடித்தளத்தை (base) இழந்தும் மேலோட்டமாக உயிர் வாழ்கிற மாதிரியான தோற்றத்தை
மட்டுமே தெரியப்படுத்துகிறது. இந்த நிலை இல்லாது எந்தத் துறையிலும் அதன் அடிமட்டத்திலிருந்து அன்றைய நாள் வரை அடைந்திட்ட வளர்ச்சியை பேணிப் பாதுக்காத்து
அதை உந்து சக்தியாகக் கொண்டு மேற்கொண்டான வளர்ச்சிக்கு முயல வேண்டும் என்ற சுடர் தெறிப்பில் வெளிப்பட்ட எண்ணம் இது.

ஜீவி said...


@ வல்லி சிம்ஹன்

//அமுத சுரபி பரவாயில்லை. ஸ்ரீராம் க்ரூப்பின் போஷாக்கில் திருப்பூர் குமரனின் அயராத உழைப்பில் 'எழுத்து - எழுத்துலகம்' என்று நிறைய உள்ளடக்கங்களைத் தாங்கி வருகிறது.//

திருப்பூர் கிருஷ்ணனின் அயராத உழைப்பில் - என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

////எது எப்படியோ இலக்கியம் எது என்பதைத் தீர்மானிப்பது வாசகன் தான்.அது மட்டும் நினைவிருக்கட்டும்.//

'நான் இந்த கருத்திலிருந்து மாறுபடுகிறேன். காரணம் இலக்கியம் எது என்று தீர்மானிக்க வாசகனுக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை என்பது என் கருத்து' -- என்கிறீர்கள்.

வாசகன் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதில் இருவருக்குமே மாறுப்பட்ட கருத்தில்லை, ஐயா. தீர்மானிக்கும் ஸ்திதியில் -- நிலையில் -- பத்திரிகைகள் அவனை வைத்திருக்கவில்லை என்பதே உங்கள் கருத்து. ரொம்ப சரி.. அதைத் தான் நானும் சொல்லியிருக்கிறேன்.

//எழுத்தாளர்களையும் குற்றம் சொல்ல இயலாது. ஏனெனில் அவர்கள் பத்திரிக்கைகள் விரும்புவதைத்தான் எழுதமுடியும். இல்லையெனில் அவர்களுக்கு வருமானம் கிடைக்காது. ஏனெனில் அவர்களும் வாழவேண்டுமல்லவா?//

எழுத்தே வேள்வியாகக் கொண்ட அந்தக் காலம் இல்லை சார், இது.. எழுத்தையே நம்பி எவரும் வாழ நேர்ந்திருக்கும் துர்பாக்கிய நிலையும் இன்று இல்லை சார். அரசு வேலைகளில் இருந்து கொண்டு எழுதுவோர் நிறைய பேர். தனக்கென்று ஒரு தொழிலில் இருந்து கொண்டு பெயருக்கும் புகழுக்கும் சொந்த ஆர்வத்திற்கும் எழுதுவோர் தான் அதிகம் பேர். பணம் பொருட்டல்ல; லட்சக்கணக்கான பிரதிகளில் தன் பெயரும், தன் எழுத்தும் அழகழனான ஓவியங்களோடு பவனி வருகிறதே-- அது தான் பெருமை. ஒவ்வொரு எழுத்தாளனையும் எத்தனையோ சோர்வுகளுக்குப் பிறகு எழுத வைத்துக் கொண்டிருக்கிற ஜீவசக்தி இது தான்.

பத்திரிகை அலுவலகங்களும் எல்லா அலுவலகங்களைப் போல ஒரு அலுவலகமாக மாறிப் போன காலம் இது. அதனால் அதில் பணியாற்றுவோருக்கும் தான் பணியாற்றும் ஒரு அலுவலகத்துடனான உறவு தான் காணப்படும். ஒரு வாரப்பத்திரிகையில் எல்லாமே இயந்திர கதி. அத்தனையும் கூட்டு முயற்சி. அடுத்த வார இதழ் அதற்கு முதல் வாரமே
தயாராவதற்குள் பெண்டு நிமிர்ந்து விடும்.

இட்லி, பொங்கல், வடை, தோசை, பூரி -- தொட்டுக் கொள்ள வகைவகையாய். ஒரு ஹோட்டலில் காலை மெனு இப்படி இருப்பது போலத் தான் இன்றைய பத்திரிகை நிலைமையும். 'இந்த ஐட்டத்திற்கு மேட்டர் சரி பண்ணியாச்சா?.. அடுத்தது அந்த மேட்டர். அதற்குத் தயார் பண்ணு' என்கிற மாதிரி தான் எல்லாம். லகாரக்கணக்கான அந்த வார இதழ்கள் மிஷின் துப்பி சுடசுட வெளிவந்து நடுப்பக்கத்தில் பின் குத்திக் கொண்டு மடித்த வாக்கில் அடுக்கடுக்காக வரிசை கட்டப்படுவதைப் பார்க்க வேண்டுமே --- ஆயிரம் கண் போதாதே, வண்ணக்கிளியே -- கதை தான். பத்திரிகைத் துறை என்பது மிகப் பெரிய இண்டஸ்ட்ரி இன்றைய தேதியில்.

ரா.கி.ரங்கராஜன் அவர்கள் குமுதத்திலிருந்து ரிடையர் ஆகி விட்டார் என்ற தகவல் கேள்விப் பட்ட பொழுது நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். 'அறுபது வயசு ஆகி விட்டால் பத்திரிகை அலுவலகங்களிலும் பணி மூப்பு ஓய்வு உண்டு' என்ற விஷயத்தை முதன் முதலாகக் கேள்விப்பட்ட தருணம் அது!

ஜீவி said...

@ தி. கீதா

தாங்கள் வாசித்து மகிழ்ந்ததில் ரொம்பவும் சந்தோஷம்.

ஜெயகாந்தன்?.. எழுத்தாளர்களின் தார்மீக பலத்தை இளம் வயதிலேயே தன் தோளில் தூக்கிச் சுமந்த சிம்ஹம் அவர்!

இணைய வலையில் கிடைப்பதை----

'அழியாச்சுடர்' இணைய ஆக்க முயற்சியில் பங்கு கொள்வோருக்கு நாம் எவ்வளவு நன்றி சொன்னாலும், அது தகும். அவர்களின் இணைய தளத்தில் சென்ற காலத்து தமிழ் எழுத்தாளர்களின் அரிய படைப்புகளை வாசித்துக் களியுங்கள்.

http://azhiyasudargal.blogspot.com/

இவர்களைப் பற்றித் தான் நானும் எழுதப் போகிறேன். என் தளத்தில் அவர்கள் பற்றி வாசிக்கும் பொழுது உங்களுக்கு இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

மிக்க நன்றி, சகோ.

ஜீவி said...

@ இராய. செல்லப்பா

அடடா! எவ்வளவு நாட்கள் கழித்து, உங்களைப் பார்க்கிறேன்?.. சென்னை வந்து சேர்ந்து விட்டீர்களா, ஐயா! ரொம்ப சந்தோஷம்.

எனக்குத் தெரியும். இதையெல்லாம் வாசித்து விட்டால் உங்களால் சும்மா இருக்க முடியாதென்று.

பொதுவாக சிறுபத்திரிகைகளின் வெளியீடுகளுக்காக நம்மில் விளையும் உந்து சக்தியும்
அவற்றிற்கான நோக்கமும் எல்லாக் காலங்களிலும் ஒன்று தான்.

ஆனாலும் அந்நாளைய சிறுபத்திரிகைகளில் பங்கு கொண்டவர்கள் மொழியைக் கையாண்ட அழகு, எடுத்துக் கொண்ட பொருள், விவரணைகளின் நேர்த்தி என்று எல்லா இலஷ்ணங்களுமே வேறு வகைத்தானது.

ஜெயகாந்தன் அந்நாளைய 'சரஸ்வதி'யில் போர்வை என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார். இரண்டே பக்கங்கள் தாம். வாசித்து விட்டால் பிரமித்தே போவோம்.
இதை எழுதியது யார் என்ற கேள்வி மனசில் கிளர்ந்து எழுதியவரின் பெயரைப் பார்க்க முனைவோம். அந்த மாதிரியான 'கிறுக்குத்தனங்கள்' எல்லாம் இந்தக் கால சிறுபத்திரிகைகளை வாசிக்கும் பொழுது நேராது.

பெரிய பேனர் திரைப்பட முதலாளிகள் சின்ன பட்ஜெட் படம் எடுப்பது போலத் தான்
குமுதத்தின் தடமும், தீராநதியும்.

சிறுபத்திரிகைகளின் தோற்றமும், வளர்ச்சியும் தெரிந்தே உப்பு மூட்டையை ஆற்றில் போடும் சமாச்சாரம். இலாப நஷ்ட கணக்குப் பார்ப்பவர்கள் தினமும் அப்படி ஆற்றில் போட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

சிறு பத்திரிகையின் ஆயுள் என்பது இலட்சியப்பிடிப்பிலும், கொள்கைச் சான்றாண்மையிலும், எந்த இடர் வந்தாலும் சமாளிப்போம்; இதை செய்தே தீருவோம் போன்ற கடப்பாடுகளுடன் பிணைந்தது.

சி.சு. செல்லப்பா, தன் மனைவியின் கழுத்தில், காதில் என்று இருந்த ஓரிரண்டு நகைகளை அடகு வைத்தும், அழித்தும் எழுத்து பத்திரிகையை அச்சடித்தார். பிரதிகளைத் தோளில் சுமந்து பாடசாலைகளின் படிகளில் ஏறி இறங்கி இளம் பிள்ளைகள் மத்தியில் அவற்றை அறிமுகப்படுத்த முனைந்தார். அந்த மாதிரியெல்லாம் இப்பொழுது ஏதும் நடந்து விடாது மட்டுமில்லை, அந்த மாதிரியான நடவடிக்கைகள் எல்லாம் தேவையில்லாத பைத்தியக்காரத் தனங்களாக இப்பொழுது எள்ளி நகையாடப்படும்.

பிழைப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. சிறு பத்திரிகைகளை அச்சடித்துத் தான் பிழைக்க வெண்டும் என்று இல்லை. பிழைப்பல்தற்காகவும் இந்த மாதிரியான தன்னையே மாய்த்துக் கொள்ளும் காரியங்களிலும் யாரும் ஈடுபடுவதில்லை. அதனால் எழுதுவது என்பது பிழைப்பின் அடிப்படையில் இல்லை என்பதை எல்லோருமே அறிந்து தான் இருக்கிறார்கள். சொல்லப்போனால் பிழைப்பதற்காக வைத்திருப்பதை தொலைப்பதற்காகத் தான் என்பது நிதர்சன உண்மையாக இருக்கும் காலம் இது.

எத்தனை இணைய தள எழுத்துக்கள்?.. எத்தனை வித தலைப்புகள்?.. எவ்வளவு ஈடுபாடுகள்?.. எவ்வளவு கால, நேர செலவழிப்புகள்?..

இதற்கான ஆதார சுருதி என்ன?

பின் எதற்காக இத்தனை அல்லாடல்கள்?..

மனிதப் பிறப்பின் தீராத தாகம் தன் இருப்பைத் தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும் இயற்கை நியதி.

கர்ப்பமுற்ற பெண் குழந்தையை பெற்றே தீர வேண்டும் என்பது போல இது. அறிவுத் தாகம் எடுத்தவனின் கதையும் இது தான். தன் இருப்பை சமூகத்திற்கு தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும்; இலட்சியங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்; பொது விஷயங்களில் தன் கருத்தைச் சொல்லியே ஆக வேண்டும் -- போன்ற தினவுகள்.

அந்தத் தினவுகள் தாம் கதைகளாகவும், கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் முகிழ்த்து எழுந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

எண்பது வயசு பெரியவரும் கண் பார்வைக் கோளாறுகளோடும், உடல் இயலாமைகளுக்கு இடையேயும் மூப்பின் அவஸ்தைகளுக்கு நடுவேயும் கணினியின் எதிரே உட்கார்ந்து கொண்டு சமூகத்தோடு பேசிக் கொண்டிருப்பதின் சூட்சும சக்தி இது தான் ஐயா!

இதெல்லாம் உங்களுக்குத் தெரியாததா என்ன?.. நிச்சயமாகத் தெரியும். இருந்தும் என் வாய் மொழியாக நான் சொல்லிக் கேட்பதில் அலாதி மகிழ்ச்சி என்பதும் தெரியும்.

நெடுநாட்கள் கழித்து உங்களை இணைய தளத்தில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ந்து போனேன். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி, ஐயா.

Related Posts with Thumbnails