மின் நூல்

Thursday, March 12, 2020

வசந்த கால நினைவலைகள்..

                                                           48

சுஜாதா யார் என்று தெரியாமலேயே சுஜாதாவின் எழுத்து  நடையை மோஹித்தது தான் ஆரம்பத்தில்   நடந்தது.  இவர் தான் சுஜாதா என்று குமுத போட்டோ பார்த்து  மனசில் குறித்துக் கொண்டது எல்லாம் பின்னால் தான்.  நா.பா. கூட என்னிடம் சொல்லியிருக்கிறார்.. 'எழுத்தாளனுக்கு போட்டோ எல்லாம் எதுக்கு?.. எழுதுகிறவன்  மனத்தைப் புரிந்து கொண்டு அன்பு செலுத்தினால் சரிதான்'  என்று.  சொல்லப் போனால் அவர் சொல்வது தான் சரி.  சினிமா நடிகரைத் தவிர அத்தனை பேருக்கும் இது பொருந்தும்.  சினிமா நடிகரிடம் நெருக்கம் கொள்கிற  'அந்தஸ்த்தும்' அவ்வளவு இலகுவாக யாருக்கும் கிடைத்து விடாததும் ஒரு வகையில் நல்லதுக்குத் தான்.   அநாவசிய நேர விரயம் இல்லை.

அன்றைய வட ஆற்காடு மாவட்டத் திருப்பத்தூரில் நான் தொலைபேசி இலாகா பணியில் இருந்த காலத்தில் உள்ளூர் இலக்கிய  அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் எழுத்தாளர் சுஜாதா பேசுவதாக  இருந்தது.  மதியம் 3 மணி அளவில் கூட்டம்.   அன்று காலைப் பணி பார்த்தது செளகரியமாக இருந்தது.                         

மழ மழ பேண்ட்டில் தொள தொள சட்டை நுழைத்து ஒடிசலாக உயரமாக சுஜாதா..   கார்ப்பொரேட் அதிகாரி தோற்றத்தில் ஒரு தமிழ் எழுத்தாளரைப் பார்த்தது அந்தக் காலத்து அதிசயமாக இருந்தது.  உஷா சுப்பரமணியனும் கூட வந்திருந்தார்.  உ.சு.வின் 'மனிதன் தீவல்ல'  இப்போ கூட நினைவில் நிற்கிறது.  நா.பா. சொன்னது மாதிரி எழுத்தாளனின் இருப்பைத் தாண்டி அவர் எழுத்து முந்திக் கொள்ளும் ரகசியம் இது தான்.

அன்றைக்கு மெயின் பேச்சாளர் சுஜாதா தான்.  ஆரம்ப உரைகளுக்குப் பின் சுஜாதா பேச அழைக்கப்பட்ட போது கூச்சமுடன்  கூடிய உதடு  விரியும் புன்னகையில்  மைக் பற்றி "எனக்கு அவ்வளவாக பேச வராது..  கேள்வி--பதில்  மாதிரி வைத்துக் கொள்ளலாமா?" என்று சுஜாதா நெளிந்த பொழுதே 'நம்மில் ஒருவர்' தோரணையில் கூட்டத்தினருக்கு அவர் ரொம்பவும் நெருக்கமாகி விட்டார்.   வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று ஆரம்பித்து,  கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போனதே தெரியாமல் சுஜாதா கூட்டத்தினரைக் கட்டிப் போட்டு விட்டார். .  மைக் முன் நின்று கொண்டு இந்த மாதிரி இவ்வளவு நேரம் இதுவரை பேசிய அனுபவமே எனக்கில்லை என்று அவரே திகைக்கும் அளவுக்கு அந்த இலக்கிய கூட்டம் அமைந்து விட்டது.   அவர் பேசி முடித்து தன் இடத்தில் வந்து அமர்ந்ததும் அவரைச் சந்தித்துக் கைகுலுக்கி 'விண்வெளிப் பயணம்' சம்பந்தப்பட்ட சோவியத் யூனியன் வெளியீடான ஒரு என்.சி.பி.எச்.  புத்தகத்தை அவருக்கு பரிசளித்தது இன்னும் நினைவில் இருக்கிறது.  முதல் பக்கத்திலேயே 'அன்புடன் ஜீவி' என்று எழுதித்தான் கொடுத்திருந்தேன். பிற்காலத்தில் எனக்கு யாரும் புத்தகம் அனுப்ப வேண்டாம் என்று வேண்டிக் கொண்ட அவர் அன்று ஆர்வத்துடன் அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டு சிறு குழந்தை மாதிரி திருப்பித் திருப்பி அதைப் பார்த்துக் கொண்டிருந்த காட்சியை மறப்பதற்கில்லை.  இதெல்லாம் நடந்து இன்றைக்கு ஏறத்தாழ 45 வருடங்களுக்கு மேலிருக்கும்.

குமுதத்தில் வெளிவந்த 'நைலான் கயிறு' தான் நான் படித்த சுஜாதாவின் முதல் தொடர்.  அதைப் படித்த காலத்து, குமுதத்தின் துணையாசிரியர்களில் ஒருவர் எடுத்த அவதாரம் தான் இந்த சுஜாதா என்ற நினைப்பே மேலோங்கியது.  எனக்கு அவர்களில் ஒருவரின் மேல் 'அவர் தான் இவர்' என்று பலத்த சந்தேகம்.   'இதை குமுதத்திற்கே எழுதிக் கேட்டால் என்ன' என்ற ஆர்வத்தில் கேட்க, 'தங்கள் ஆர்வத்திற்கும் கடிதமெழுதி அதை வெளிப்படுத்தியதற்கும் நன்றி'  என்று ஆசிரியருக்காக கையெழுத்திட்டு ரா.கி. ரங்கராஜனிடமிருந்து கடிதம் வந்தது.   அப்படியும் சுஜாதா யார் என்று சொல்லாத சாமர்த்திய பதிலாக அது இருந்தது.

'கணையாழி'யில் கடைசிப் பக்கம் எழுதிய ஸ்ரீரங்கம் ரங்கராஜன்,  குமுதத்திற்கும் ஒரு  கதை எழுதி அனுப்பி வைக்க 'நிறைய எழுதுங்கள்'  என்று அவருக்கு அனுப்பி வைத்திருந்த செக்கின் இணைப்புக் கடிதத்தின் மூலையில் ஆசிரியர் எஸ்.ஏ.பி.  நுணுக்கி எழுதிய எழுத்துக்கள் ஆக்ஸிஜனாக செயல்பட சுஜாதாவின் பிர்மாண்டத்திற்கு அன்றே கால்கோள் விழா நடந்து விட்டது என்று அறிந்தேன்.

இவர் விகடனில் எழுதிய  'ஜன்னல் மலர்',  பின்னால் அதே விகடனில் 'கரையெல்லாம் செண்பகப்பூ' வருவதற்குள்  நன்றாகவே தமிழ் எழுத்துலகில் சுஜாதா தன் ஸ்தானத்தை நிலை நிறுத்திக் கொண்டு விட்டார்.   பூப்போன்ற அந்தக் கவிதைத் தலைப்பு,  கதையின் இடையிட்ட நாடோடிப் பாடல்கள்,  கிராமம் - கிராமம் சார்ந்த மக்கள்,  நாடோடிப் பாடல்கள் பற்றி ஆராயும் நோக்குடன் வந்திருக்கும் கல்யாண ராமன்,  சென்னை வாலிபி சிநேகலதா,  ஜமீன்,  அமானுஷ்யம், மர்மம் என்று கலந்து கட்டி சுஜாதா விளையாடியிருந்ததை  விஷயம் தெரிந்த வாசகன் லெவலில்  அந்நாட்களில் படித்து  நண்பர்களிடம் டிபேட் பண்ணுவதில் அலாதி சுகம் கிடைத்தது.   ஜெயராஜ் ஓவியம்,   ஆனந்த விகடன் பிரசுரம் என்று வெகுஜன வாசகர்கள் கவனிக்கப்படும் எழுத்தாளராக சுஜாதா தலையெடுத்ததும் அப்போது தான்..

சுஜாதாவை நினைத்தாலே '88 வாக்கில் அவர் கல்கி பத்திரிகையில் எழுதிய 'இருள் வரும் நேரம்'ங்கற தொடர் என் நினைவுக்கு வந்து விடும்.  பலருக்கு இந்தத் தொடர் அறிமுகம் ஆகியிருக்காது என்பதினால் லேசாகக் கோடி காட்டுகிறேன்.

பல்கலைக் கழக சைக்காலஜி புரொபசரின் அழகான மனைவி அம்ருதா.  ஒரு கல்யாண ரிஷப்ஷனுக்காக காரில் கிளம்பியவர்கள்,  கார் நடுவழியில் ரிப்பேராகி  நின்று விட வேறு வழியின்றி பஸ் பிடித்து வீடு செல்ல பக்கத்து ரோடோர பஸ் ஸ்டாப்பை நாடுகிறார்கள்.   திமுதிமு கூட்டத்துடன் வந்த பஸ்ஸில் ராம்பிரகாஷ் மட்டுமே திணிக்கப்பட்டு  பின்னால் நின்றிருந்த அவர் மனைவி பஸ் ஸ்டாப்பிலேயே தேங்கி விடுகிறாள்.  ஆட்டோ ஒன்றை செலுத்திக் கொண்டு அந்த வழியே வந்த பாபுவும் அவன் நண்பன் பால்குண்டுவும் இதைப் பார்த்து அடுத்த ஸ்டாப்பில் பஸ்ஸைப் பிடித்து விடலாம் என்று அம்ருதாவை  நம்ப வைத்து ஆட்டோவில் ஏற்றிக் கொள்கின்றனர்.  கபன் பார்க் இருட்டு அவர்களுக்கு வசதியாக அம்ருதா அபலையாய் அவர்கள் பசிக்கு இலக்காகிறாள்.

இப்படிக் கதையை ஆரம்பித்து புரொபசர்--  அந்த விபத்திற்குப் பிறகு மன நலம் பாதித்து போன அவர் மனைவி அம்ருதா,  புரொபசர்-- அவர் மாணவி வர்ஷா,  வர்ஷா-- வர்ஷாவின் புரொபசர் மீதான் கிரேஸ். வர்ஷா - புரொபசர் பழக்கத்தை தீவிரமாகக் கண்காணித்து மனம் பேதலிக்கும்  அம்ருதா,  ஆட்டோ பாபு - அவன் அம்மா லஷ்மி, சிக் பேட்டை விவகாரங்கள் என்று தொட்டுக் கொள்ள நிறைய ஐட்டங்களுடன் பரிமாறுகிறார் சுஜாதா.   இப்படியோ, அப்படியோ என்று எல்லா சாத்திய கூறுகளையும் அலசும் வேகத்தில் மனித மனத்தின் அத்தனை அடிமன ஆழ விகற்பங்களும் வெளிச்சம் போடப்பட்டு வெட்கங்கெட்டுத் திரிகின்றன.    சைக்யாரிஸ்டுகள் புழங்கும்  வார்த்தைகள் புதினத்திற்கு தனி யதார்த்தத்தைக் கொடுக்க தமிழுக்குப் புதுசான சூழ்நிலை விவரிப்புகள் என்று எடுத்துக் கொண்ட விஷயத்தில் படிப்பவரின் ஈடுபாடு கூட அதை அர்ப்பணிப்பு உணர்வுடன் சொல்லும் சுஜாதாவின் அதீத திறமை வெளிப்படும் நாவல் இது.

(வளரும்)




23 comments:

ஸ்ரீராம். said...

ஒருகட்டத்தில் சுஜாதாவை நேரில் பார்க்கும் ஆவல் நிறைய இருந்தது.   பார்த்தால் என்ன பேசுவது என்று தோன்றும் சமயம் அந்த எண்ணத்தை உதறி விடுவது வழக்கம்.  அவர் மறைந்த விஷயம் அறிந்ததும் என் நண்பன் 'சென்று பார்க்கலாமா' என்று கேட்டான்.  உயிரோடு இருக்கும்போது பார்க்காத வரை அந்தக் கோலத்தில் பார்க்க விரும்பாததால் வேண்டாம் என்று மறுத்து விட்டேன்.  மனதில் என்றும் வாழ்பவர் அவர்.

ஸ்ரீராம். said...

ஜன்னல்மலர், கரையெல்லாம் செண்பகப்பூ இரண்டு கதைகளுமே படமாகின.  நான் பார்க்கவில்லை!  கதை மட்டும் படித்திருந்தேன்.

ஸ்ரீராம். said...

இருள் வரும் நேரம் படித்த மாதிரி நினைவுக்கு வரவில்லை.  கலெக்ஷனில் இருக்கிறதா என்று தேடிப்பார்க்க வேண்டும். இதில் கணேஷ்-வஸந்த் வரமாட்டார்கள் இல்லை? (வந்தால்தான் படிப்பேன் என்று அர்த்தம் இல்லை!)

G.M Balasubramaniam said...

எனக்கு சுஜாதா எப்போதாவது மெக்சிகோ சலவைக்கரி ஜோக்ஸ் சொல்லி இருக்கிறாரா ஏகப்பட்ட பில்ட் அப் இருந்ததே

வை.கோபாலகிருஷ்ணன் said...

சற்று நேரம் முன்புதான் சுஜாதாவின் சிறுகதை ஒன்றை என் நண்பர் வாட்ஸ்-அப் மூலம் என்னுடன் பகிர்ந்துகொண்டிருந்தார். கதையின் தலைப்பு: ’முதல் மனைவி’. படித்துப் பார்த்து அதிலேயே லயித்து, அவரின் கதை எழுதும் பாணியையும், கதையை அவர் முடித்துள்ள விதத்தையும் கண்டு சற்றே அதிர்ந்து போனேன்.

இங்கு வந்து பார்த்தால் இங்கு ‘மீண்டும் அதே சுஜாதா’. ஆஹா.... தங்களுக்கு அவருடன் ஏற்பட்டுள்ள இனிய அனுபவங்கள். அருமை சார்.

Anonymous said...

சுஜாதா நான் படித்த முதல் தமிழ் எழுத்தாளர். எழுத்தைப் படித்த ஆரம்ப அனுபவங்கள் முதல் காதல் போல் சுகமான நினைவுகள்.
- அப்பாதுரை

Bhanumathy Venkateswaran said...

ஸ்ரீராம் அனுப்பியிருந்த லிங்கில் சுஜாதாவின் கதைகளில் கதைகளில் ஆயிரத்தில் இருவர் இன்னும் கதையை இப்பொழுது தான் படித்தேன் இங்கே வந்தால் இங்கேயும் சுஜாதா புராணம் இருள் வரும் நேரம் நான் படித்திருக்கிறேன் அருமையான கதை அதில் அமெரிக்காவில் வேலைபார்த்த ப்ரொபசர் தான் இந்தியாவிற்கு வந்த வந்ததற்கு காரணம் கூறுவார் இதுவரை என்னுடைய கார் பஞ்சராகி நிற்கவில்லை என்று ஒரு காரணம் சொல்வார் அது எழுதிவிட்டு சுஜாதா அன்று அவருடைய கார் பஞ்சர் ஆனது என்று முடித்திருப்பார் அதற்கு அடுத்த வாரம் தொடரும்

வல்லிசிம்ஹன் said...

மிக மிக அருமையான அனுபவம் சுஜாதா சாரோடு.
நீங்கள் அப்படியே அவரை வர்ணித்திருக்கிறீர்கள்.
அவர்கள் வீட்டுக்குப் போனாலும்,
மனைவியை விளித்து இன்னார் வந்திருக்கிறார் என்று சொல்லிவிட்டுப்
புத்தகக் குவியலில் மூழ்கிவிடுவார்.


இந்தத் தடவை சாரின் இரண்டு மூன்று
புத்தகங்களை எடுத்து வந்திருக்கிறேன்.
கல்கியில் வந்த தொடர் நான் படிக்கவில்லை.
எப்படித்தான் மனித மனங்களைக் கணிப்பாரோ.
இன்னுமதிசயம் தான்.
அந்த தீவிரப் பார்வையும் ,சற்றே லஜ்ஜைப் படும்
முகமும் அப்படியே நினைவில்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (1)

ஒன்றைக் கவனித்திருக்கிறிர்களா, ஸ்ரீராம்? 'அவரில்லாமல் அந்த பத்திரிகை இல்லை' என்று ஒரு பத்திரிகைக்கு வாய்த்த எழுத்தாளர்களை அந்த பத்திரிகைகள் கூட மறந்து போயிருக்கின்றன. இந்த பத்திரிகைக்கு அமைந்து போன இவர்கள் என்று மனசில் ஒரு லிஸ்ட் போட்டுப் பாருங்கள். (எ.பி.க்கான குறிப்பு என்று கொண்டாலும் சரி) அவர்கள் நினைவு நாளில் கூட ஒரு ஸ்டாம்ப் சைஸ் போட்டோ, அவர் பற்றிய குறிப்பு போட்டு அந்தப் பத்திகைகள் அவர்களை நினைவு கொள்வதில்லை.

ஆனால் வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களை, எழுதும் பழக்கம் கொண்டவர்கள் தங்களை பாதித்த எழுத்து ஆளுமைகளை மறக்கவே மாட்டார்கள். 'மனதில் என்றும் வாழ்பவர்' என்று நீங்கள் சொல்லியிருப்பதற்கு அர்த்தம் இது தான்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

எந்த எழுத்தாளரும் தனக்காக எழுதும் கதைகள் என்று சில உண்டு. குறிப்பிட்ட சில எழுத்தாளர்களை மிகவும் பிடித்துப் போன வாசகர் வெகு சுலபத்தில் அப்படியான கதைகளை அடையாளம் கண்டு கொள்வர். இது தான் எழுத்தாளரும் - அந்த எழுத்தாளரைப் பிடித்த வாசகரும் மனத்தளவில் ஒன்று சேரும் புள்ளி.

பத்திரிகை நிர்பந்தம் என்று இன்னொரு அழிச்சாட்டியம் வேறே. நீங்கள் இப்படி நடிப்பதைத் தான் ஜனங்கள் விரும்புகிறார்கள் என்று நடிகர்களிடம் சொல்கிற மாதிரி, நீங்கள் இப்படி எழுதுவதைத் தான் எங்கள் பத்திரிகை வாசகர்கள் விரும்புகிறார்கள் என்று பத்திரிகை விற்பனைக்கு சுய சிந்தனை படைத்த எழுத்தாளனை பலி வாங்குவது.
கணேஷ் - வசந்த் பாத்திரப் படைப்புகள், அதற்காகவே வாய்த்த மூன்றாம் தர சொல்லாடல்கள் எல்லாம் சுஜாதா நினைத்தாலும் விலக முடியாத ஒரு நிர்பந்தத்தை அவர் மேல் திணித்தன. இந்த தொல்லைகளிலிருந்து தப்பிக்க சுஜாதா எவ்வளவோ பிரயத்தனங்களை மேற்கொண்டிருக்கிறார். சிலப்பதிகாரம் - ஒரு எளிய அறிமுகம், திருக்குறள் புதிய உரை, திரைக்கதை புனைய பயிற்சி, சில புதுக்கவிதை முயற்சிகள், தொல்காப்பிய ஆர்வம், அம்பலம் இணைய இதழ் எழுத்துக்கள், கற்றதும் பெற்றதும், தலைமைச் செயலம் என்று மனித மூளையைப் பற்றி - என்று என்னன்னவோ முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இந்த புரிதலுக்கு முன்னால் கணேஷ் - வசந்த் எல்லாம் ஒனறுமில்லை என்று ஒரேயடியாக கைகழுவாமல், கணேஷ்--வசந்தைத் தாண்டி சுஜாதாவை வாசிக்க முயன்றால் நம் வாசிப்புக்கு சுஜாதா வேறுபட்ட நபராக உருவெடுப்பதை நாமே உணரலாம்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (3)

இருள் வரும் நேரம் -- சுஜாதாவின் மிகப் பிரமாதமான படைப்பு. 'கல்கி' பத்திரிகையில் தான் சுஜாதாவால் இதை வெளியிட முடிந்திருக்கிறது என்பதே கல்கியின் அந்நாளைய சிறப்பாகிப் போகிறது. இதே மாதிரியான வாசகர்கள் பார்வையில் அவ்வளவாகப் படாத இரண்டொரு கதைகள் என்னை பாதித்த விதம் பற்றி இங்கு எழுதப் போகிறேன். அத்துடன் அவருடன் நான் கொண்ட சில எழுத்துத் தொடர்புகளும்.

தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, ஸ்ரீராம்.



ஜீவி said...

@ ஜிஎம்பீ

ஜிம்பீ சார்.. நன்றாக யோசித்துப் பாருங்கள்.. அது வேறு எந்த நாட்டு சலவைக்காரியோ!

சட்டுனு ஞாபகத்துக்கு வரமாட்டேன் என்கிறது.. :))

வெங்கட் நாகராஜ் said...

நினைவுகள்....

எப்போது சுஜாதா படிக்க ஆரம்பித்தேன் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். பள்ளி, கல்லூரி நாட்களிலேயே வாசிக்க ஆரம்பித்தாலும் புத்தகங்கள் அதிகம் வாசித்தது தில்லி வந்த பிறகு தான். பெரும்பாலான சுஜாதா புத்தகங்கள் இங்கே வந்த பிறகு தான் வாசிக்கக் கிடைத்தது.

உங்கள் அனுபவங்கள்/நினைவுகளை பகிர்ந்து கொள்வது நன்று. தொடரட்டும் நினைவலைகள்.

வே.நடனசபாபதி said...

நானும் சுஜாதா இரசிகன் தான். ஒவ்வொரு ஆண்டு புத்தக கண்காட்சியிலும் அவரது நூல்களில் குறைந்தது நான்கு அல்லது ஐந்து நூல்களை வாங்குவதுண்டு. இந்த ஆண்டும் நான்கு நூல்கள் வாங்கினேன். தாங்கள் குறிப்பிட்டிருக்கும் ‘இருள் வரும் நேரம்’ என்ற நாவலைப் படித்ததில்லை. வாங்கிப் படிக்கவேண்டும்.

கல்கி,மற்றும் தேவனுக்குப் பிறகு என்னை அதிகம் ஈர்த்தவர் சுஜாதா அவர்கள் தான். அறிவியல், உளவியல் மற்றும் துப்பறியும் கதைகளை நகைச்சுவையுடன் கலந்து தரும் அவரது பாணியே தனிதான். தானாகளின் தொடர் அவரைப்பற்றி சிந்திக்க தூண்டியது. அதற்கு நன்றி!

ஜீவி said...

@ வை. கோபாலகிருஷ்ணன்

உங்களை இங்கு பார்த்ததில் மிகவும் சந்தோஷம், சார்.

'முதல் மனைவி' நான் வாசித்திராத கதை. வாட்ஸாப்பில் வாசிக்கும் கொடுப்பினை தங்களால் கிடைத்தது. :) நன்றி.

தொடர்ந்து வருகை தர வேணும்.

ஜீவி said...

@ அப்பாதுரை

வாங்க, துரை சார்!

முதல் காதல் வெட்டி விட்டுப் போகும் மின்னல் என்பார் காண்டேகர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?.. ஆண்கள் வர்க்கத்தில் அதிகபட்சம் 1,2,3--வரை என்று போகுமா?..

ஒரு கட்டுரை வாசித்தேன்.

மனைவியைக் காதலிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்களாம். முதல் காதலியே மனைவியாக அமைபவர்கள் அதை விட கொடுத்து வைத்தவர்களாம்.

யார் சொன்னது இது என்று கட்டுரையின் கடைசிப் பகுதியில் தான் தெரிகிறது.. ஒரு பிரம்மச்சாரி சொன்னதாம் இது.

ஜீவி said...

@ பா.வெ.

இருள் வரும் நேரம் தொடரை பின்னூட்டம் போட்ட ஒருவராவது படித்திருப்பதில் ரொம்பவும் சந்தோஷம். சுஜாதாவின் படைப்புகளில் என்னை மிகவும் கவர்ந்தது இது.

அமெரிக்காவில் பி.எச்டி. டி.லிட். பண்ணியவர் தான் புரொபசர் ராம்பிரகாஷ். கனடாவிலும் ஆர்வர்டு அமெரிக்காவிலும் இரட்டை டாக்டர் பட்டம் வாங்கியவர் தான்.

ஆனால் நீங்கள் சொல்வது போல இல்லை. உங்கள் நினைவில் கதை போக்கு லேசா மாறியிருக்கிறது. 'இதுக்குத் தான் அப்பப்ப செகஅப் பண்ணிக்கங்கன்னு சொல்லிகிட்டே இருந்தேன்" என்று அவர் மனைவி அம்ருதா தான் சொல்வார்.

கதைப் போக்கை நினைவில் கொண்டது ஒருத்தராவது கிடைத்தாரே என்று சந்தோஷமாக இருந்தது.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

உங்களது பகிர்தல் ஆத்மார்த்தமானது. அதனால் தான் வார்த்தைகள் தங்களைத் தாங்களே சமைத்துக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, வல்லிம்மா.

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜன்

தலைநகரில் தான் சுஜாதா கிடைத்தரா?.. நல்ல நினைவுகள்..

தொடர்ந்து வருவதில் மகிழ்ச்சி. நன்றி.
.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

கல்கி, தேவன், சுஜாதா -- தேர்ந்தெடுத்து வாசித்த தரம் தான் தங்களது.

முதல் இருவரிலிருந்து வேறுபட்டு விஞ்ஞான பூர்வமான அறிவியல், உளவியல் என்று தனித்தும் தெரிவது உண்மை தான். தங்கள் பகிர்தலுக்கு நன்றி, ஐயா.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி ஜீவி சார்.
நீங்கள் அவரைப் பற்றி சொல்லி எங்களையும் பதில் சொல்ல வைக்கிறீர்கள்.
அவரை மெரினாவில் தர்பார் நடத்தும் தலைவராகப் பார்த்திருக்கிறேன்.
சரவணபவனில் ஒரு ஓரத்தில் நின்று தோசை சாப்பிடும்
எளிய மனிதராகவும் பார்த்திருக்கிறேன்.
நானும் இவரும் பக்கம் போய்ப் பேசமாட்டோம்.
ஏதோ தவம் போல அவர் வாழ்வு நடந்திருக்கிறது.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன் (2)

மீள் வருகைக்கு நன்றி, வல்லிம்மா.

தூரத்திலிருந்து இதைப் பார்த்து கிரகித்துக் கொண்டது மேலும் சிறப்பைக் கூட்டுகிறது.

சுஜாதாவிற்கு மிக அண்மையாகப் பழகியவர்களுக்கெல்லாம் இதெல்லாம் நினைவுக்கு வராது. எழுத்து என்பது பொழுது போக்கிற்க்குக் கதை படிக்கிற காரியம் இல்லை.
அந்த எழுத்து நம்மில் என்ன சலனத்தை விளைவித்திருக்கிறது என்பது முக்கியம். ஒரு ஸ்டேஜுக்குப் பிறகு நம்மைப் பிடித்த எழுத்தாளர்களின் எழுத்து நமக்கு மிகவும் அன்னியோன்யமாகி அவர்களோடு விவாதிக்க வைக்கும். சந்தேகங்களுக்குத் தீர்வு கண்டு தெளிய வைக்கும். நட்பு ரீதியாத உறவைப் பேணும். எந்த காரியத்திற்காக அவர் அப்படி எழுத நேர்ந்தது என்று தெரியாமல் பிணக்குகளையும் ஏற்படுத்தும். தெரிந்து விட்டால் அப்படியா சமாச்சாரம் என்று குதூகலிக்கவும் வைக்கும். வாசகர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட தமிழ் எழுத்தாளர்கள் வெகு சிலரே. அதில் சுஜாதாவும் ஒருவர்.

மனமொன்றிய வாசித்தலுக்கு நன்றி, வல்லிம்மா.

சிகரம் பாரதி said...

தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.

எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

Related Posts with Thumbnails