மின் நூல்

Tuesday, April 7, 2020

ராமசேஷன் ஆன ஆதவன்

எழுத்தாளர்  ஆதவனின் இயற்பெயர்  சுந்தரம்.

கதைகள் எழுதுவதற்காக ஆதவன் ஆனவர்,  தான் எழுதிய ஒரு நாவலுக்காக  ராமசேஷன் ஆகிறார்.

ஒரு மத்தியதர குடும்பத்தில் பிறந்த ராமசேஷன் தனது பதின்ம வயது கல்லூரி படிப்பு காலத்தில் தான் பழக நேர்ந்தவர்களைப் பார்த்த பார்வை தான் 'என் பெயர் ராமசேஷன்'  புதினத்திற்கான கரு ஆகிறது.   ஆக,  இதுவே  ஆதவனுக்கு செளகரியமான ஒரு  ஏற்பாடு ஆகிறது.   ராமசேஷன் என்ற மூன்றாவது  மனிதனின் பெயரைத் தரித்ததால்,  ராமசேஷனின் பார்வையாக மனித மன முரண்களைப் பார்த்த தன் பார்வையை  கதை நெடுகிலும்  மெல்லிய நகைச்சுவை உணர்வுடன் பதிக்கிறார்.

எழுத்தாளர்,  சினிமா டைரக்டர்,  நண்பன்  ராவ்,  அந்த  நண்பனை அண்டி வாழும்  மூர்த்தி,  மாலா -  பிரேமா  என்று இரண்டு பெண்கள்,  அவர்களுடனான ராமசேஷனின்  உறவு
என்று  நீளுகையில்  உள்ளுக்கு உள்ளாகப் பம்மிப் பதுங்கியிருக்கும்  இன்னொருவரின்  உள்ளக் கிடக்கையை பிடுங்கி வெளியே எடுத்து  வெளிச்சம் போட்டுக் காட்டும்  வேலை  நடக்கிறது.    இவர்களோடு நிற்காமல்  தந்தை, தாய், தங்கை,  அத்தை,  பாட்டி,  பெரியப்பா,  பெரியம்மா  என்று  நீளும் பொழுது  ராமசேஷனை  உற்றுப் பார்க்கும் உணர்வு படிப்பவனுக்கு ஏற்படுகிறது.

ராமசேஷனுக்கு  அப்பா,  அம்மாவின் மேல் கொண்ட கவர்ச்சியே  பிரதானமாகத் தெரிகிறது.   அம்மா?.. அப்பா இல்லாமல்  அம்மா  இல்லை.  அப்பாவுக்கு அவரது  அந்த வயதில் இடம் கொடுக்கும் அம்மா.  மற்றபடி  அம்மா பார்த்த அவளின் சுற்று வட்டாரத்தின்   பிள்ளைகள்  பொறியியல் படிப்பு  படிப்பதினால் அவளது பிள்ளையும்  அப்படியான ஒரு படிப்பு படிக்க வேண்டும்  என்று  ஆசைப்படும்  அம்மா.  இதற்கிடையே  விதவை  அத்தை,  பாட்டி  என்று 
ஒருவொருக்கொருவர்  ஏதோ ஒன்றான ஒரு பிடிமானத்தைப் பிடித்துக் கொண்டு  ஒருத்தரை ஒருத்தர்  சந்தர்ப்பம் கிடைத்த பொழுதெல்லாம்  ஆளத்துடிக்கும்  'பொம்மனாட்டித்தனம்'  அவர்களுக்குள்ளான  முரணாக  கதை நெடுகிலும்  ஜீவனுள்ள வரிகளாகத் துடிக்கிறது.   இதெல்லாம் இப்படி இருக்க  இதே தன்மைத்தான இவர்களின் இன்னொரு தொடர்ச்சிக் கூறான  ராமசேஷனுக்கும்  நண்பன்  'ராவ்'வின் தங்கையான மாலாவுடனான  'எல்லைக்குட்பட்ட'  இழைதல்,  கல்லூரித் தோழி  பிரேமாவின்  அருகாமை  என்று  அவன் காட்டிலும் மழை தான்!.   எல்லாரையும்  எப்படியோ  பெளதீக உடல் சம்பந்தப்பட்ட  கிளுகிளுப்பு  கொள்ளச் செய்யும்  மன முயக்கங்களோடு  இணைத்துப் பார்க்க ராமசேஷனால் முடிகிறது.

இன்னும்  இன்னும் என்று நிறைய  பேர்கள் வருகிறார்கள்.  மிஸஸ்  ராவ்,  ராமசேஷனின்  பெரியம்மா,  பங்கஜம்  மாமி என்று  நிறைய பேர்.   நிறைய பெண்கள் வருவதினால்  அவர்களின்  அந்தரங்க  மன சேஷ்டைகளை தன் பார்வையில் தோலுரித்துக்  காண்பதான  ராமசேஷனின் உள் உணர்வுகளின்  வெளிப்பாடும்  இந்த வெளிப்பாட்டு உணர்வில்  படிக்கும்  வாசகனைக் குப்புறத்தள்ளி  குஷிப் படுத்த வேண்டும் என்ற சபலமும்  ஒரு 'இண்டலெக்சுவல்'  தளத்தில் நடக்கிறது  என்பதையும் சொல்ல வேண்டும்.

மேல்தட்டு குடும்பத்தின்  பிரதிநிதியான  மாலாவின் பழக்கம் அவனது  கீழ்மட்டத்துச் சூழலை  நாசூக்காக  சீண்டுவதான உணர்வுக்கு   ஆட்படுகிறான  ராமசேஷன்.  என் எல்லைகள்
ராகம்,  தாளம்,  பல்லவிக்குள்ளும் சட்னி  சாம்பாருக்குள்ளும் அடங்கி விடுகிறவை;    அவள்  தொட்டிலில்  கிடந்த பொழுதே  சாச்சாவுக்கு காலை உதைத்தவள்;    ப்ரூட் ஜெல்லியை நக்கினவள்' என்று தன்னுணர்வில்  திகைக்கிறான்.  இந்தத் திகைப்பு  கல்லூரித் தோழியான பிரேமாவிடம் கொண்டு போய் அவனைத் தள்ளுகிறது.   அவளுடைய துடுக்கான சேஷ்டைகள் துடுக்குத்தனமான ஆரவரமாக அவனுக்குப் படுகிறது.

"....  அவளுடைய  கருப்பு நிறமும்,  உயரக்குறைவும்  அவளுக்கு  ஒரு இன்ஸெக்யூரிட்டியைக்  கொடுத்தது.  மரபுக்கெதிரான  அவளது பாய்ச்சல்களுக்கு  இந்த இன்ஸெக்யூரிட்டி தான் காரணம் என்பதைப்  பின்னால் நான் புரிந்து கொண்டு  அவள் மீது அனுதாபப்படக்  கற்றுக் கொண்டேன்...  பெளதீக  ஆகிருதியையும், தோற்றத்தையுமே செலாவணியாகக் கொண்ட சராசரி  பெண் வர்க்கம்,  சராசரி ஆண் வர்க்கம் இரண்டிடையேயும்    தான் மிகக் குறைந்த மதிப்பெண்களே   பெறுவோம் என்பதை  உணர்ந்து,  தான்  இவர்களால் ஒதுக்கப்படும் முன்    இவர்களைத் தான் ஒதுக்கும் உபாயமாகவே  அவள் தன் இண்டெலெச்சுவல்  திறன்களை  ஆவேசமாக  வலியுறுத்தவும்  தூக்கலான  மோஸ்தர்களிலும் நிறங்களிலும்  அனாச்சாரமான  உடைகளை அணியவும் செய்தாளென்பதை  அப்பொழுது உணராத  நான் -- அதாவது இவை அவளுடைய  தன்னைப் பற்றிய பிம்பத்திற்கு  எவ்வளவு   நெருக்கமானவை என்பதை உணராத  நான் இவற்றை அவளது  துடுக்குத்தனமான சேஷ்டைகளாக நினைத்து  இந்தத்  துடுக்குத்தனத்தை ஆரவாரமாக ரசித்தேன்.   என்னுடைய  நுட்பமான ரசனையின் நிரூபணமான  என் ரசிப்பை  தன்னுடைய 'முரண்படுகின்ற  இண்ட்லெக்சுவல்  கம்  சமூக விமர்சன'  பிம்பத்தின்   அங்கீகாரமாகவே  எடுத்துக் கொண்ட  அவள் இந்த பிம்பத்தை  மேன்மேலும்  வலியுறுத்தியவாறு  இருந்தாள்.  எனக்கு  அது சலிக்கத் தொடங்கும் வரை--  என்று பிரேமாவைப் பற்றி ராமசேஷனின்  உள்ளார்ந்து  கிளர்ந்தெழும்   எண்ணங்கள்  வலைவலையாய் பின்னல்கள் இட்டுக் கொள்ளும்.

அறிவுரீதியான அவரவர்  எண்ணங்கள்,   சிறைப்படுத்தும் சிந்தனைகள்   பாத்தி பாத்தியாகப் பிளவுண்டு  அவர்தம்  அபிலாஷைகளுடனும்,   அது குறித்த   உணர்வுகளுடனும் கலந்து  வினைபுரியும்  பொழுது மனிதர்கள்  தனித்தனி யூனிட்டுகளாக சிதறுண்டு  போய்  தங்கள் நலன்களைத் தற்காத்துக் கொள்ள  புனைகின்ற  வேடங்கள் உள்ளுக்குள் பதுங்கி மேற்பூச்சுடன்  வெளிப்பார்வைக்கு  தெரியாமல் கிடக்கின்றன.   முள்ளம்பன்றி  தன் முட்களைத் தேவைப்படும் பொழுது  வெளிக்காட்டிப் பின்  முடக்கிக்  கொள்ளுமே அது  போன்று  எதிர்வினையாற்றும் பொழுது மட்டும்  வெளிப்பட்டு வேலை முடிந்ததும்   மீண்டும்  உள்ளின் அடி ஆழத்திற்குப் போய்   பதுங்கிக் கொள்கின்றன.   இந்த வேலை இயல்பாய் நடக்கும்  பொழுது  அதுவே அவரவர்  குணநலன்களாகத் தோற்றம் கொள்கின்ற பிரமிப்பு  இந்த நாவல்  நெடுக நீண்டு கிடக்கிறது..   இதுவே ஆதவனின் வெற்றியாகிப்  போகிறது.

ஆதவன்  திருநெல்வேலி  மாவட்ட  கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர்.    ஆரம்பத்தில்   இந்திய ரயில்வேயில் பணியாற்றியவர்,   பின்னர்  என்பீட்டியின்  (NBT  --  National Book Trust of India)   தமிழ்ப்பிரிவில்  தில்லியில் பணியாற்றத் தொடங்கினார்.    வணிகச் சந்தையின் வழுக்குப் பாதையில் சறுக்கி  குப்பைகளைக்   குவித்துக் குப்புற  விழாமல்,  தீர்மானமாக  மனம் கொண்ட எழுச்சிக்கு  ஏற்ப  எழுதும் பழக்கம்  கொண்டிருந்தார்.

சமூகத்துடனான  நுட்பமான  நேர்மையான  சம்பாஷணை முயற்சிகளே  எனது  நாவல்கள்  என்று  எங்கோ  ஆதவனும் தன் எழுத்துக்கள் பற்றி சொல்லியிருக்கிறார்.  தி.  ஜானகிராமனின்  வழித்தொடர்கிற மாதிரியோ  என்று இவர் எழுத்துக்கள்  தோற்ற மயக்கம்   கொடுத்தாலும்,  தி.ஜா.வின்  'அழகுபூர்வமான'  என்றில்லாமல்    'அறிவுபூர்வமான'  என்கிற  வேறுநிலை  எடுத்தவர்   ஆதவன்.  அது இவர் மிகவும் அபிமானம் கொண்டிருந்த  இன்னொரு  தில்லி எழுத்தாளர்
இந்திரா  பார்த்தசாரதியின்  வழி.

ஆதவனின்  இன்னொரு  நாவல்  'காகித மலர்கள்'.  புஷ்பங்களின் இயல்பு,  அவற்றின் மணம்.   இயல்பான குண விசேஷங்களைத் தொலைத்து  காகித மலர்களைப் போல மணமிழந்து   திரியும் மனிதர்களைப்  பற்றிய  நாவலாதலால்  'காகித மலர்கள்'  என்று பெயர்
 கொண்டது.  நா. பார்த்தசாரதியின்   'தீபம்'  இதழில்  தொடராக வந்தது.

கதை,  தேசத்தின் தலைநகரான  தில்லியை நிலைக்களனாகக் கொண்டது.  புது மோஸ்தரில்  நவீன போக்குகளையே  நாகரிகமாகக்  கொண்ட விதவிதமான மனிதர்கள்  அறிமுகம்  ஆகிறார்கள்.  நவீன வாழ்க்கையின் தள்ளு முள்ளுகளில்  சிக்கித் தவிக்கும் ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு ஆசை.   அந்த  ஆசைகளின் நிறைவேற்றத்திற்காக  தங்கள் இயல்புச் சட்டைகளைக் களைந்து  நிர்வாணமாகும்  அவலம்.  அவர்களின் நடவடிக்கைகள்  பல   இவறிற்கெல்லாம்  அந்நியப்பட்ட  சாதாரண மனிதர்களுக்கு    அதிர்ச்சியூட்டுபவை.  இருந்தாலும் ஒவ்வொருவரும்  அவர்களுக்கென்று ஸ்தாபித்துக் கொண்ட  உலகம்  தனித்தன்மை கொண்டவையாக  அவரவர்க்குத்  திகழ்கிறது.    தங்களின் சந்தோஷத்திற்காக எதையும் இழக்க எவரும் தயாராக இருக்கிறார்கள்.  அப்படி அவர்கள் தயாராகுதலில் மனித குலத்தின் மகத்தான மதிப்பீடுகள் மதிப்பிழந்து  செல்லாக்காசுகளாகின்றன.  இழந்த மதிப்பீடுகளை  மீட்டெடுக்க  தனக்குத் தெரிந்த  வழிகளை சொல்வதற்கு  ஒரு நாவல் உருக்கொடுத்திருக்கிறார் ஆதவன்.

தீர்க்கமாகப் பார்த்தால்  'என் பெயர்  ராமசேஷ'னில்  விட்டுப் போனவைகளைச் சொல்ல ஏற்படுத்திக் கொண்ட இன்னொரு முயற்சியாகவும்  'காகித மலர்கள்'  தெரிகிறது.  அதுவே சில
திருத்தங்களுடனான  அவரிடம் ஏற்பட்ட சில மாற்றங்களின் தொடர்ச்சியாகவும்  தெரிகிறது.   'முதலில் வரும் இரவு' என்னும் இவரது சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கியிருக்கிறது.

ஆரம்பத்தில் சிறுவர்களுக்காக எழுதத் துவங்கியவர் ஆதவன்.   'ஆர்வி'  அவர்கள் ஆசிரியராய் இருந்த  கலைமகள் குழும  'கண்ணன்'  பத்திரிகையில்  நிறைய எழுதியிருக்கிரார்.  அப்பொழுது  ஆதவன்,  லெமன், அம்பை, இனியவன்,  ஜே.எம். சாலி,  புவனைக் கலைச்செழியன்
என்கிற  பெயர்கள் எல்லாம் சிறுவர்கள் உலகை மயக்கிக் கோலோச்சிய பெயர்கள்.

குறைவாகவே எழுதி இருந்தாலும் புதினங்கள், குறுநாவல்கள், சிறுகதைகள்,  நாடகம்  என்று எல்லா தளங்களிலும்  தனது முயற்சிகளைப்  பதிந்திருக்கிறார்.  பிற்காலத்தில்  ஆதவனுக்கு  பெங்களூர்  வாழும் இடமாயிற்று.  ஆதவன் எழுதிய நாவல்கள்  இரண்டே.   அந்த இரண்டுமே அவர் எவ்வளவு திறமைகளை  உள்ளடக்கியவர்  என்பதைச் சொல்லிக் கொண்டு  தமிழ் எழுத்துலகில்  நிறைய எதிர்பார்ப்புகளை  ஏற்படுத்தியிருக்கிறது.


10 comments:

வல்லிசிம்ஹன் said...

ஜீவி சார். மிகப் பிரம்மாண்டமான ஆளுமை அவரிடம் இருந்திருக்கிறது. உங்களைக் கவர்ந்த அவர் எழுத்து உண்மையில் அறிவு பூர்வமாகத்தான் இருந்திருக்கவேண்டும்.
இவ்வளவு மனிதர்களை உள்வாங்கி
அவர்களுடைய பிம்பங்களை எழுத்தில் அயராமல் வடித்திருக்கிறார்.

இது நமக்கெல்லாமே நடந்திருக்கக் கூடிய வாழ்க்கைதான்.

ஆனால் எழுத முற்படவில்லை. அவர் எல்லோருக்கும் எடுத்துச் சென்றதால்

சாஹித்ய அகாடமி பரிசு கிடைத்திருக்கிறது.
நீங்கள் இத்தனை விவரம் கொடுத்திருக்காவிட்டால்
அவரை அறிய எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்க வழியில்லை.
இனி சென்னைக்குச் சென்றால் என்னுடன் அந்தப் புத்தகம் வரும்.

பெண் களின் பலவேறு மன உந்துதலை இப்படி யாராலும் சொல்ல முடியுமா.
ஆச்சரியத்திலிருந்து மீள முடியவில்லை.

உங்கள் உழைப்பு என்னை அதிசயிக்க வைக்கிறது.
நன்றி ஜி.

Bhanumathy Venkateswaran said...

ஆதவன் அவர்கள் எழுதிய  ஒரு சிறுகதை படித்த ஞாபகம். உங்களுடைய விரிவான அறிமுகத்திற்குப் பிறகு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அவருடைய படைப்புகளை வாசிக்காத தோன்றுகிறது. நன்றி. 

ஸ்ரீராம். said...

என் பெயர் ராமசேஷன் எப்போதோ படித்தது. என்னிடம் புத்தகம் கிடையாமு. நூலகத்தில் வாசித்ததாந் நினைவு. இதையும், நீங்கள் சொல்லி இருக்கும் காகித மலர்களையும் படிக்க ஆவல்.

வே.நடனசபாபதி said...


ஒவ்வொரு எழுத்தாளரின் கதைகள் பற்றி தாங்கள் தரும் மதிப்புரை மிகவும் சுவாரசியமாக உள்ளது. அந்த கதைகளை உள்வாங்கி அவைகளை தங்களின் பார்வையில் விவரிக்கும் விதமே அவற்றை படிக்கத் தூண்டுகிறது. பாராட்டுகள்!

ஒரு எழுத்தாளரின் எண்ண ஓட்டத்தை இன்னொரு எழுத்தாளரால்தான் அறியமுடியும் போல.

‘புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம்- நலமிக்க
பூம்புனல் ஊர பொதுமக்கட்(கு) ஆகாதே
பாம்பறியும் பாம்பின் கால்’

அறிவுடையோரை தங்களின் அறிவினால் அறிந்துகொள்ளும் திறன் அவர்களைப் போன்ற அறிவு மிக்கோருக்கே விளங்கும் என்ற பொருள் கொண்ட மேலே தந்துள்ள பழமொழி நானூறு பாடல் தங்களின் பதிவைப் படிக்கும்போது நினைவுக்கு வருகிறது.

திரு ஆதவன் திரு தி. ஜானகிராமனின் பாணியைப் பின் பற்றி எழுதினாரோ என்ற ஐயம் தங்களின் திறனாய்வை தொடக்கத்தில் படிக்கும்போது ஏற்பட்டாலும், 'அழகுபூர்வமான' என்றில்லாமல் 'அறிவுபூர்வமான' என்கிற வேறு நிலை எடுத்தவர் அவர் என்று தாங்கள் குறிப்பிட்டது அந்த ஐயத்தை மாற்றிக்கொண்டேன். அவரது நாவலை படிக்க உத்தேசித்துள்ளேன்.

இவரது எழுத்து பற்றி மறைந்த என் அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் அவரது வலைத்தளத்தில் இவர்களது எழுத்துமுறை என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார்.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

தங்கள் மன உணர்வுகளைக் கொட்டிய பின்னூட்டத்திற்கு நன்றி.
வாய்ப்பு கிடைக்கும் பொழுது ஆதவன் படைப்புகளை வாசித்துப் பாருங்கள்.
அவர் பற்றிய கட்டுரையை அரைகுறையாகத் தான் முடித்திருக்கிறேன்.
வேறொரு சந்தப்பத்தில் எழுதுகிறேன்.

ஜீவி said...

@ பா.வெ.

வாசிப்பது மட்டுமில்லாது பகிர்ந்து கொள்ளவும் செய்யுங்கள். நன்றி.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

அவரை வாசிப்பது தான் அவர் எழுத்து பற்றிய கணிப்பிற்கு உகந்தது. அந்த இரு புத்தகங்களும் என்னிடமும் இல்லை. நினைவிருந்து பலவற்றை எழுதுகிறேன். சில கதைகளின் மறுவாசிப்புக்கு இணையம் உதவுகிறது. நீங்களும் அதைச் செய்யலாம்.
நன்றி, ஸ்ரீராம்.

ஜீவி said...

@ நடன சபாபதி

தங்கள் தமையனார் எழுத்து - எழுத்தாளர் சம்பந்தப்பட்ட விவர சேகரிப்பில் பலருக்கு முன்னோடியாகவே இருந்துள்ளார். அவரைப் பற்றிய நினைவுகள் மறக்க முடியாதவை.
அவரை நினைவு கூறும் சந்தர்ப்பங்கள் எல்லாமே அவர் வாழ்ந்த காலத்து அவர் பதிவு தளத்தை அவர் கையாண்ட நேர்த்திக்கு நம்மை இட்டுச் செல்லுகின்றன. அவற்றில் பல தகவல்கள் ஆத்மார்த்தமானவை. அவர் அர்ப்பணிப்பு பதிவுலகிற்கு பொக்கிஷம. இன்றைய தலைமுறையினரில் வாசிப்பு பழக்கம் கொண்டோர் சென்ற தலைமுறையினரைப் பற்றி அறிய வேண்டும். அவர்கள் எழுதிச் சென்றதின் தொடர்ச்சியை இட்டு நிரப்ப முடியாவிடினும் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவாவது முயற்சிக்க வேண்டும். அது தான் அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை.

தங்கள் வாசிப்பு அனுபவத்திற்கும் தொடர்ந்து இந்தப் பகுதியை வாசித்து வருவதற்கும் நன்றி, ஐயா.

கோமதி அரசு said...

ஆதவன் அவர்களைப்பற்றி தெரிந்து கொண்டேன்.
அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.

சிவகுமாரன் said...

ஆதவன் - பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன் . அவ்வளவே. படித்ததில்லை.

Related Posts with Thumbnails