மின் நூல்

Friday, March 6, 2020

வசந்த கால நினைவலைகள்

                                                              47

வ்வொரு  தொலைபேசி இயக்குனருக்கும் அலுவலகத்தில் டிரங்க் போர்ட் இருக்கும் இடத்தில் பேங்க் லாக்கரை விட கொஞ்சம் பெரிதாக லாக்கர் வசதி உண்டு.  அந்த லாக்கரில் அவர் சொந்த சமாச்சாரங்களோடு தங்களுக்கு வழங்கப்படும்  ஹெட்செட்டையும் வைத்திருப்பார்கள்.  தினமும் பணிக்கால ஆரம்பத்தில்  லாக்கரிலிருந்து  ஹெட்செட்டை எடுத்து வந்து டெட்டால் கரைசலில்  பஞ்சு நனைத்து ஹெட்செட்டில் தடவி  அணிவதற்கு தயாராவார்கள்.

சூபர்வைசர் டேபிளில் இருக்கும் பேரேடு போன்ற பொஷிசன் நோட்டில் தான் பணிக்கு வந்த நேரத்தைக் குறித்துக் கையெழுத்திடுவர்.   எந்தப் பொஷிஷனில் அமர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று சூபர்வைசர் குறித்திருப்பார்.
அந்த இணைப்பகத்தில் இருக்கிற  டிரங்க் சர்க்யூட்டுகளை ஆறு டிரங்க் போர்டுகளில் பிரித்திருகிறார்கள் என்றால் ஆறு பொசிஷன்கள் இருக்கும்.   உதாரணத்திற்கு  காஞ்சீபுரம் எக்ஸ்சேஞ்சில்  அரக்கோணம்,  திருவள்ளூர்,  திருத்தணி,  ஸ்ரீபெரும்புதூர், சென்னை போன்ற தனித் தொலைபேசி இணைப்பகங்களுக்குத்  தனி நேரடி லைன் இருக்கும்.  அவை தவிர டயலிங் சர்க்யூட்டுகள்,  SLOD,  MLOD  சர்க்யூட்டுகள்,  பக்கத்து சின்ன கிராமம் போன்ற இடங்களுக்கான  SAX-க்கள்  என்று  ஜாக் ஜாக்காக  பச்சை நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.   அந்த லைன் எங்கேஜ்டாக இருக்கிறது என்பதை பச்சை நிறம் தெரிவிக்கும்.  இப்படியான லைன்கள்  ஒரே  கிட்டத்தட்ட எல்லா டிரங்க் போர்டுகளிலும்  கனெக்ட் செய்யப் பட்டிருக்கும்.    அதனால்  பிஸி இல்லாத  நேரங்களில் இரண்டு அல்லது மூன்று போர்டுகளில் உட்கார்ந்து கொண்டே அத்தனை சர்க்யூட்டுகளையும் மேனேஜ் பண்ணலாம். 

காலையில் டியூட்டிக்கு வரும் ஒரு இயக்குனர் மதியம் அவர் ட்யூட்டி முடிகிற நேரத்தில்  மதிய ட்யூட்டிக்கு வரும்  இயக்குனர்  அவரை ரிலீவ் பண்ண  தயாராக அருகில் நிற்கிற அளவுக்கு எல்லாம் கனக் கச்சிதமாக முன் ஏற்பாடுடன் இருக்கும்.   அதைத் தவிர முழுப்பணி நேரமும் ஒரே  போர்டில் உட்கார்ந்து போரடிக்காமல்  மாற்றி மாற்றி  உட்காருகிற மாதிரி  இரண்டு மணி நேரத்திற்கு ஒரு மாற்றம் இருக்கும்.

புக் ஆகிற அத்தனை டிரங்க் கால்களும்  அப்பப்பவே பேசி முடித்து விடுகிற மாதிரி இருக்காது.  சில கால்கள் பேசப்படாமல் பெண்டிங் வைக்க வேண்டிய அவசியம் இருக்கும்.   உதாரணமாக  PP கால்கள்  குறிப்பிட்ட அந்த நபர் முதல் முறை முயற்சிக்கும் பொழுது  இல்லை என்றால்  ஒரு மணி நேரம் பெண்டிங் வைத்து இன்னொரு முறை முயற்சிக்க  அனுமதி உண்டு.   ஒரு டிரங்க் கால் முயற்சிக்கும் பொழுது அந்த மறுமுனை போனில்  பதில் இல்லை என்றால்  அரை மணி நேரம் பெண்டிங் வைத்து மறு முயற்சி செய்ய  அனுமதி உண்டு.  மாற்றி மாற்றி பணியாளர்கள்  கால்களை (Trunk calls)  கையாளுவதால்  டிஸ்போஸ் ஆகாத ஒவ்வொரு காலும் எந்த காரணத்திற்காக பெண்டிங் வைக்கப்பட்டிருக்கிறது என்று அடுத்து வருபவருக்குத் தெரிய வேண்டும் இல்லையா?..  அதற்காகவே  பெண்டிங் வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு டிக்கெட்டிலும் அதற்கான காரணக் குறிப்பை எழுதியே வைப்பார்கள்.  உதாரணத்திற்கு சில குறிப்புகள்:

குறிப்பிட்ட  நபருடன் தான் பேச வேண்டும் என்று கால் புக் செய்பவர் விரும்பும்  கால்கள்  PP call  என்று  பார்த்திருக்கிறோம்.   டிரங்க் காலை முயற்சிக்கும் பொழுது அந்தக் குறிப்பிட்ட நபர் இல்லாத பட்சத்தில்  1030  PPNA   SI   P -  324  என்று குறிப்பை டிக்கெட்டில் எழுதி டிரங்க் போர்டிலேயே ஒரு பக்கம் இருக்கும்  பீஜன் ஹோலில் வைத்து விட்டு அடுத்த காலை முயற்சிப்பார்கள்.   இந்தக் குறிப்புக்கு  1030 மணிக்கு  Particular Person not available  -- subscriber informed  -  Pending  என்று அர்த்தம்.  குறிப்புக்கு பக்கத்தில் இருக்கும்  324  என்பது அந்த காலை முயற்சித்த  இயக்குனரின்  ஸ்டாப்  நம்பர்.   டிரங்க் கால் சம்பந்தப்பட்ட எந்த காரியத்தை யார் எந்த நேரத்திற்குச் செய்தார்கள் என்பதற்கு துல்லியமான குறிப்புகள் உண்டு. 

இதே போலவான சில குறிப்புகள்: 

1.   NR  SI  P --  No Reply  Sub informed  Pending.  (மறுமுனையில் பதில் இல்லை)  இந்த மாதிரி கால்கள் அரைமணி கழித்து மறுபடியும் முயற்சிப்பார்கள்.  அப்பொழுதும் பதில் இல்லை என்றால்  வாடிக்கையாளர் காலை கேன்சல் செய்ய வேண்டும்.  இதற்கு கட்டணம் ஏதுமில்லை.

2.  R  SI  P  -  Called party  refused to speak  Pending -  Sub informed - Pending.  (மறுமுனையில் தொலைபேசியை  எடுத்தவர் பேச விரும்பவில்லை.   அதனால்  பெண்டிங் வைக்கப்பட்டிருக்கிறது.)  பெண்டிங் வைப்பது  PP கால்களில் மட்டுமே சாத்தியம்.  நம்பர் கால்களில் மறுமுனையில் பேசவில்லை என்றால் உடனே கேன்சல் செய்ய வேண்டும்.  25% கட்டணம் உண்டு.

3.  PPSF  SI  P  --  Particular person sent for - sub informed -  Pending.  (இந்த ரிப்போர்ட்  PCO  கால்களில் மட்டுமே இருக்கும்.   மறுமுனை தந்தி அலுவலகத்தில்  கூட்டிவர ஆள் அனுப்பியிருக்கிறார்கள்)

4.    PPA  P  ( PP Available  call to be connected)  மறுமுனை தந்தி அலுவலகத்தில் பேச வேண்டியவர் வந்து விட்டார் என்று தெரிவிக்கும் குறிப்பு.

5.   No,  ugt -  Number unget

6.  No.  o/o/o  -  Number out  of order.  (5 & 6  இரண்டு குறிப்புகளிலும்   ஃபோனை  டெஸ்ட் பண்ணி  பழுது எண்ணைக் குறித்திருப்பார்கள்.  இந்த மாதிரி கால்களை வாடிக்கையாளர் விரும்பினால் பெண்டிங் வைக்கலாம். இல்லையென்றால் கேன்சல் செய்து விடலாம்.   கேன்சல் செய்து விட்டால்  கட்டணம் கிடையாது.

Docket- க்களைப் பற்றி சொல்ல வேண்டும்.    இந்த டாக்டெட் என்பது  வெளிரிய சிவப்பு நிறத்தில் இருக்கும் வரிசை எண் இடப்பட்ட டிக்கெட்.  இதில் குறுக்கு எழுத்தில் பலவித குறிப்புகள் அச்சிடப்பட்டிருக்கும்.   From  -  To  உண்டு.

டிரங்க் கால்களை புக் செய்யும் இடத்திலே இதற்கான தேவை  இருக்கும்.   24652  எண்ணிலிருந்து  MS  224652 க்கு ஒருவர் கால் புக் செய்திருக்கிறார்.  கொஞ்ச நேரம்  காத்திருக்கிறார்.  கால் வரவில்லை.   உடனே டிரங்க் புக்கிங்கைக்  கூப்பிட்டு காலை கேன்சல் செய்து விடுகிறார்   என்று வைத்துக் கொள்ளுங்கள்.  இந்தச் செய்தியை  அந்த குறிப்பிட்ட  காலைக் கையாளும் போர்டு   இயக்குனருக்குத்  தெரியப்படுத்துவது எப்படி?..  அப்படித் தெரியப் படுத்துவதற்கு உதவுவது தான் இந்த டாக்கெட்.

From  24652  To  MS  224652  என்று டாக்கெட் வெற்றிடத்தில் எண்களை நிரப்பி  CCL  என்ற குறிப்பை டிக் செய்து   பக்கத்து போர்டில் அமர்ந்திருக்கும் இயக்குனர் அருகில் வைத்து விடுவார்.  இந்த டாக்கெட்  பாஸ் ஆகிக் கொண்டே இருக்கும்.  யாருக்கு சம்பந்தப் பட்டதோ அவர்  அந்த   டாக்கெட்டை எடுத்து  குறிப்பை செயல்படுத்துவார்.  எப்படி?..  அந்த குறிப்பிட்ட டிரங்க் கால் டிக்கெட்டை எடுத்து காலை சேன்சல் செய்வது மட்டும் அல்லாமல்  vide Dkt. No.  என்று அந்த டாக்கெட் எண்ணையும்  கேன்ஸல் செய்ததற்கு அத்தாட்சியாக டிக்கெட்டில்  குறித்து வைப்பார்.  அடிக்கோடிட்டு சொல்ல வேண்டியது என்னவென்றால் இங்கு ஒரு வேலை கூட ஏனோ தானோவென்று இருக்காது.. எல்லா செயல்களுக்கும் பின்னால் எடுத்து நிரூபிக்கக் கூடிய ஆதாரம் ஒன்று துணையாக இருக்கும்.

ஃப்க்ஸட் கால் என்பது  குறிப்பிட்ட நேரத்தில்  தவறாது இரு பகுதி நபர்களையும் தொடர்பு படுத்தும்  கால்கள்.  சப்க்ரிப்ஷன் ஃப்க்ஸ்ட் கால் என்பது பெரும்பாலும்  நியூஸ் பேப்பர்கள்,  அதன் ரிப்போர்ட்டர்கள்  உபயோகிக்கும் கால்கள்.   சொல்லப் போனால் அந்நாட்களில்  எல்லா பகுதிகளிலும்  தொலைபேசித் துறை கோலோச்சி வந்த பொற்காலம் அது.

அயல்நாட்டிற்கான டிரங்க் கால்களை அந்நாட்களில்  ஓவர்சீஸ் கால் என்று அழைப்போம்.   அப்படியான வெளிநாட்டிற்கான கால்களை புக் பண்ணும் பொழுது சில தெளிவான விவரங்கள் கொடுக்க வேண்டும்.   புக்  பண்ணும் தொலைபேசி எண்,   வெளிநாட்டு தொலைபேசி எண்,  யார் யாருடன் பேசப் போகிறார்கள்,  எந்த மொழியில் பேசப் போகிறார்கள்,  எந்த நேரத்திற்கு  தொடர்பு படுத்தப்பட வேண்டும்  -  போன்ற குறிப்புகள் கொடுக்க வேண்டும்.  ஓவர்சீஸ் கால்களை  மூன்று,  நான்கு நாட்கள் கூட பெண்டிங் வைத்து முயற்சிக்கலாம்.   வெளி நாட்டு கால்கள் பற்றிய விவரங்கள்  வெள்ளை டிக்கெட்டில் மட்டுமில்லாமல்,  Log Book-கிலும் பதியப்படும்.   அந்த கால் பேசும் போது  எந்த மொழியில் பேசப்போகிறார்களோ,  தேவை ஏற்படின் அந்த மொழி அறிந்த Observation Supervisor-களைக் கொண்டு  யாரும் அறியாது கண்காணிக்கவும் செய்வார்கள்.   நாட்டின் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் அந்த அளவுக்கு மிகவும்  கண்டிப்பான நடைமுறைகள் அமுலிலிருந்த காலம் அது.

ஒரு  டிரங்க் கால் பதிவாகி அது  பேசி முடிப்பதில் இத்தனை விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.  அதனால் ஒரு டிரங்க்  காலுக்காக  'தேவுடு காத்தேன்' என்று  பா.வெ. சொன்னதும்,  ஜிஎம்பி அவர்கள் 'பழியாக் கிடந்தேன்' என்றதிலும் அவர்களுக்கே புரிபடாத பல காரணங்கள் பதுங்கியிருந்தன என்று தான் கொள்ள வேண்டும்.

புக் செய்த  டிரங்க் கால்களுக்குத்  தான் இணைப்பு கொடுக்கப்படுகிறதா என்பதனைக் கண்காணிக்க  Observation Supervisor  என்பவர்கள்  உண்டு.   இவர்கள்  ஏகதேசமாக  கனெக்ஷன் கொடுக்கும் ஆப்ரேட்டர்களுக்கு  தெரியாமலேயே  இந்த கால் இந்த  நேரத்திற்கு இந்த இடத்திற்கு தொடர்பு கொடுக்கப்பட்டது என்ற குறிப்புகளை எடுத்து அனுப்புவார்கள்.  அடுத்த நாள் டிக்கெட் ஒர்க் பார்க்கும் சீனியர் ஆப்ரேட்டர்  கனெக்ஷன் கொடுக்கப்பட்ட அந்த கால்களுக்கான டிக்கெட் எண்ணைக் குறித்து  Observation Supervisor-க்கு அனுப்புவார்.   டிக்கெட் எண் இல்லை என்றால்  மேல் நடவடிக்கைகள்  தொடரும்,

(வளரும்)

15 comments:

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் மூலம் தம் தொலைதொடர்பு நிகழ்வுகளை பலரால் தெரிந்து கொள்ள முடிகிறது. தொடரட்டும் சிறப்பான தகவல்கள்.

கோமதி அரசு said...

உங்கள் மலரும் நினைவுகள் அருமை.
வேலை தகவல்கள் வியப்பு, எத்தனை நுணுக்கம், அலுப்பு ஏற்படாமல் இருக்க பணி நேரம்
மாற்றி மைக்கபடுவது. எவ்வளவு விவரங்கள்!

தொலைதொடர்பை பெற்று தருவதில் எவ்வளவு சிரமங்கல், அதை சரியாக செய்வதில் ஏற்படும் ஆத்ம திருப்தி எல்லாம் இப்போது உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.

கோமதி அரசு said...

எவ்வளவு சிரமங்கள்

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான தகவல்கள். நாம் அல்லது நாங்கள் இப்போது படிக்கும்போது சிக்கலாகவும் ணிரமமாகவும் தோன்றினாலும் பயிற்சி நிறைவடைந்து பணி செய்வோருக்கு சாதாரணமாக இருந்திருக்கும்.

இதில் தவறு நேரும் என்றால் என்ன காரணத்தால் தவறு நேர வாய்ப்புண்டு? நேர்ந்த தவறுகளில் பெரிய, சுவாரஸ்யமான தவறுகள் ஏதும் நினைவு உள்ளதா?

அசடு வழிந்த அனுபவங்கள்?

வல்லிசிம்ஹன் said...

அருமையான தகவல்கள். ஒரு தொலைத் தொடர்பு நிலையத்தில்
இருப்பது போன்ற நினைவே வருகிறது. எத்தனை நுணுக்கமான விதிமுறைகள். குறிப்புகள்!!!

அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட
இத்தனை ஏற்பாடுகள் செய்யப்பட்டு,
மக்கள் இந்த வசதிகளை அனுபவித்திருக்கிறார்கள்.
தொலைபேசித்துறைக்கு மிகக் கடமைப் பட்டிருக்கிறோம்.

அருமையாக எழுதுகிறீர்கள் ஜீவி சார். மிக நன்றி.

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜ்

தொடர்ந்து தாலி கட்டிக் கொண்ட தொலைபேசி பற்றி எழுதியாயிற்று. இன்னும் சொல்ல வேண்டியவை இருப்பினும் இந்த அளவு போதும். அடுத்து, வசந்தகால நினைவுகளின் அடுத்த பகுதிக்குப் போகலாம். சரியா?.. வாசித்து கருத்துச் சொன்னமைக்கு நன்றி, வெங்கட்.

ஜீவி said...

@ கோமதி அரசு

முற்றிலும் வேறுபட்ட மொபைல் உலகில் மாட்டிக் கொண்டு விட்டோம். அதனால் தான்
வெயிலின் அருமை நிழலில் என்கிற மாதிரி வாசித்த செய்திகள் உங்களுக்கும், எழுதிய செய்திகள் எனக்கும் பிடித்துப் போய் விட்டன. அடுத்த பகுதியில் பார்க்கலாம். நன்றி, கோமதிம்மா.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//இதில் தவறு நேரும் என்றால் என்ன காரணத்தால் தவறு நேர வாய்ப்புண்டு?//

இதில் தவறு என்றால் எதில் தவறு ஸ்ரீராம்?.. பணியிலா? உற்சாகமாக இருக்கும் பணி என்பதால் அலுவலக உணர்வே போய் விளையாட்டு போல இருக்கும். அடுத்த நாள் தொடரும் முதல் நாள் வேலை என்ற பிரச்னை சுத்தமாக இல்லை. 'இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்கிற மாதிரி அன்றன்றைக்கு நடப்பதை எதிர்கொள்ளும் வேலை.

டிக்கெட் ஒர்க் என்று சொன்னனே அதைத் தான் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும்.
பதிவான மொத்த டிக்கெட்டின் எண்ணிக்கை பகுதி பகுதியாக பிரித்து பண்டில் கட்டும் போது டாலி ஆக வேண்டும். ஆரம்பத்தில் சொன்னேன்ன் அல்லவா?.. மிஸ்டு டிக்கெட் பற்றி..

A 15 - லிருந்து A 715 வரை ஒரு நாள் பதிவான டிக்கெட் என்றால் கணக்கில் வரும் மொத்த டிக்கெட்டிலிருந்து உபயோக்கிக்கும் முன்னேயே மிஸ்ஸான டிக்கெட்டுகளின் எண்ணிக்கையைக் கழிக்கத் தவறக் கூடாது. ( இது குழந்தை கணக்கு தான் என்றாலும்
பல நேரங்களில் மறந்து விட்டு டாலி ஆகாமல் தவிப்பது உண்டு)

மொத்த டிக்கெட்டுகளில் முழுமையாக பேசிய கால்கள் எத்தனை, PP கேன்சல் எத்தனை, வாடிக்கையாளர் காரணமாயு கேன்சல் எத்தனை, இலாகா காரணமாக கேன்சல் எத்தனை, ஓவர்ஸீஸ் கால் இருந்தால் அது தனியாக என்று பண்டில் கட்ட வேண்டும்.
(மறுமுனை தொலைபேசியில் பதில் இல்லாமல் (NR) கால் கேன்சல் ஆனால் அது வாடிக்கையாளர் காரண கான்சல், தொலைபேசி எண் பழுதடைந்து, லைன் பழுதடைந்து என்ற காரணங்களால் கால் கான்சல் ஆனால் அது இலாகா காரணமாக கான்சல் என்று பிரித்துக் கொள்வோம். இதைப் பற்றி இதுவரை சொல்லவில்லை என்பதினால் இங்கு சொல்லி விட்டேன்.)

அதற்கேற்பவான சதவீதக் கணக்கெல்லாம் ஒரு ரிஜிஸ்டரில் பதிய வேண்டும். ஈஸி தான். இருந்தாலும் இந்த டிக்கெட் ஒர்க் கொஞ்சம் கவனமெடுத்து செய்தால் சுலபமாக செய்து விடலாம். டிக்கெட்டின் மொத்த எண்ணிக்கை வகைவகையாகப் பிரித்துப் போட்டு எண்ணும் போது டாலி ஆகாமல், 'அட, இதை கணக்கில் எடுத்திண்டையா"' என்று யாராவது கண்டு பிடித்துச் சொல்லி அசடு வழிந்தது உண்டு. மற்றபடி வேறு ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. வந்தால், பிறிதொரு பதிவில் சொன்னால் போச்சு.

அடுத்து தொலைபேசியை சில அத்தியாயங்களுக்கு மறந்து எழுத்துப் பக்கம் போகலாம்.
சுஜாதா பற்றி எழுதி நாளாச்சு. அதனால் அடுத்த பகுதிக்கு அந்தக் கச்சேரியை வைத்துக் கொள்ளலாம். ஓக்கேவா?.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

மூன்று காளைகள் தனித்தனியாக சிங்கத்தை எதிர்கொண்ட கதை தான்.

தபால், தந்தி, தொலைபேசி என்ற மக்கள் சேவையில் மிகப்பெரும் வாருவாயை நடுவண் அரசுக்கு ஈட்டித் தந்த மூன்று மிகப் பலம் வாயந்த நடுவண் அரசின் தூண்கள் அசைக்கப்பட ஆரம்பித்ததுமே கட்டிக் காத்த ஒற்றுமையில் லேசாக நிலை கொண்ட விரிசல் தந்தி - தொலைபேசியை கபளீகரம் ஆக்கி இன்று தபால் மட்டும் ஒற்றையாய் எஞ்சி நிற்கிறது, வல்லிம்மா.

குறைந்த பட்சம் அதையாவது காப்பாற்றி எளிய மக்களுக்கான தொண்டை நிச்சயப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்குகிறது. முன்பெல்லாம் நீண்ட தெருக்களில் அங்கங்கே தபால் பெட்டிகள் காணப்படும். ஆனால் இப்போதோ தபால் பெட்டிகளைப் பார்ப்பதே அரிதாகி விட்டது. மணியாடர், ரிஜிஸ்தர் தபால், ஸ்பீட் போஸ்ட், சேமிப்புக் கணக்குகள் என்று தபால் நிலையங்கள் லேசாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தாலும் எது ஒன்றிற்கும் ஒரு ரெவின்யூ ஸ்டாம்ப் வாங்க வேண்டுமானால் கூட தபால் ஆபிஸூக்குப் போனால் தான் --- என்ற நிலை.

காலம் மாறிவிட்டது என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டியது தான்.

நெல்லைத் தமிழன் said...

ஓரளவு இது புரிகிறது. டெக்னாலஜி மாறிவிட்டதால் மட்டும், சேவை செய்தவர்களை மறக்க முடியுமா? வாழ்க அவர்களது சேவை மனப்பான்மை.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஜீவி சார்.
தபால் அலுவலகங்களாவது பிழைத்திருக்க வேண்டும்.
மாமா ,விசாகப் பட்டணம் சென்று தந்தி முறை கற்று,
மயிலையில் இருந்த தந்தி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
எத்தனையோ வகையில் தன்னை
சிறப்பித்துக் கொண்டு நல்ல பணியாற்றினார்.
ஷார்ட் ஹாண்ட் அத்தனை வேகமாக எழுதுவார்,
எல்லாக்கலையும் உயிர்ப்போடு இருக்கிறதோ தெரியாது.

ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...

எத்தனையோ முறையில் தன்னை சிறப்பித்துக் கொண்டு' என்று வல்லிம்மா பின்னால் வரும் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது தான் உண்மை. மாறுகின்ற எந்த டெக்னாலஜி
@ நெல்லைத் தமிழன்

மாற்றத்திற்கும் ஏற்ப தங்கள் திறமைகளையும் வளர்த்துக் கொண்டு இருந்த ஊழியர்கள் ஈடு கொடுத்தார்கள் என்பதே உண்மை. இருபதுக்கு மேலான ஆண்டுகள் புதிதாக ஆள்சேர்ப்பு இல்லை, இருக்கிறவர்களே வேலைப்பளுவை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறைகளும் அரசுக்கு சாதகமாகவே இருந்திருக்கின்றன.

யாராவது தொலைதொடர்பு ஊழியர் உங்கள் வாழ்த்துக்களை வாசிக்க நேர்ந்தால் மனத்தில் புரிந்துணர்வுடன் கூடிய நன்றியை செலுத்துவார்கள் என்பது நிச்சயம். நன்றி.


ஜீவி said...

@ வல்லி சிம்ஹன்

தட்டச்சு, சுருக்கெழுத்து போன்றவை சாகா வரம் பெற்றவை. எந்தத் துறையில் பணியாற்றினாலும் ஊடும் பாவும் போலக் கலந்து அவை சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்த வகையிலாவது உதவிக் கொண்டே தான் இருக்கின்றன. தங்கள் மன ஈடுபாட்டுடனான பின்னூட்டத்திற்கு நன்றி, வல்லிம்மா.

வே.நடனசபாபதி said...

தொலைபேசி இணைப்பகத்தில் தெரிந்த நண்பர்கள் இருந்தால் அவர்கள் உதவியுடன் வெளி நாட்டிற்கு கூட செலவில்லாமல் பேசலாம் என்று சொல்வார்கள். அது நடக்க வாய்ப்பில்லை எனத்தெரிகிறது ‘புக் செய்த டிரங்க் கால்களுக்குத் தான் இணைப்பு கொடுக்கப்படுகிறதா என்பதனைக் கண்காணிக்க Observation Supervisor என்பவர்கள் உண்டு.’ என்ற தங்களின் விளக்கத்தைப் படித்தபிறகு. எங்களுக்கு புரியாத, தெரியாத தகவல்களை அருமையாக விளக்குவதற்கு பாராட்டுகள்! தொடர்கிறேன்.

இதற்கு முன்பு இதே பதிவிற்கு எனது கருத்தை பதிவிட்டிருந்தேன். ஏனோ தெரியவில்லை அது பதிவாகவில்லை.

Related Posts with Thumbnails