மின் நூல்

Monday, March 16, 2020

வசந்த கால நினைவலைகள்...

                                                          49

ரம்பத்திலிருந்தே தன்  எழுத்து  நடையில் வித்தியாசம் காட்டியதால்  சுஜாதா கதைகள் என்றாலே வார்த்தைகளை அவர் எப்படி பின்னியிருக்கிறார் என்பதே முக்கியமாகிப் போய்விட்டது.   அதனால் அவரது காமா சோமா கதைகள் எப்பொழுதும் மனசில் முக்கிய இடம் பிடித்ததில்லை.   இதனால் தானோ என்னவோ  மற்றவர்கள் பெரும்பாலும் வாசித்து அறியாத அல்லது நினைவில் வைத்திருக்காத வித்தியாசமான கதைகளே என் நினைவில் இருப்பதாக ஆயிற்று. 

'மத்யமர்'  பன்னிரண்டு கதைகளில் முதல் கதையான 'ஒரு கல்யாண ஏற்பாடு' கதையில் ஒரு வரி வரும்.  'நரசிம்மன் கூடத்து அலமாரியில் இருந்த  ஹெரால்ட் ராபின்ஸ்  புத்தகங்களை நீக்கி  ஜே.கிருஷ்ணமூர்த்திகளை அடுக்கினார்' என்று வெகு சாதாரணமாக போகிற போக்கில் எழுதுகிற மாதிரி எழுதி விட்டுப் போய் விடுவார்.  நமக்கோ அதுவே அசாத்திய வேலப்பாடுகள் நிறைந்த வார்த்தை கோர்வைகளாகத் தெரியும்.    இந்த  ஒற்றை வரியை ரசிப்பதற்கு  ஹெரால்ட் ராபின்ஸ்  எழுத்து பற்றியும், ஜே. கிருஷ்ணமூர்த்தி பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.   ஒருவரின் குணாம்சத்தை  எதையோ சொல்லி எப்படி வெளிப்படுத்தி விட்டார்  என்று நமக்கு திகைப்பாக இருக்கும்.  அந்நாட்களில்  மனம் தோய்ந்து  சுஜாதாவை படித்த நினைவுகள் இவை. 

'தேடாதே'ன்னு  இன்னொரு குறுநாவல்.  கணபதி சுப்ரமணியம்  என்கிற ஜி.எஸ்.,   எம்.ஏ.  லிட்.,  சமூக அலைக்கழிப்பில்  தமிழ் பத்திரிகைகளுக்கு கவர்ச்சிப் படங்கள் சப்ளை செய்யும் போட்டோகிராபர்.  தொழில் முறையில் நிறைய பெண்களோடு பரிச்சயம் என்றாலும்  எல்லாரும்  அவன் நிக்கானின்  வ்யூ  ஃபைண்டரில் தெரியும்  எஸ்.எல்.ஆர். பிம்பங்கள் தாம்.   அன்றைக்கு தியாகராஜன் என்பவர் சொல்லி ஒரு குட்டி நடிகையை  ஒரு சில போட்டோக்களில் சிறைப்படுத்த  அவள் வீட்டிற்கு வந்திருக்கிறான்.

"கொஞ்சம் அப்படியே சாஞ்சுக்குங்க!.."
"இப்படியா ஸார்?"
"இல்லை..  கொஞ்சம் இடது பக்கமா..  தட்ஸ் இட்.  அப்புறம் மார்லே அந்த ஸாரியை லேசா..  ஓ.எஸ்.  போதும்!  ப்யூட்டிஃபுல்.  கொஞ்சம் சிரிங்க!  என் இடது கையைப் பாருங்க..  ரிலாக்ஸ்!  தட்ஸ் இட்!"

அப்பெர்ச்சர்  எஃப் 8.
ஸ்பீட்  125

காமிராவின் கழுத்தைத் திருக அந்தப் பெண் வ்யூஃபைண்டரில் தீட்டப்பட்டாள்.  அவளை நிறையவே பார்க்க முடிந்தது.

கிளிக்!

"தாங்க்ஸ்.  நீங்க டிரஸ் சேன்ஞ் பண்ணிகிட்டு வாங்க.."

"நீச்சல் உடை இருக்குதுங்க.... நல்லா இருக்கும்னு பேபி சொல்லிச்சு.."

"போட்டுக்கிட்டு வாங்களேன்.."

உள்ளே சென்றாள்.

வாசிக்கிறவரின் விழியோரங்கள் நீச்சல் உடையில் அந்த குட்டி நடிகையின் படத்தை ஜெயராஜ் போட்டிருக்கிறரா என்று சுவாரஸ்யமாக பக்கத்தைத் திருப்புகையில்...

நாம் வெளியே வந்து சுஜாதாவை   தீவிரமாக ஆராய்வோம்.      எழுத்து அதல பாதாள அளவுக்கு  இறங்காமல் அதே நேரத்தில்  லேசான கிறக்க  ஊஞ்சல் ஆட்டலில் வாரப் பத்திரிகை எழுத்துக்களில்  மனம் பேதலிப்பவர்களுக்காக..

--  இது தான் சுஜாதாவா?..  இல்லை; இல்லை!  இதெல்லாம் வாரப்பத்திரிகை  விற்பனைக்காக! (நம்புங்க..)     சினிமாக்கள்லேலாம் அந்தந்த  ரசிகர்களுக்குத் தக்க மாதிரி  சில பல ஐட்டங்கள் வைப்பார்கள் இல்லையா?...  அந்த மாதிரி...    வெள்ளை பேப்பர்களை கருப்பு மசியிட்டு போணியாக்குகிற  வாராந்தரி இண்டஸ்ட்ரி என்ற பகாசுர யக்ஞனத்தில் தானும் ஒருவனாய் தலை கொடுத்த எழுத்தாளனுக்கு எத்தனையோ நிர்பந்தங்கள்..

அப்போ நிஜ சுஜாதா?..     கொஞ்சம் இருங்கள்.  அந்தப் பெண் டிரஸ் மாற்றி வந்து விட்டாள்.

"ரெடி ஸார்!"

திரும்பினேன்.  நீச்சல் உடை பொருந்தியே இருந்தது.  கால்கள் நீளமாகவும்,  தொடை அரை படாமலும்,  சற்று வித்தியாசமானவள்.

"இது யார் ரூம்?" என்றேன்.

"என் ரூம் தான்!.."

"அப்ப இந்த புஸ்தகமெல்லாம் யார் படிக்கறாங்க?"

"நான் தான்.  ஏன்?"

ஏன் எப்படிச் சொல்வேன்?..  பெண்களில் உன் போன்றவர்கள் எல்லாம் 'ராணி'யில் படக்கதைக்கு மேல் படிக்க மாட்டார்கள். நீ எப்படி Zen  படிக்கிறாய் என்று கேட்பது அநாகரீகம்.  பேச்சைத் தவிர்.  காமிரா மூலம் பேசு.

"உக்காருங்க.."

உட்கார்ந்தாள்.  சின்ன மார்பும்,  இலை போன்ற வயிறும், நீண்ட கால்களும்..  நிதானமாக ஃபோகஸ் செய்தேன்.

"முழங்காலை முதல்லே கட்டிக்கங்க."

ஃபிளாஷ் கைடு நம்பர்  80 : 100  ஏ.எஸ்.ஏ.  பத்தடி தூரத்தில் எடுக்கிறோம் என்றால்  அபெர்ச்சர் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று மனக்கணக்குகளில் எண்ணங்களைக் கட்டாயப் படுத்தினேன்.  அவள் கலைத்தாள்.

"சிரிக்க வேண்டாம்."

"ஏன் நல்லா இல்லையா?"

"இந்த போஸூக்கு சிரிச்சா நல்லால்லே.."

"சிரிக்க வேண்டாம்னு சொன்னா சிரிப்பு வருது" என்றாள்.

"சிரியுங்க.. சிரிச்சு முடிச்சுட்டு வாங்க.  அப்புறம் எடுக்கலாம்."

"கோவிச்சுக்கறீங்களா?"

"என் தொழிலே கோபமே கூடாதுங்க!"

"என் தொழில்லயும்!"

"சிரிச்சாச்சா?"

"ஆச்சு.."

அவளோ  பி.ஏ.  லிட்.,  அவள் வீட்டு புத்தக அலமாரியில்  Zen and  the art of  Motor cycle maintenance   என்னும் புத்தகம் பார்த்த திடுக்கிடுதலில் அவளின் மீதான மதிப்பு அவனுக்குக் கூடி, அறிவுலக பிரஜைகளாய் இருவரும் பிணைக்கப்பட்ட சடுதியில்  அவர்களுக்கிடையே  காதல் மலர்ந்து  நிறைய மல்லாந்து... என்று கதை போகும்.   'கரையெல்லாம் செண்பகப் பூவி'ன் விட்ட குறை தொட்ட குறையாக  இந்தக் கதையில் ஆரம்பத்தில்  புவியரசுவின் கவிதையில் ஆரம்பித்து,  மு. மேத்தாவையும் தொட்டு,  'சேரும் முகவரி சரியில்லை;  அனுப்பிய முகவரியும் அதில் இல்லை;  ஒரு கடிதம் அனாதையாகி விட்டது'  என்ற புதுக்கவிதையைச் சொல்லி அதை யார் எழுதியது என்று யோசிக்க வைத்து,  ராபர்ட்  ஃப்ராஸ்ட்,  எரிக்கா யாங்,  ஈஸாப் கதைகள்,  ஜென் கதைகள்,  அலைஸ், எலிஸபெதன்  டிராமா,  Image  Processing,  கம்ப்யூட்டர்  டிஜிட்டைஸர்  என்று  நிறைய   அறிமுகங்கள் சிடைக்கும் என்று சொல்லி  விடுவது சுலபம்.   கதைப் போக்குக்கு   உறுத்தாமல்  இத்தனை சமாச்சாரங்களை தான் சொல்லுகிற விஷயத்தில் எப்படி உட்படுத்துகிறார் என்பது தான் சுஜாதாவின்  சாமர்த்தியம்.  ஒரு இடத்தில், "எனக்கு பேசற விஷயம் பெரிசல்ல,  ஜி.யெஸ்!.. பேசற முகம், அதனுடைய சலனங்கள்,  கண்கள்,  கைவிரல்கள்..  பேசுங்க.." என்று சொல்லி அயர வைப்பார்.

அதே மாதிரி தான் 'வண்ணத்துப் பூச்சி வேட்டை'யிலும்.  என்னவோ ஜிலுஜிலுன்னு ராஜபாட்டையில் போகிற சப்ஜெக்ட் தான்.  வேறு யார்  எழுதினும்  (அ)  வழக்கமான மாவரைப்பாக இருந்திருக்கும்;  (ஆ) சவசவக்க வைத்து சொதப்பி
இருப்பார்கள்;   (இ)  அத்தியாயம் அத்தியாயமாக கட்டுரை எழுதி கதை என்று பெயரிட்டு கொட்டாவி விட வைத்திருப்பார்கள்.  இந்த வண்ணத்துப் பூச்சியோ  சுஜாதாவின்  கைபட்டு சும்மா  சிட்டு போல சிறகடிக்கிறது.

இதிலும்,  எலிசா பிஷப்,   வாலஸ் ஸ்டீவன்ஸ்,  எமிலி   டிக்கின்ஸன், தாவ் தே சிங், டெரக் வால்காட் போன்றவர்கள் சொன்னதைச் சொல்லி  அதற்கிடையில்  ஆத்மா நாமையும்,   இளம்பிறையையும் நினைவு கொண்டு அவர்களின் துணுக்குக் கவிதைகளைத் தூக்கிப் பிடித்திருப்பார்.  இந்தப் புதினத்தில் தான்  சுகுமாரனின் 'அள்ளி கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்,  நதிக்கு அந்நியமாச்சு;  இது நிச்சலனம்.
ஆகாயம் அலைபுரளும் அதில்.  கை நீரைக் கவிழ்த்தேன், போகும் நதியில் எது என் நீர்?'  என்னும் கவிதை வரிகளை அங்கலாய்ப்புடன்  சொல்லியிருப்பார்.   அதுமட்டுமில்லை,   Bend  and you will be whole -   Cut and you will be straight  -  Keep empty and you will be filled - Grow old and you will be renewed..'  என்னும் லாவ்ட்ஸுவின் வரிகளை  அழகாக,  அதற்கான இடத்தில், அற்புதமாக, அர்த்தபூர்வமாக  எடுத்தாண்டிருப்பார்.

இதெல்லாம் தமிழுக்கு புதுசு.  இதையெல்லாம்  சொல்லாமல் அவரால் கதையை வெறும் கதையாக எழுத முடியாது.  தான் படித்து பரவசப்பட்டதையெல்லாம் சொல்வதற்காகத் தான் கதை -- கட்டுரை என்று அது  அதற்கேற்ற எழுத்து ரூபத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

'காகித சங்கிலிகள்',  'குருபிரசாத்தின் கடைசி தினம்'  மனதை உருக்கும் குறுநாவல்கள் பலருக்கு அறிமுகம் ஆகியிருக்கும் என்பதினால்  அவை பற்றிச் சொல்வதைத் தவிர்க்கிறேன்.

(வளரும்)

11 comments:

வல்லிசிம்ஹன் said...

படித்தேனா இல்லையா மறந்து விட்டது.
புதுக் கோணத்தில் சார் மின்னுகிறார்.
போற்றிய உங்களுக்கு மிக நன்றி ஜீவி சார்.
அவர் எழுத்துக்கு அடிமையாகாதவர்களே அப்போது கிடையாது.

அவர் எழுத்து தொடாத துறைகளும் இல்லை.
இத்தனைக்கும் மேல் எப்படி அவர் அடக்கமாக இருந்திருக்கிறார்.!!!!!!!

இப்போது மீண்டும் படிக்கும் ஆவல் படபடக்க வைக்கிறது. எங்கு செல்வது
அவர் புத்தகங்களுக்கு:(
சிறு நீரகக் கோளாறு சம்பந்தமாக ஒரு கதை எழுதினாரே.
அந்தப் பெயர் கூட மறந்து விட்டது.
அதி அற்புதம் அந்த நாவல்.
மிக நன்றி ஜீவி சார்.
நல்லதொரு தகவல் களஞ்சியம் நீங்கள். நிறைய எழுதுங்கள்.

நெல்லைத் தமிழன் said...

//தான் படித்து பரவசப்பட்டதையெல்லாம் சொல்வதற்காகத் தான் கதை -- கட்டுரை என்று அது அதற்கேற்ற எழுத்து ரூபத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.//

இது சரியான விமர்சனமாகத் தெரிகிறது. வாரப்பத்திரிகைக்கு வேண்டிய கிளுகிளுப்பு இருந்தாலும் அதன் ஊடே தெரிந்த அவரது புத்திசாலித்தனம்தான் அவரது எழுத்தை ரசிக்கும்படிச் செய்தது.

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க

ஸ்ரீராம். said...

கதைகளில் கவர்ந்து கட்டுரைகளுக்கு இழுத்தவர்.  பிற்காலங்களில் அவரது கதைகளைவிட அவரது பொது எழுத்துகளை (எண்ணங்கள், எழுத்துகள், கற்றதும் பெற்றதும், ஓரிரு எண்ணங்கள், மாவிலைத்தோரணங்கள்...   இப்படி.  அப்புறம் விஞானக் கேள்வி பதில்கள்)  ரசிக்கத் தொடங்கினேன்.

வே.நடனசபாபதி said...

சுஜாதாவின் எழுத்தை நன்கு இரசித்து விமர்சித்திருக்கிறீர்கள்.அவரது படைப்புகள் அனைத்தையும் படித்து இரசிக்க எனக்கு விருப்பம்உண்டு. தொடர்களுக்கு நாவல்களுக்கு பெயர் வைப்பதில் சுஜாதாவை மிஞ்சமுடியாது. பெயர்கள் எல்லாமே புதுமையாய் இருக்கும் கரையெல்லாம் செண்பகப் பூ, கொலையுதிர் காலம், கொலை அரங்கம், மேகத்தை துரத்தியவன், ஒரு நடுப்பகல் மரணம், 24 ரூபாய் தீவு, ஆ..!,வாய்மையே சில சமயம் வெல்லும், இளமையில் கொல் என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும் என் இனிய இயந்திரா மற்றும் மீண்டு ஜீனோ வின் மூலம் எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தமுடியும் என்பதை வாசகர்களுக்கு எளிதாக் புரிந்துகொள்ளும் வகையில் கதை மூலம் சொல்ல அவரால்தான் முடிந்தது. அவர் இப்போது இருந்தாலும் இன்னும் என்னென்னவோ புதுமைகள் செய்திருப்பார்.

தொடர்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

அவரது எழுத்து பற்றிய விசாலமான பார்வை உங்களுடையது. பாராட்டுகள். நீங்கள் குறிப்பிட்ட புத்தகங்களில் ஒன்றிரண்டு வாசித்தது மட்டும் என் நினைவில்.

ஜீவி said...

@ வல்லி சிம்ஹன்

இந்தப் பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் 'காகித சங்கிலிகள்' குறுநாவல் தான் அந்த
சிறுநீரகக் கோளாறு சம்பந்தப் பட்ட கதை.

தொடர்ந்து என் நினைவுகளை வாசித்து வருவதற்கு நன்றி, வல்லிம்மா

ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

தங்களின் ஆழ்ந்த புரிதலுடனான வாசிப்புக்கு நன்றி, நெல்லை.

ஒவ்வொரு எழுத்தாளரும் ஒவ்வொரு விதம். வாரப்பத்திரிகை எழுத்து என்றாலும் ஜெய்காந்தன் இப்படியெல்லாம் மாட்டிக் கொள்ளவில்லை, பார்த்தீர்களா?..

சுஜாதாவின் தேர்ச்சி அவரது அறிவியல் பூர்வமான ஈடுபாடுகள். மின்னணு, எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் பணியாற்றிய knowledge அவருக்குத் துணையாக இருந்திருக்கிறது. தான் ஈடுபாடு கொண்டிருந்த அறிவியல் விஷயங்களை நேரடியாக கட்டுரைகளாக எழுதியிருந்தால் இந்த அளவுக்கு அவரது அறிவியல் நூல்களே பிரபலமடைந்திருக்காது. இறுதி எல்லை அறிவியல் என்று எடுத்துக் கொண்டால் இதில் ஆரம்பித்து அதில் வெளிப்பட்டு வெற்றி அடைந்திருக்கிறார் என்று தான் கொள்ள வேண்டும்.

அடுத்த பகுதியில் சுஜாதாவை வேறு கோணத்தில் பார்க்கலாம். நன்றி.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

அவரத கதை எழுத்து தான் நம் எல்லோருக்குமே ஆரம்பம். ஒரு விஷயத்தை சுவாரஸ்யமாக சொல்வது எப்படி என்று ஆய்ந்து வெற்றியடைந்தது தான் அவரது எழுத்துத் திறமையும்.

அதனால் தான் அவர் எழுதினாலும் (லாண்டிரி கணக்கு?) கேள்வி கேட்காமல் நமக்கும் பிடித்திருந்தது.

நேரம் கிடைக்காத அவஸ்தை புரிகிறது. நன்றி.

Bhanumathy Venkateswaran said...

சுஜாதாவை மிகவும் ரசித்து படித்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது. அவருடைய பஞ்சபூத கதைகள்(சாவியை வந்தது) வாசித்திருக்கிறீர்களா? சிலருடைய கதைகளை ஆரம்பம், நாடு, இறுதி என்று ஓட்டி விடலாம், சுஜாதாவின் சிறப்பு ஒரு வரியைக் கூட மிஸ் பண்ண முடியாது. னென்றால் எங்கே என்ன வைத்திருக்கிறார் என்று தெரியாது. பலர் அவரை காபி அடிக்க முயன்றாலும், முடியாமல் போனதுதான் அவருடைய ஸ்பெஷல்.

சிகரம் பாரதி said...

தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 14 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

15 ஆவதாக தங்கள் வலைத்தளமும் இணைக்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் அறியத் தருகிறோம்.

தற்போது, தங்களது வசந்த கால நினைவலைகள்… பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

Related Posts with Thumbnails