மின் நூல்

Wednesday, May 15, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                       25


ன்று இரவு அசந்து தூங்கினாலும்  சீக்கிரமாகவே எழுந்து விட்டேன்.  எழுந்து பல் விளக்கி காலைக்கடன் முடித்து குளித்து தலை வாரிக் கொண்டிருந்த பொழுது சின்னசாமி உள்ளே நுழைந்தார்.

"நல்லாத் தூங்கினீங்களா, சார்?" என்றார்.

"நல்ல களைப்பு சின்னசாமி.  அதனால் அடித்துப் போட்டாற் போலத் தூங்கி விட்டேன்.."

"அதான் சார் உடம்புக்கு நல்லது.  இன்னிக்கு ட்யூட்டிலே ஜாயின் செய்யணும் இல்லையா?"

"ஆமாம், சின்னசாமி.."

"அதான் உங்ககிட்டே சொல்லலாம்ன்னு வந்தேன்.  நான் கிருஷ்ணகிரி வரை போக வேண்டியிருக்கு..  ரூம் சாவியை  நீங்களே வைச்சிக்கங்க..  மதியத்துக்கு மேலே தான் நான் வருவேன்.. நான் வர்றேன்.." என்று சின்னசாமி கிளம்பினார்.

"கேண்டினுக்குப் போனீங்களா?"

'டீ மட்டும் குடிச்சிட்டு வந்தேன். அது போதும். இப்ப ஏழரைக்கு கிருஷ்ணகிரி பஸ் வரும்.  அதிலே போய்ட்டு மாலை  திரும்பிடறேன்.."  என்று சின்னசாமி கிளம்பினார்.

குளித்து உடை மாற்றிக் கேன்டினுக்குப் போனேன்.   ஜவஹர்லாலைக் காணவில்லை. கவுண்டரில் வேறு யாரோ இருந்தார்கள்.

மறுபடியும் இட்லி தான்.  சட்னி, சாம்பார் என்று எல்லாமே காரமாக இருந்தன.  மனசுக்குப் பிடித்து சாப்பிட முடியவில்லை. கடைசியில் சக்கரையைத்  தொட்டுக் கொண்டு இட்லித் துண்டுகளை விழுங்கினேன்.  காப்பி குடித்தவுடன் ஒரு நிறைவு ஏற்பட்டது.

அலுவலகத்தில் தலைமை எழுத்தரை சந்தித்து வேலை வாய்ப்பு அலுவலக கடிதத்தைத் தந்தேன்.

"ரொம்ப  நாளா கேட்டுக்கிட்டிருக்கோம்.  நல்லவேளை, இப்பவாவது ஒரு  டைப்பிஸ்ட்டை அலாட் பண்ணினாங்களே.." என்ற  ஏக குஷியில் சொன்னவர்,
வேலையில் சேரும் கடிதம்  ஒன்றை எழுதித் தரச் சொன்னார்.  ஜாப் டைப்பிஸ்ட்டாக இருந்த அனுபவம் இந்த மாதிரி கடிதம் எழுதுவதெல்லாம் தண்ணி பட்ட பாடாக இருந்தது.

"ஏஇ சேலம் கேம்ப். நான் புட் அப் பண்ணிடறேன்.. நீங்கள் இப்பொழுதிலிருந்தே உங்கள் வேலையை ஆரம்பிக்கலாம்.." என்ற சற்று ஒதுக்குப்புறமாக ஒரு சுவருக்குப் பின்னால் இருந்த தட்டச்சு மிஷினைக் காட்டினார்.  அதான் உங்க சீட்.. பை த பை இந்தாங்க தற்காலிக ஸ்டாப் ஃபைல்.  இதைப் பார்த்து  நீங்க இன்னிக்கு இங்கே வேலைலே சேர்ந்த லெட்டரையும் புட் அப்  பண்ணிடுங்க.." என்று என்னிடம் சம்பந்தப்பட்ட ஃபைலைக் கொடுத்தார்.

கண்ணைக்  கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது.  "சரி, சமாளிச்சிடலாம்.." என்ற ஒரே நம்பிக்கையில் என் இருக்கையில் அமர்ந்தேன்.  தட்டச்சு  இயந்திரத்தின் மேல் மூடியிருந்த ப்ளாஸ்டிக் கவரை கழற்றினேன்.

அன்று ஆரம்பித்தது தான்  அடுத்த ரெண்டு மாசமும் வேலை பிழிந்து தள்ளி விட்டது.  நேற்று வரை கையால் எழுதிய இரண்டு வரி கடிதங்கள் எல்லாம் தட்டச்சுக்காக என் டேபிளில் கொண்டு வந்து வைக்கப்பட்டன.  நிறைய ஃபைல்களின் மேல்  அர்ஜெண்ட் என்ற tag கட்டியிருக்கும்.  அதையெல்லாம் எடுத்து தனிக் கவனம் செலுத்தி உடனடியாக தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன்..
அப்புறம்  தான் ஒரு நாள் தெரிந்தது.  அந்த ஆபிஸில் அட்ஜெர்ண்ட் ஃபைல் கவர்கள் மட்டும் தான் ஸ்டாக்கில் இருப்பதாகவும் அதனாலேயே  எல்லோரும்  அதையே உபயோகப்படுத்துவதாகவும்.....

சாப்பாடு தான் எனக்கு ஒத்துக் கொள்ளவே இல்லை.  டிசண்ட்ரி, வயிறு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் என்று..  இரண்டு நாட்கள் நன்றாக இருந்தால்  நான்கு  நாட்கள் உபாதை என்று நாட்களைப் பிடித்துத் தள்ளுவதாக இருந்தது.
அலுவலகம் இல்லாத நேரங்களில் சின்னசாமியும்,  கேண்டின் ஜவஹர்லாலும் தான் பேச்சுத் துணையாக இருந்தார்கள்.  ஜவஹர் அவர் அப்பாவைப் பற்றி நிறைய தகவல்களைச் சொல்லுவார்.

இரண்டு மாத காலம் முடியற தருணத்தில் ஒருநாள்,  "ஏ.இ. உங்களைப்  பார்க்க விரும்புவதாக நேற்றே சொன்னார். மறந்து  விட்டேன்.  அர்ஜெண்ட்டா சேலம் கிளம்பிண்டிருக்கார்.  குவார்ட்டர்ஸில் தான் இருக்கார். அவரைப் பார்த்திட்டு வந்திடறீங்களா?" என்று த.எ. என்னிடம் கேட்டார்.

இது வரை ஏ.இ. வீட்டுக்கு போனதில்லை..  "தோ.. எதிர்த்தாற்பல தான். ரோஸ் கலர் பெயிண்ட் அடிச்சிருக்கும் பாருங்க..  கிளம்பிடப் போறார். சீக்கிரம் போங்க.." என்றார் தலைமை எழுத்தர்.

என்னவோ ஏதோ என்று போனேன்.   கதவு சாத்தியிருந்தது.  காலிங் பெல் அடிக்கலாமா,  வேண்டாமா என்று நான் தயங்கிய பொழுதே  "யாரு.. " என்று கேட்டபடியே வெளியே வந்தார்.

என்னைப் பார்த்ததும் அந்த அவசரத்திலும் அவர் முகம் மலர்ந்தது.  "உள்ளே வாங்க.." என்றார்.

செருப்பை கழற்றி விட்டு உள்ளே போனேன்..

எந்த பந்தாவும் இல்லாமல் "உட்காருங்க.." என்றார்.  அவர் நின்று கொண்டிருக்கிறாரே என்று உட்காரத் தயக்கமாக இருந்தது.  "உட்காருங்க.. இதோ வந்திட்டேன்.." என்று உள்ளே போனார்.

அவர் சொல்கிறாரே என்று உட்கார்ந்தேன்.  அடுத்த நிமிஷமே வெளியே வந்தவர், "ராமன்... ஒண்ணு கேக்கணும்.   நாளைக்கு  உங்க டெனியூர் முடியறதா சொன்னாங்க..  இன்னும் இரண்டு மாசத்துக்கு அதை நீட்டிக்கலாமா?.. அது முடியற தருணத்திலே இன்னும் இரண்டு மாசம்ன்னு மொத்தம் நீங்க இங்கே ஆறு மாசம் இருந்தாப் போதும்..  நிறைய வேலை தேங்கிக் கிடக்கும்.. எல்லாத்தையும் முடிச்சிடலாம்.. என்ன் சொல்றீங்க.. நீங்க எஸ்ன்னா, இன்னிக்கு சேலம் போறேன். அப்படியே  இதுக்கு ஈ.ஈ. கிட்டே சாங்கஷனும் வாங்கிண்டு வந்திடுவேன்.." என்றார்.

நான் தயங்கினேன்.  எல்லாம் எனக்கேற்பட்டிருக்கிற வயிற்றுத்  தொந்தரவு தான் காரணம்.  இந்த இரண்டு மாசத்தை ஒப்பேத்தறதே பெரிசா போயிடுத்து.
இன்னும் நாலு மாசம்ன்னா.. முடியவே முடியாது என்று மனசு ஓலமிட்டது. இதை எப்படி பக்குவமா, இவருக்குப் புரியற மாதிரிச் சொல்வேன்?..

"எதுனாலும் சொல்லுங்க.. முடியுமான்னு  கேக்கறேன்.. அவ்வளவு தானே?" என்றார்.

"சார். மன்னிக்கணும்.. நான் ஊருக்குப் போயே ஆகணும்.. எங்க அம்மாவுக்கு ரொம்ப முடிலேன்னு லெட்டர் வந்திருக்கு.." என்று சட்டென்று மனத்தில் தோன்றியவாறு உளறினேன்..

"அப்படியா?.. இதை நீங்க சொல்லயில்லையே?" என்று சட்டென்று துடித்துப் போனார்.   "கடைசி நாள் ஒர்க் பண்ணியே ஆகணுமே?" என்று கன்னத்தைத் தடவியவாறு யோசித்தார். "ஓண்ணு செய்யுங்க.. நான் ஹெட் கிளார்க்கிட்டே சொல்லிடறேன்.. நாளைக்கு எர்லியாகவே ரிலீவிங் ஆர்டர் வாங்கிங்க..  ப்யூன் கிட்டே சொல்லச் சொல்றேன்.  அவன் உங்களை மெயின் ரோடில்லே டூவீலர்லே கொண்டு விடுவான்.  பஸ்ஸைப் பிடிச்சு எப்படியும் சாயந்திரத்துக்குள்ளே போய்ச் சேர்ந்திடலாம்.." என்றார்.

எனக்கோ மனசு குழைந்து போயிற்று..

கிருஷ்ண மூர்த்தி சார்  சுவற்றில் மாலை போட்டு மாட்டியிருந்த போட்டோவைப் பார்த்தபடியே சொன்னார்.  "ராமன்!  உலகம் பெரிசு.. ஆனா தாய் ஒருத்தி தான்.." அதைச் சொல்வதற்குள் அவர் குரல் நெகிழ்ந்து போயிற்று.

நானோ துடித்துப்  போய் விட்டேன்.   'இப்படி ஒருவரிடம் போய் பொய் சொல்லி.. இது நியாயமா?.. '  என்று  தவித்தேன்.

"சரி.. சரி.. நான் பாத்துக்கறேன்..  வேறே யாரையாவது வரவழைச்சாப் போச்சு.." என்று அவர் முடிவெடுத்த பொழுது,  "நான்  வர்றேன், சார்.." என்று வெளியே வந்தேன்.

அன்று  பூராவும் அவர் சொன்னது என்னை வாட்டிக் கொண்டிருந்தது.  எத்தனை வருஷம் ஆச்சு?.. இப்போக் கூட அந்த நல்ல மனுஷரை நினைக்கையில்  அவர் சொன்ன வார்த்தைகள் ஸ்பெஷ்டமாக நினைவுக்கு வந்து மனம் நெகிழ்ந்து போகிறது..

(வளரும்..)


20 comments:

நெல்லைத்தமிழன் said...

அந்த இடத்தின் அனுபவம் முடியணும்னு விதி இருந்தால், இருக்க விடுவதில்லை.

நீங்கள் சொன்ன அதே பொய்யை நானும் என் வேலை காலத்தில் சொல்லியிருக்கேன். மேட்டூரில் எனக்கு அவ்வப்போது உணவளித்த என் பாஸ் மனைவியிடம் 'அம்மாவுக்கு முடியலை அதுனால சென்னை போகிறேன்' என்று சொல்லி, என் வெளிநாட்டு வேலைக்கான ப்ராசஸில் இருந்தேன். மனதுக்குக் கஷ்டம்தான் ஆனால் அந்தச் சமயத்தில் அந்தப் பொய் சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்திருந்தேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இக்கட்டான சூழலில் நமக்கு அமைகின்ற சில நல்ல தீர்வுகள் மனதிற்கு அதிக அமைதியைத் தரும் என்பதில் ஐயமில்லை.

ஸ்ரீராம். said...

சொல்லும்போது மனம் இடறவில்லை. ஆனால் ஏ ஈ பதிலில் குற்ற உணர்வு வந்து விடுகிறது. அவர் வேறு மாதிரி ரீ ஆக்ட் செய்திருந்தால்?!!

வல்லிசிம்ஹன் said...

இரண்டு மாதம் ஓடிவிட்டதா. உணவு சரியாக இருந்தால் நீங்கள்
இருந்திருக்கலாம்.
அந்த கிருஷ்ணமூர்த்தி சார் நல்லவரா இருந்திருக்கிறார்.
ஒரு வார்த்தை உங்களுக்கு இங்கே சௌகர்யம் போதுமா என்று கேட்டிருக்கலாமே.

பாவம் சின்ன வயசில் பதட்டத்தில் அம்மாவுக்கு உடம்புன்னு சொல்லி
விட்டீர்கள்.

என் தம்பி கூட ஃபரீதாபாதில் குளிர் தாங்காமல்
மாமா வீட்டுக்கு ஒரு சனிக்கிழமை வந்துவிட்டான்.

அடுத்தாப்பில என்ன நடக்கிறதுன்னு பார்க்கலாம்.

கோமதி அரசு said...

நம்மை நம்பும் ஒருவரிடம் பொய் சொல்லும் போது மனது சங்கடபடும் தான்.
நல்ல மனிதராக இருக்கிறார், அம்மா என்றதும் மனது இளகி விட்டார்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

பொய் தான். பின்னால் வரும் பின்னூட்டத்தில் கோமதி அரசு அவர்கள் சொல்கிற மாதிரி நம்மை நம்பும் ஒருவரிடம் சுயநலத்திற்காக பொய் சொன்ன போது மனம் சங்கடப்பட்டது.

G.M Balasubramaniam said...

ஒரு வேளை அந்த வேலை உங்களுக்குப்பிடிக்காமல் இருந்திருக்கலாம் உணவு மட்டும் அல்ல என்றுதோன்றுகிறது தப்பிக்கச்சொன்ன பொய்தானே பரவாயில்லை அவருக்கு அவர் தாயின்
நினைவு வந்திருக்கலாம்

ஜீவி said...

@ Dr. B. Jambulingam A.R. (Retd)

ஆமாம், சார். சூழல் தான் காரணம். தப்பித்தால் போதும் என்ற சூழல். தப்பிப்பது தான் முக்கியமாகப் போய் அந்த தப்பிப்பது நடந்ததும் மிகப் பெரிய மன சாந்தி.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

நீங்கள் சொல்வதும் சரியே.. ஆபிஸ் வேலைன்னா சொந்த விஷயங்கங்களுக்கு இடமில்லை என்றோ, அபீஸுக்கு வந்தவுடனேயே சொந்த நினைவுகள், பந்த பாசங்களையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்து விட வேண்டும் என்றோ அவர் சொல்லியிருந்தால் நம் வீம்பு அதிகமாயிருக்கும் என்பது உண்மையே.

ஜீவி said...

@ வல்லி சிம்ஹன்

ஆமாம், முதல் தடவையாக வீட்டை விட்டு வெளியே தங்கினது (ஹோம் சிக்), ஓட்டல் உணவு, அது ஒத்துக் கொள்ளாததால் வயிற்றுத் தொந்தரவு என்று மாற்றி மாற்றி.

பதிவில் சொல்ல விட்டுப் போனது. அதற்கு முதல் நாள் மாலை சின்னசாமியோடு வெளிப் பக்க பூங்கா சிமிண்ட் தரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது ஊன்றி இருந்த கைப்பக்கம் ஏதோ வழுவழுத்த மாதிரி இருந்தது. சட்டென்று விலகி எழுந்திருந்து விட்டேன். "என்ன சார்?" என்ற சின்னசாமிக்கு விஷயத்தைச் சொன்னேன். சின்னசாமி எப்பொழுதும் கையில் டார்ச் வைத்திருப்பார். அடித்துப் பார்த்ததில் நாலடி நீளம் இருக்கும்.
வழுவழு பாம்பு ஒன்று மூலையில் தலை நிமிர்த்திப் பார்த்ததைப் பார்த்ததும் 'அன்றைக்கு திண்ணையில் மோதிய லாரி.. இன்றைக்கு இதுவா?' என்று வியர்த்துப் போனேன்.

நானும் என் அசெளகரியத்தை அவரிடம் வெளிப்படையாகச் சொல்லவில்லை என்பதையும் சொல்ல வேண்டும். சொல்லாததற்குக் காரணம் இங்கிருந்து கிளம்பினால் போதும் என்ற மனநிலைக்கு ஆட்பட்டது தான்.

அந்த போட்டோவில் அவர் அம்மாவைப் பார்த்துக் கொண்டே அவர் சொன்னது இன்றைக்கும்
அவர் குரலோடு மனதில் பதிந்திருக்கிறது.





ஜீவி said...

@ கோமதி அரசு

நீங்கள் சொன்னதே சரி. நம்மை நம்புகிறவர்களிடம் பெரும்பாலும் நாம் நேர்மையாகத் தான் நடந்து கொள்கிறோம்.

அந்தாளைய மனிதர்களின் விஷயமே வேறு மாதிரி. கண்டிப்பு -- நம் நன்மைக்காக. அதட்டிப் பேசுவது - நம்மை திருத்துவதற்காக. கோபம் - நம் நலனுக்காக. எல்லாமும் எதிராளியின் நலனுக்காக என்பது தான் அவர்களின் மனுஷ இயல்பாக இருந்திருக்கிறது.

இந்தக் காலத்திய மொழியே வேறு மாதிரி.. "பெரிசு என்ன சொல்லுதாம்?" என்று அப்பாவே தன் மகனிடம் தன் தந்தையைப் பற்றி..

இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன நேர்ந்தது என்றே தெரியவில்லை.. செயலில், மொழியில், பண்பாடில், பழக்க வழக்கங்களில், நண்பர்களில்... எத்தனை பேரிழப்பு?..

நெல்லைத்தமிழன் said...

ஜீவி சார்... எனக்கும் என்னை நம்பியவரிடம் பொய் சொல்லிவிட்டேனே என்று மனசு சங்கடப்பட்டது.

ஆனால் உண்மை சொல்லியிருந்தால், என் பாஸ் உடனே மேலிடத்தில் சொல்லியிருப்பார். பல சங்கடங்கள் வந்துசேர்ந்திருக்கும். (அதை விளக்கினா பெரியதாக ஆகிடும்). அந்தக் கம்பெனியிலேயே ரிசைன் பண்ணிய ஒருவனை திரும்ப வேலைக்கு (இரண்டு வருடம் கழித்து) எடுத்தது, என் ஒருவனைத்தான். (இன்னொருவர், கம்பெனி அதிபரின் கல்லூரித் தோழர்). அதுனால நான் நேர்முகத்தில் கம்பெனியில் 5 வருடங்களாவது இருப்பேன் என்று கமிட் செய்திருந்தேன் (ஆனால் 1 வருடம் முடிந்ததும் வெளிநாட்டு வேலை கண்டுபிடிப்பதில் மும்முரமாக இருந்தேன். இறைவன் அருளால் கிடைத்தது)

ஜீவி said...

@ ஜிஎம்பீ

அந்த வேலை பிடிக்காமல் இருந்தால் வேலையில் சுணக்கம் ஏற்பட்டிருக்கும். அது ஏற்படவில்லை. அவர்கள் என்னையே இன்னும் 4 மாதங்களுக்கு இருத்திக் கொள்ள விருப்பப்பட்டிருக்கிறார்கள். என் உடல்நிலை பாதிப்பு தான் முக்கியமான காரணம்.

10 (A) (1) பிரிவில் பணியில் சேருவோருக்கு மெடிகல் ளீவு கிடையாது. மெடிகல் லீவு சான்ஷன் செய்யும் அதிகாரமும் வேலை பார்க்கும் இடத்து அதிகாரிக்குக் கிடையாது.
மருத்துவ உதவி அத்தியாவசியமானால் அதற்கான கடிதத்தைக் கொடுத்து சொந்த ஹோதாவில் யாருடைய அனுமதியும் இல்லாமல் கிளாம்ப வேண்டியது தான்.
அப்படிச் செய்தால் அது bad remark ஆகி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அடுத்த வேலைக்கு அனுப்புவதில் ஆயிரம் தடவை யோசிப்பார்கள். என் உடல் அன்றிருந்த நிலையில் இதற்காகத் தான் மருத்துவ விடுப்பு எடுக்காமல் 8 வாரம் தானே, சமாளித்துக் கொள்ளலாம் என்று பணி காலத்தை நிறைவு செய்தேன்.

அந்த போட்டோவில் இருந்தது அவர் தாய் தான். அந்த நெகிழ்ச்சியில் தான் அவர் அந்த சொற்றொடரை உபயோகித்தார்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

மனம் ஒரு வேடிக்கையான வஸ்து. இரண்டு பக்கமுமான நியாயங்களை சிர்தூக்கிப் பார்த்து அது தான் இதனைச் செய் என்று நமக்கு ஆலோசனை கூறி அதை நடத்தியும் வைக்கிறது.

அதோடு மனம் நம்மை விடுவதில்லை. தனது ஆலோசனைக்கு மேற்கொண்டும் சப்போர்ட்டை உருவாக்குவதற்காக, என் ஆலோசனையைக் கேட்காமல் இதை நீ செய்யாமல் இருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் தெரியுமா என்று தன் ஆலோசனனயை மேலும் உயர்த்திப் பிடித்து காலரைத் தூக்கி விட்டுக் கொள்கிறது.

இதற்குத் தான் கண்ணதாசன் கேட்டார்: இரண்டு மனம் வேண்டும்-- இறைவனைக் கேட்டேன்: நினைத்து வாட ஒன்று; மறந்து வாழ ஒன்று -- என்று கேட்டார்.
அதற்கு நியாயம் கற்பிக்க எத்தனை இரண்டுகளை அடுக்குகிறார், பாருங்கள்!

இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால்
உள்ளம் ஒன்று போதாதே! - என்று இறைவனிடம் கோரிக்கை வைக்கிறார்.

அதனால் தான் அவர் கவிப்பேரரசரை விட ஞானத்தால் உயர்ந்த கவியரசர்!

”தளிர் சுரேஷ்” said...

விடுபட்ட நான்கு பகுதிகளை ஒருசேர வாசித்தேன். உங்களின் அனுபவங்கள் எங்களுக்கெல்லாம் ஒரு பாடம்! நல்ல மனிதர்களை உங்கள் எழுத்துக்கள் மூலம் சந்திக்கையில் மனம் நெகிழ்கிறது! வாழ்த்துக்கள்!

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

வாங்க, சுரேஷ். வாசிக்க விடுபட்டாலும் விட்டு விடாமல் நீங்கள் தொடர்ந்து இந்தத் தொடரை வாசித்தது மகிழ்ச்சி அளித்தது. வாசித்ததினால் பிறந்த நல்ல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

இப்பதிவை வாசித்த போது நீங்கள் டக்கென்று அம்மாவுக்கு என்று சொன்னதும் கொஞ்சம் தோன்றியதுதான்... அதே அந்த ஆபீஸர் நம்பிக்கையுடன் உடனே நெகிழ்ந்து நம்பிக்கையுடன் ஆதரவாகப் பேசமும் மனது என்னவோ செய்தது. நம் தேவைக்காக இப்படிச் சொல்லுவது அதுவும் அம்மாவுக்கு உடம்பு என்று....உங்களுக்கும் மிகவும் வருத்தமாகத்தான் இருந்திருக்கும்...இப்போதுவ்ரை நினைவு வைத்து எழுதறீங்கனா அது உங்கள் ஆழ் மனதில் பதிந்த ஒன்று..இல்லையா

கீதா

ஜீவி said...

@ தி. கீதா

நீங்கள் குறிப்பிடும் வருத்தம் எல்லோருக்குமே இயல்பானது தான்.

//இப்போதுவ்ரை நினைவு வைத்து எழுதறீங்கனா அது உங்கள் ஆழ் மனதில் பதிந்த ஒன்று..இல்லையா//

அந்த நாட்களை நினைக்கும் பொழுதே ஒன்று விடாமல் ஒவ்வொன்றாய் வரிசையாக ஒன்று அடுத்து அடுத்தது என்று நினைவுக்கு வருகிறது. இதெல்லாம் எங்கு சேமிப்பாகியிருந்தன என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

இதற்குப் பெயர் தான் ஆழ்மனப் பதிவா?..

இன்று நிகழும் சாதாரண விஷயம் ஒன்று இந்த நேரத்தில் அக்கறை இல்லாமல் மனதிலிருந்து நழுவிப் போய் விடுகிறது. இதே சில மாதங்கள் கழித்து வரிசை கட்டி நினைவுக்கு வருமா?.. உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்கள்.

வே.நடனசபாபதி said...

'பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.'

என வள்ளுவரே சொல்லியிருக்கிறாரே. எனவே தேவைப்பட்டால் போய் சொல்லலாம். அது பிறருக்கு தீங்கு இழைக்காமல் இருக்குமானால். இருந்தாலும் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை என்று சொன்னது தங்களுக்கு என்னவோ போல் இருந்திருக்கும். எல்லாம் நன்மைக்கே.இல்லாவிடில் தாங்கள் அந்த பணியிலிருன்க்டு விடுபட்டிருக்கமாட்டீர்கள்.

தொடர்கிறேன் மேற்கொண்டு நடந்தை அறிய.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

தாங்கள் திருவள்ளுவரின் வார்த்தைகளையே எடுத்தாண்ட பிறகு சொல்வதற்கு என்ன இருக்கிறது?..

தாங்கள் தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, ஐயா.

Related Posts with Thumbnails