மின் நூல்

Saturday, April 11, 2020

புளிய மரத்தின் கதை சொன்ன சுந்தர ராமசாமி

இலக்கியம்  செய்வதென்றால்
எளிதில்லை  எழுத்தாளா,
கலக்கினால்  காவிரியும்
கழிவுப்  பொருள்  காட்டும்.
                                      ---     பசுவய்யா  
 


னது இளம் வயதிலேயே  'ஒரு புளியமரத்தின் கதை' படித்த பொழுது  பிடித்துப் போனது.   பல ஆண்டுகள் கழித்து நூலகத்தில் வேறொன்றைத் தேடுகையில்  கிடைத்த இதைப் படித்ததில்   இன்னும் பிடித்துப் போயிற்று. 

தோழர்  விஜய  பாஸ்கரனின்  'சரஸ்வதி'  பத்திரிகை பற்றி தனியே  நிறையச் சொல்ல வேண்டும்.    அந்தப்  பத்திரிகையில் இந்த   புனிதத்தை  எழுதும் வாய்ப்பு   சுந்தர ராமசாமிக்கு    கிடைத்தும் அவர் எழுத ஆரம்பித்து நான்கே அத்தியாயங்கள் பிரசுரமான சூழ்நிலையில்   பத்திரிகை அடைந்த தளர்ச்சியில்  சுந்தர ராமசாமியால் மேற்கொண்டு தொடர முடியவில்லை.  எது எப்படிப் போயினும்  முதல் நாவலை எழுதும் வித்தையை அவர் மனத்தில் ஊன்றியது 'சரஸ்வதி'  தான். 

விட்டுப் போன புதினத்தைத் தொடர ஏழெட்டு வருஷமாயிற்று அவருக்கு    இந்த இடைவெளியும் அவர் எழுத்துக்கு  மெருகு கூட்டியிருக்கலாம்.  அதை உணர்ந்து தான்  சுந்தர ராமசாமியும்  அந்த நேரத்தில்,  'இந்த நாவல் வழி;யாக  அறிமுகம் எனக்குத் திருப்தி அளித்தாலும்,  இதை விட விரும்பும் நாவலை நான் பிற்காலத்து எழுதக் கூடும்' என்றார்.  எதற்கு சொல்ல வந்தது என்றால்  காலமும் அந்த காலம்   அந்தக் காலம் கைபட்டு மனிதன் வார்த்தெடுக்கப் படும் விநோதமும் அற்புதமானது.  அதுவும்  ஒரு கலைஞன் என்றால் கேட்கவே  வேண்டாம்.

அது என்ன புளியமரத்தின்  கதை?..

அந்தப் புளியமரத்தை  நினைக்கும் பொழுதே  தாமோதர ஆசான் நினைவில் நிழலாடுகிறார்.     ஆரம்பத்தில் கொப்பும் கிளையுமாக பிர்மாண்டமாக நிழல் பரப்பிக் கொண்டிருந்த
அந்தப் புளியமரம்  காலத்தின் கோலமான மனிதர்களின் அலங்கோல போக்கில்  ஏற்படுகின்ற ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ப  கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து போகும் சோகத்தை  சுந்திர ராமசாமி பதிவு  செய்திருக்கும்  பாங்கு நெஞ்சைக் கனக்கச் செய்கிறது. 

அந்தப் பகுதி மக்களுக்கு  புளிய மர ஜங்ஷனாய்  மெளன சாட்சியாய்  தன் தளர்ச்சியைத் தானே பார்த்துக் கொண்டிருக்கும்  அந்த  புளிய மரத்தின் நிலையைச் சொல்வதின் மூலம் சமூகத்தின் அவலங்களை பகிர்ந்து நகர்வதே கதையாகிப் போகிறது.   தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தும்  எளிய மக்களுக்கு அந்த சுதந்திரம் நீட்டிக்காது போனது போல அந்த மரத்திற்கும்  ஆகிறது. இது மரத்தின் கதை என்று சொன்னாலும் அல்லது மனிதரின் கதை என்று சொன்னாலும் சரி,  எல்லாம் ஒன்று தான்.

நாகர்கோயிலுக்கு பக்கத்து கிராமம்  தழுவிய  மஹாதேவர் கோயில்.   சுந்திர ராமசாமி பிறந்த இடம் இதுவே.   திருவிதாங்கூர்  கோட்டயத்தில் தந்தை   வியாபாரம் செய்ததினால்  அவரின் ஆரம்பக்கல்வி  கோட்டையத்தில்
அமைந்தாலும்    சிறுவயதிலேயே  கோட்டையம் நீங்கி  நாகர்கோயிலில்  பள்ளிக்கல்வி தொடர்ந்தது.   உடல் நலக் குறைவினால்  பத்தாம் வகுப்புக்கு மேல்  படிக்க முடியாது போயினும்  தாயின் அறிமுகத்தில்  மணிக்கொடி  எழுத்தாளர்களின்  கதையுலகம் பரிச்சயமாகி புதுமைப் பித்தன்  மனம் கவர்ந்த எழுத்தாளர் ஆகிறார்.  இந்த வாசிப்பு அனுபவமே  சுந்தர ராமசாமி எழுதுவதற்கு  கிரியா ஊக்கியாக  இருந்து செயல்பட்டிருக்கிறது.  எதில் அளவற்ற  ஈடுபாடு கொள்கிறோமோ   அதுவே  அவரை ஆக்கு;ம் பொறுப்பை  ஏற்றுக்கொள்கிறது  என்பது உண்மை தான்.

சுந்தர ராமசாமி எழுதியது  மூன்றே  நாவல்கள் தாம்.   புளிய மரத்தின் கதை,    ஜே.ஜே.  சில குறிப்புகள்,  குழந்தைகள்  பெண்கள்  ஆண்கள்  என்று மூன்றே  தான் ஆனாலும் மூன்றும் மூன்று  வகையானவை.    வெவ்வேறு  காலத்தான அவர் கொண்ட வளர்ச்சியை  சொல்பவை. 

ஜே.ஜே. சில குறிப்புகள்  மலையாள மண் வாசனை கொண்டது.    ஜோசப்  ஜேம்ஸ்  தான்  ஜே.ஜே.    ஓவியங்களின் நுணுக்கங்களிலும்  சிற்பங்களின்  நேர்த்தியிலும்  மனதைப் பறிகொடுத்தவர்.  கால்பந்தாட்ட வீரர்.    கல்லூரி வாழ்வில் தனக்கு வாய்த்த   ஆசிரியர்  அரவிந்தாட்சனால் இலக்கியங்களின்  பால் ஈர்ப்பு  ஏற்படுத்திக்  கொண்டவர்.

இந்த  ஜே.ஜே.யை  உருவகப்படுத்தும் முயற்சியில்  ஜே/ஜே. மாதிரி கற்பனையிலாவது  சுந்தர ராமசாமி வாழப் பார்த்திருக்கிறார் என்று புதினத்தைப் படிக்கையில் தெரிகிறது.  பாலு என்ற பாத்திரத்தையும் தனக்காகவே வடித்தெடுதிருக்கிறார் அல்லது அந்தப் பாத்திரத்தினுள்  நுழைந்து கொண்டு விட்டார்.    இன்னும் நமக்குத் தெரிந்த வேறு  சிலர் மாதிரி  சாயல்   தெரிகின்ற  எம்.கே. அய்யப்பன்,  முல்லைக்கல் மாதவன் போன்றவர்களை   வேறு  சு. ராமசாமி  நடமாட விட்டிருக்கிறார்.  சு.ரா.வின் இந்த மத்தாப்பு  பூவாணங்கள்  நாவலை ஒரு யதார்த்த உணர்வில் பொருத்தி வைக்கப் பார்த்த முயற்சிகளே  என்று புரிகிறது.  அவைகள்,  சு.ரா.அவர்களைப் பற்றிக் கொண்டிருந்த மன ஓட்டங்களே.

ஜே.ஜே.  மாதிரி இல்லை,  'குழந்தைகள்,  பெண்கள், ஆண்கள்' ; இது வேறு மாதிரி.   ஒரு பெரிய    குடும்பத்தைச் சார்ந்த பெண்கள்,   ஆண்களுக்கு  மட்டுமில்லை,  குழந்தைகளுக்குக் கூட விருப்பங்களும்,    வேண்டும் -  வேண்டாமைகளும்  இருக்கின்றன.  குழந்தைகள் உலகம் நமக்குத் தெரிந்தது தான்.   ஒவ்வொரு குழந்தையும் ஒரு மாதிரி அமைந்தாலும்  பொதுவான  குழந்தை உணர்வுகள்,  அந்த அறியாப் பருவம் எல்லோருக்கும் ஒன்று தான்.

மெதுமெதுவாகக்  கதைவைத்  திறந்து காட்டுகிற மாதிரி,  பாலு,  ரமணி,  லச்சுவின் குழந்தைகள்  உலகத்தைத் திறந்து காட்டுகிறார்.   குழந்தைகளின்  கனவுகள்,  குலாவல்கள், சகஜ  பாவங்கள்  எல்லாம்  துடிப்பாக செதுக்கப்பட்டுள்ளன.  லஷ்மியும், வள்ளியும்,  சீதையும்  பங்கஜாவும்,  கெளரியும், சுகன்யாவும்   பெண்கள்  உலகத்திற்கு  செளந்தமானவர்கள்.  ஆண்கள் உலகத்திற்கோவெனில்,  எஸ்.ஆர்.எஸ்.,  டாக்டர் பிஷாரடி,  பிடில் ராமய்யர்,  சேது அய்யர்,   சம்பத், ஸ்ரீதரன், செல்லப்பா,   சாமு   என்று ஒரு பட்டாளமே  இருக்கிறது.  இவர்களிடையே  சு.ரா.  ஏற்படுத்தும்   உறவுகள்,  உணர்வுகள்  இதான்  கதை.   யதார்த்த  பாணியில்  சுந்தர ராமசாமி எழுத முயற்சித்த  நாவல்.  படித்து முடிக்கும் பொழுது ஒருவகையில் சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது.   அவர்களுடன்  கூடச் சேர்ந்து  பழகிக்  களித்த  சுவாரஸ்யம்  அது.

சில  வருடங்களுக்கு முன்   தினமணி தீபாவளி மலர் ஒன்றில்  சுந்தர ராமசாமியின்  'ரத்னாபாயின்   ஆங்கிலம்'  என்கிற  சிறுகதையைப் படிக்க நேர்ந்தது.    ஒரு மொழியைக் கையாளும்  நேர்த்தியும்,  அந்த மொழியில் தனக்கிருக்கும் ஆளுமையை  வார்த்தைகளாக வடித்தெடுக்கும் சுகத்திற்காக  கைபோன போக்கில் கற்பனையாக  எழுதிய ஒன்றை  நிஜமாலுமே நடைமுறைபடுத்த வேண்டிய நிர்பந்தம்  ஏற்படுகிறது  ரத்னாபாய்க்கு.    அந்த நிர்பந்தத்திற்கு  இடையே ரத்னாபாய்  வாழ  நேர்ந்த வாழ்க்கைக் கதையையும்  பாங்காகச்  சொல்லி  நன்றாகத் தான்  எழுதியிருந்தார்  சந்தர   ராமசாமி. 

அழைப்பு,   போதை,  பல்லக்குத்ன்  தூக்கிகள்  போலவான அவரது நிறைய  கதைகள்,  படிப்பவர்க்கு நிறைவைக் கொடுக்கும்.     'மரியா  தாமுவுக்கு   எழுதிய  கடிதம்'  என்கிற
சிறுகதைத் தொகுப்பைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.  முப்பதுக்கு  உள்ளடங்கிய  சிறுகதைகளையும்,   நிறைய கட்டுரைகளையும்,  மொழியாக்கக்  கவிதைகளையும்  சுந்தர ராமசாமி  தந்திருந்தாலும்,    பசுவய்யா  என்ற பெயரில் கவிதைகள்  எழுதி பெரும் கவனம்  பெற்றதைக் குறிப்பிட வேண்டும்.    1959-ஆம்  ஆண்டு வாக்கில்  'எழுத்து'  பத்திரிகையில்  பிரசுரமான  'உன்  கை  நகம்'  கவிதையே இவர் எழுதிப் பார்த்த முதல்  கவிதை.   பல வருடங்களுக்கு முன்  நாட்குறிப்பேடு  அலவில்  கெட்டி அட்டை போட்டு நல்ல தாளில்  அச்சாகி  சிற்றிதழ்  வட்டாரத்தில்  பிரபலமாகியிருந்த  'நடுநிசி நாய்கள்'  கவிதைத் தொகுப்பு --  க்ரியா வெளியீடு  என்று நினைக்கிறேன்  --  நினைவில் நிற்கிறது.     சு.ரா.வின்  கவிதைகள்  என்று தனிப் புத்தகமாகவும் வந்திருப்பதாகத்   தெரிகிறது.

சிறுகதைகளிலும்,  புதினங்களிலும்  காணாத வேறொரு சுந்தர ராமசாமியை   அவரது  கவிதைகளில்  நாம் பார்க்கலாம்.   இதில்  வெளிப்படுவது  தன் பார்வையில் பட்ட
பல விஷயங்கள்  குறித்து  வெளிப்படும்  தனி மனிதனின் தீட்சண்யமான  குரல்.  தன்  நிலையை  தான்  என்றோ  நான் என்றோ  சுட்டியே  பதிவு செய்திருக்கிறார்.  பல கவிதைகள் தன்னுள்  ஆழப் புதைந்து தட்டுப்படுவதைச் சொல்லும் லாவகம்  பெற்றிருக்கின்றன.  தனிக் கவனத்துடன் தேர்ந்தெடுத்து  உலகக் கவிதைகளையும்  அவர் தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்.  பிற மொழிக்கவிதை வரிகளை  அர்த்தம்  குலைந்து போகாமால் மொழிமாற்றம் செய்வது  மிகவும்  சிரமம் மிகுந்த  காரியம்.    எனினும்,  சு.ரா.-வின் மொழிபெயர்ப்பு  அதற்கான மூலக்கவிதையை எவ்வளவு சிறப்பாக அவர் உள்வாங்கிக் கொண்டு மொழி மாற்றம் செய்திருக்கிறார் என்பதைப்  புலப்படுத்தும்.

'கதவைத்  திற;   காற்று  வரட்டும்'  என்று  பிற்காலத்து  பிரபலமடைந்த  வார்த்தைத் தொடர்,  சுந்தர ராமசாமியின் ஒரு  கவிதையின்  ஆரம்ப வரி தான்.


11 comments:

சிகரம் பாரதி said...

சிறப்பு.

இந்த பதிவை இலக்கியம் அல்லது வாசிப்பு என வகைப்படுத்தியிருக்கலாம்.

நமது வலைத்திரட்டி: வலை ஓலை

ஸ்ரீராம். said...

ஒன்றிரண்டு நாவல்கள் தவிர வேறு வாசித்ததில்லை. நல்ல எழுத்தாளர்தான். ஆனால் இவரது புகழ்பெற்ற ஜேகே சில குறிப்புகளை ரசிக்க முடியாத ஞானசூன்யம் நான்!

வல்லிசிம்ஹன் said...

நான் இதுவரை படித்ததில்லை ஜீவீ சார். நீங்கள் எழுதி இருப்பதிலிருந்து

நான் நிறைய மிஸ் செய்திருக்கிறேன் என்று
தெரிகிறது. ஜெமோ இவரைப் பற்றி எழுதிய புத்தகம் படித்திருக்கிறேன்.
நன்றி ஜீவி சார்.

Bhanumathy Venkateswaran said...

சுந்தர ராமசாமியை கட்டாயம் படிக்க வேண்டும்.

ஜீவி said...

@ சிகரம் பாரதி

//இந்த பதிவை இலக்கியம் அல்லது வாசிப்பு என வகைப்படுத்தியிருக்கலாம். //

புரியவில்லை.

என் தளத்தில் கதை கதையாம் என்ற பகுதியில் மனம் கவர்ந்த தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லி வருகிறேன். பதிவுகளில் நான் எழுதுவதெல்லாம் புத்தக அச்சுக்கான குறிப்புகளே. அதற்கேற்ப எழுதி வருகிறென். தங்கள் தகவலுக்காக.


ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...

@ ஸ்ரீராம்

அவர் காலத்தில் அவர் எடுத்த நிலைகள் அவர் சார்ந்திருந்த சிந்தனைகளுக்கு ஏற்ப அமைந்திருக்கின்றன. அவைகள் தாம் அவர் எழுத்தில் வெளிப்பட்டிருக்கின்றன.
இவர்களைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்கு சொல்ல வேண்டும் என்று நான் நினைப்பவர்களை பற்றிய குறிப்புகளை மட்டுமே எழுதி வருகிறேன்.

தொடர்ந்து வாசித்து இந்தப் பகுதியை சிறப்பிப்பமைக்கு நன்றி, ஸ்ரீராம்.

கோமதி அரசு said...

'ஒரு புளியமரத்தின் கதை' படித்து இருக்கிறேன். கதை புத்தகம் எங்கள் வீட்டில் இருக்கிறது.
மற்ற கவிதைகள் எல்லாம் படித்தது இல்லை.

வே.நடனசபாபதி said...

பள்ளியில் 9 ஆவது படிக்கும்போது ‘சாஸ்வதி’யில் வெளிவந்து எழுத்தாளர் சுந்தரராமசாமியின் முற்றுப்பெறாத புளிய மரத்தின் கதையை படித்திருக்கிறேன். ஏனோ அதற்குப் பிறகு அவர் எழுதிய அந்த தொடரை படிக்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. தங்களது பதிவைப் படித்தபின் அவரது படைப்புகளைப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. எல்லாவற்றையும் படிக்கமுடியாவிட்டாலும் அவசியம் புளிய மரத்தின் கதையை படிப்பேன்.

திரு சுந்தரராமசாமி கோட்டயத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார் என்று கேள்விப்படும்போது அவருக்கு எப்படி எழுத்தின் மேல் ஈடுபாடு வந்தது என்பதை என்னால் உணரமுடிகிறது. கோட்டயம் பற்றி சொல்லும்போது the land of lakes, letters and latex என்று சொல்வார்கள்.

ஏனெனில் அங்குதான் ஞானபீட விருது பெற்றவரும் புகழ்பெற்ற நாவல்களை எழுதிய தகழி சிவசங்கரன் பிள்ளையும், எழுத்தாளர் பொன்குன்னம் வர்க்கியும். சிறுகதைகள் எழுதிய வைக்கம் பஷீரும் வாழ்ந்து புகழ்பெற்ற படைப்புகளை படைத்தார்கள்.

கோட்டயத்தில் ஆரம்பக் கல்வியை கற்றதினால் தான் திரு சுந்தரராமசாமி அவர்கள் தகழியின் எழுக்தல் ஈர்க்கப்பட்டு அவரது புகழ் பெற்ற படைப்புகளான ‘செம்மீன்’, ‘தோட்டியின் மகன்’ போன்றவைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் என எண்ணுகிறேன்.

திரு சுந்தரராமசாமி அவர்களின் எழுத்து பற்றியும் மறைந்த என் அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் அவரது வலைத்தளத்தில்
இவர்களது எழுத்துமுறை
என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார்.

Thulasidharan V Thillaiakathu said...

எங்கள் ஊர்க்காரராக இருந்தும் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. ஆனால் கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்று நினைத்துள்ளேன். நெட்டில் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

கீதா

சிவகுமாரன் said...

புளிய மரத்தின் கதை உள்ளிடட ஒரு சில கதைகள் படித்திருக்கிறேன் வெகு காலத்திற்கு முன்பு. மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டீர்கள்,

Related Posts with Thumbnails