மின் நூல்

Saturday, March 28, 2020

அசோக மித்திரன் என்னும் எழுத்துக் கலைஞர்

ல்லோருக்கும் வாசிக்க நேரம் கிடைத்திருக்கிறது.    தொலைக்காட்சி பார்க்க நேரம் கிடைத்திருக்கிறது.  வீட்டில் அடைந்து கிடைக்கும் நேரத்தை உபயோகமாக எப்படி செலவிடலாம் என்ற யோசனையின் வெளிப்பாடு இந்தப் புதுப் பகுதி.     சென்ற தலைமுறை சார்ந்த நம் தமிழ் எழுத்தாளர்களின் என்னைக் கவர்ந்த சில கதைகளை இந்தப் பகுதியில் சொல்லலாம் என்று எண்ணம்.  கதை, கட்டுரை  எழுத ஆசைப்படுபவர்களுக்கு பயிற்சிக் களமாகவும் இருக்கும்.    வாருங்கள், நண்பர்களே!...

முதலில் ஒரு எலிக் கதை.   இந்தக் கதையை எழுதியவர் தமிழில் தன் முத்திரையைப் பதித்த எழுத்தாளர் அசோக
மித்திரன். 

லியொன்று ரொம்பவும் தொந்தரவு பண்ணிக் கொண்டிருக்கிறது.  ராத்திரி ஆச்சுன்னா சமையலறையில் ஒரே துவம்சம். 

அந்த வீட்டில் இரவு பலகாரம் என்றால் பெரும்பாலும் தோசையும்  உப்புமாவும் தான்.   எலிப்பொறி உள் கம்பியில் எப்படி உப்புமாவை மாட்டுவது?..  தோசையை வேண்டுமானால் பொத்தல் போட்டு மாட்டலாமா என்று அசோக மித்திரன் ரொம்பவே தமாஷ் பண்ணுகிறார்.

'எப்படியாவது அந்த எலியை இன்றைக்குப் பிடித்து விட வேண்டும் என்று சூளுரைக்கிற மாதிரி மனைவி போட்ட உத்தரவில் உடனே கணேசன் அந்த இரவில் பொறியில் வைக்க வடை எங்கே கிடைக்கும் என்று தேடித் திரிகிறான்.


பொதுக்கூட்டம் நடக்கும் ஒரு மைதானத்தை அவன் அடைந்த பொழுது எண்ணைய் சட்டியில் வடை போட்டுக் கொண்டிருக்கும்  ஒரு தள்ளு வண்டிக்காரனைப் பார்க்கிறான்.  அவனைச் சுற்றி நிற்கும் கும்பலில்  தானும் ஒருவனாக கணேசன் வடைக்காக வேண்டி நிற்கிறான்.  அவனானால்  நீர்மூழ்கிக் கப்பல் மாதிரி எண்ணையில் மிதக்கும் மிளகாய் பஜ்ஜியேப் போட்டுக்  கொண்டிருக்கிறான்.   அது முடிந்ததும் தான் வடை வேலை ஆரம்பிக்கும் போலிருக்கு.   வடைக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கும் கூட்டமும்  இடையில் கிடைத்த ஒரு தீனி சபலத்தில் பஜ்ஜியையும் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.  ஒரு வழியாக பஜ்ஜி போடும் வேலையை முடித்தோ அல்லது நடுவில் நிறுத்தியோ  இதோ வடை போடுவதற்கான ஆயத்தங்களில் இறங்குகிறான்.

கணேசனுக்குத் தேவை இரண்டு வடைகள் தாம்.  அதுவும் அவனுக்காக அல்ல;  அந்த எலிக்காக.   எண்ணெயில் புரளும் வடையை ஜல்லிக் கரண்டியில் லாவகமாக நிமிர்த்தியும் அழுத்தியும்  தேர்ந்த கலைஞனைப் போல அவன் கையாளலைப் பார்த்துக் கொண்டு நிற்கிறான்.   தட்டில் எடுத்துப் போடுகையில் எனக்கு எனக்கு என்று கூட்டமே ஆலாய் பறக்கிறது.   கணேசனுக்கு அவர்களோடு நெருக்கியடித்து தானும் கைநீட்ட லஜ்ஜையாக இருக்கிறது.

அடுத்த ஈடு வடை எடுத்துப் போடும் போது எப்படியோ அந்த வண்டிக்காரனின் கவனத்தைக் கவர்ந்து அத்தனை நேரம் நின்றதற்கு ஒன்று கேட்டால் அவமானமாக இருக்கும் என்று சுடச்சுட பேப்பரில் பொத்தி இரண்டு வடைகளை வாங்கிக் கொண்டு  கணேசன் வீடு திரும்புகிறான்.

யார் முகத்தில் விழித்ததோ  தெரியவில்லை,  அன்று இரவு  அந்த எலி பொறியில் வசமாக மாட்டிக் கொண்டு விடுகிறது.

கொஞ்ச தூரத்தில் இருக்கும் மைதானத்தில் கொண்டு போய் விட்டால் அது வழி தெரிந்து திரும்ப கொஞ்ச நாளாவது ஆகும் என்ற தீர்மானத்தில்  கணேசன் மைதானத்திற்கு எலிப் பொறியைத் தூக்கிக் கொண்டு நடக்கிறான்.

இதோ, மைதானம் வந்து விட்டது.  பொறியை மைதானத்து மண் தரையில் வைத்து மெதுவாக  மூடிக்காம்பை  கணேசன் அழுத்தினான்.

எலி வெளியே வந்தது.

அது பெரிய எலியும் இல்லை மிகச் சிறியதும் இல்லை.   பரந்த வெளி பழக்கமில்லாமல் எலி தாறுமாறாக ஓடியது.   அப்போது எங்கிருந்தோ  காக்கை ஒன்று எலியை ஒரு முறை கொத்தி விட்டுப் போயிற்று.  எலி மல்லாந்து படுத்து துள்ளிற்று,  பிறகு  இன்னும் வேகமாக  தத்தி  தத்தி  ஓடிற்று.   காக்கை ஒரு சுற்று சுற்றி விட்டு  வேகமாக கீழிறங்கியது.   எலிக்கு பதுங்க இடம் தெரியவில்லை.  காக்கை எலியை அப்படியே கொத்திக் கொண்டு  தூக்கிச் சென்று விட்டது.  கணேசனுக்கு துக்கமாக இருந்தது. 

இன்னொன்றும் அவன் துக்கத்தை  அதிகரிக்கச் செய்தது.  பொறியைத்  தூக்கிக் கொண்டு வீடு திரும்ப ஆரம்பித்தான்.  பொறிக்குள் பார்த்தான்.   அவன் முந்தின இரவு கொக்கியில் மாட்டிய  வடை அப்படியே தின்னப்படாமல் இருந்தது.

--  என்று கதை முடிகிறது.

அந்தக் காலத்தில்  தமிழ் வகுப்புகளில்  'நயம் பாராட்டுதல்' என்று  ஒரு பகுதி உண்டு.  பெரும்பாலும் கவிதைகளைக் கொடுத்து  அதன் சிறப்புகளைச் சொல்கிற மாதிரி இது.

வாசிப்பின் நேர்த்தி எதையும் படித்ததோடு நின்று விடுவதில்லை.   படித்ததை மனசில் அசை போட்டு அனுபவிக்க வேண்டும்.  நாம் வாசிக்கற சமாச்சாரங்களும் அசை போடுகிற மாதிரி இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

இந்த எலிக் கதை என்னைப் பொருத்த மட்டில் அசோக மித்திரனின் பாணி கொடி கட்டிப் பறக்கிற அற்புதமான கதை.  சின்னச் சின்ன வரிகளில்  பெரிய எழுத்து வித்தையை நடத்துவார் அவர்.   'தேமே'னென்று  ஒன்றும் தெரியாத மாதிரி தான் சொல்றதை அலட்டிக்காமல் மனுஷர் சொல்லி விட்டுப் போய் விடுவார்.  அதைப் படித்து விட்டு நாம் படுகிற அவஸ்தை இருக்கிறதே... 

அந்தக் கடைசி வரி,  'அவன் முந்தின இரவு கொக்கியில் மாட்டிய வடை  அப்படியே தின்னப்படாமல் இருந்தது என்பது  தான் மொத்த கதையையுமே தாங்கி நிற்கிற தாங்குமிடம்.  அல்லது இந்த பரிதாபத்தை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்வதற்காகவே மொத்த கதையும்.

எலி அந்த வடையை யாவது  தின்று விட்டு செத்துப் போயிருந்தால்   இவன் மனசு கொஞ்சம் சாந்தப்பட்டிருக்கும்.  செத்தே போய் விட்ட எலி,  சாவதற்கு முன் வடையைத் தின்றிருந்தால் என்ன தின்னாவிட்டால் என்ன என்பது விவாதத்திற்கு  சரியாக இருக்கும்.  'அட செத்தது தான் செத்தது,  சனியன் வடையைத் தின்று விட்டு  செத்திருக்கலாமிலே'  என்பது பரிதாபம்.  அதுவும் நேற்றிரவு
மைதானத்தில் கால் கடுக்க நின்று  அவ்வளவு பாடுபட்டு அது தின்பதற்காகவே வாங்கி வந்த   வடை!

இந்தக் கதையில் இன்னும் நிறைய சிறப்புகள் இருக்கின்றன.  பின்னூட்டத்தில் தான் அவற்றைச் சொல்லுங்களேன்..

(அசோகமித்திரன்  பிறந்தது  ஆந்திரத்து  செகந்தராபாத்தில்.  இயற்பெயர்  தியாகராஜன்.   நமது பதிவுலக நண்பர்  கீதா சாம்பசிவம் அவர்களுக்கு சொந்த சித்தப்பா உறவு முறை.

கல்லூரி வாழ்க்கைக்கு பிறகான அசோக மித்திரனின் பிற்காலத்து  வாழ்க்கை  பூராவும் தமிழகத்திலேயே.  ஆரம்பத்தில்  அன்றைய 'ஆனந்த விகடன்' ஆசிரியரின் ஜெமினி ஸ்டூடியோவில்  மக்கள் தொடர்புத் துறையில் கொஞ்ச காலம் பணியாற்றினார்.  வெள்ளித்திரைக்கு  பின்னாலான  திரையுலகத்தினரின் வாழ்வின் சகல உணர்வுகளையும் சித்தரிக்கும்  இவரது  'கரைந்த நிழல்கள்'
புதினம் அந்த ஆரம்பகால ஸ்டூடியோ அனுபவங்களின் சாயலில் எழுதியது  தான்.  சினிமா வாய்ப்பு தேடி வந்த ஒரு நிஜப் புலிவேடக்காரரை நினைத்து எழுதிய கதை தான் இவரது  'புலிக்கலைஞன்'  சிறுகதையும்.)

29 comments:

வெங்கட் நாகராஜ் said...

வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் இந்த நாட்களில் இப்படியான கதைகள் படிக்கக் கிடைப்பது நல்ல விஷயம்.

எலிக்கதை முன்னர் படித்ததில்லை. பலருடைய வாழ்க்கை இந்த எலியைப் போன்றே அமைந்துவிடுகிறது. வடையை அனுபவிக்க முடியாமலேயே மாண்டு போன எலி போன்றே இன்றைக்கு பலருடைய வாழ்க்கை.

இப்படியான கதைகளை தொடர்ந்து சொல்லுங்கள். இன்னும் படிக்கக் காத்திருக்கிறேன்.

SHANKAR said...

செம....நேரம் போறதா !?! இத மாதிரி படிச்சா, நேரம் பத்தாதே !!!

KILLERGEE Devakottai said...

வணக்கம் சார்...

முதலில் எலியை கொல்லக் கொடுத்தவரின் பெயர் கணேசன் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது காரணம் ஆன்மீகம் ஹி.. ஹி.

கால் கடுக்க நின்று வாங்கிய வடையை எலி திங்காமல் கொரானாவைப் போல் வந்த காகம் தூக்கிச் சென்றது அந்தோ பரிதாபம்.

இதைப் போலவே மனிதன் குடும்பத்தை மறந்து ஓடி ஓடி சம்பாரித்ததை எல்லாம் (மறந்து) விட்டு, விட்டு கொரானாவிடம் சிக்கிய எலியைப் போல் இன்றைய மனிதர்களின் வாழ்க்கை முடியப் போகிறது

மொத்தத்தில் வடையை எலியும் திங்க முடியாமல், கணேசனும் திங்க முடியாமல்...

வடை போச்சே...

KILLERGEE Devakottai said...

//நமது பதிவுலக நண்பர் கீதா சாம்பசிவம் அவர்களுக்கு சொந்த சித்தப்பா உறவு முறை//

ஆம் இது அறிந்ததே...

சிகரம் பாரதி said...

தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தற்போது, தங்களது அசோக மித்திரன் என்னும் எழுத்துக் கலைஞர் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

வல்லிசிம்ஹன் said...

அசோகமித்திரன் சாரின் எலிக்கதை படிக்கக் கொடுத்ததற்கு மிக நன்றி ஜி.
எலிக்கு வடை வாங்குவதிலிருந்து அதைச் சாப்பிடமாலே மரித்த எலிவரை ஒவ்வொரு எழுத்தும் மிக நிதர்சனமாக நம் வாழ்க்கையைக்
காட்டுகின்றன. பயத்திலேயே சாப்பிடாமல் விட்டு விட்டதோ பாவம். எங்கள் வீட்டில் பிடித்து விடுபட்ட எலிகள் வீட்டுக்கே திரும்பி வந்திருக்கின்றன:)
பாவம் கணேசனுக்கும் அந்த பஜ்ஜியோ வடையோ கிடைத்திருக்கலாம்.

''நீர்மூழ்கிக் கப்பல் போல மிளகாய் பஜ்ஜி'' ரசனையான வரி. அப்படியே அந்தக் கடையைக் கண்முன் நிறுத்துகிறார். தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன் .நன்றி ஜீவி சார்.

ஸ்ரீராம். said...

எலிக்கதை படித்த மாதிரியும் இருக்கிறது, இல்லை மாதிரியும் இருக்கிறது.  கேள்விப்பட்டிருப்பேனா என்னவோ..  கில்லர் ஜி சொல்லி இருக்கும் பெயர் விஷயம் எனக்கும் தோன்றியது.  ஹா..  ஹா..  ஹா...

ஸ்ரீராம். said...

//எல்லோருக்கும் வாசிக்க நேரம் கிடைத்திருக்கிறது.    தொலைக்காட்சி பார்க்க நேரம் கிடைத்திருக்கிறது.//

எங்கே படிக்க ஓடுகிறது?

ஸ்ரீராம். said...

வடை வாங்குவதே ஒரு உயிரை எடுப்பதற்குதான் என்கிற உணர்வே அந்த வடை மேல் நமக்கு ஒரு அவெர்ஷனை உருவாக்கும்!  பின்னாளில் கொஞ்ச நாட்களுக்காவது அந்தத் வடை மேல் ஒரு ஒதுக்கம் இருக்கும்...

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜன்

தமிழ் எழுத்துக்களில் இருட்டுப் பக்கம் என்று ஒன்று இருக்கிறது. பெரும்பாலான இன்றைய வாசகர்களுக்கு தெரியாத விஷயங்களை ஒவ்வொன்றாக சொல்ல வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். தங்கள் ஆர்வத்திற்கு நன்றி, வெங்கட்.

ஜீவி said...

@ SHANKAR

தங்களின் 'செம' ஆர்வத்திற்கு நன்றி, சங்கர்! தொடர்ந்து வாருங்கள்.

ஜீவி said...

@ கில்லர்ஜி, தேவகோட்டை

தேவகோட்டையாரே! இது எலி என்றால் அது மூஞ்சறு இல்லையோ?.. மூஞ்சுறு சாது.. நீண்ட மூக்கும் வட்ட வடிவக் காதும் சிறிய கண்களும் உடைய, எலி போன்ற ஒரு வகைப் பிராணி' என்று அகராதியே அடிச்சுச் சொல்றது, தேவகோட்டையாரே! போன்ற தான்! ஆக அது வேறு, இது வேறு!..

கொரானாவை கொஞ்ச நேரம் மறந்து இருக்கத் தானே இந்த கதை சொல்லல் முயற்சியே! நீங்க அதையே நெனைச்சிக்கிட்டிருந்தீங்கன்னா, எப்படி?..

இந்தக் கதையில் எலின்னா, அடுத்த கதையில் வேறொண்ணு பார்க்கலாம்.. சரியா?..



G.M Balasubramaniam said...

இந்தக்கதை மான்ஸ்டர் என்னும்படத்டை நினை வூட்டியது என்னை பிடிச்சுக்கோ என்று சொல்லியா எலி வலையில் சிக்கியது

ஜீவி said...

@ சிகரம் பாரதி

எனது பதிவுகள் பல புத்தக ஆக்கங்களுக்கான குறிப்புகள் பாரதி. இருந்தாலும் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

கோமதி அரசு said...

இந்த கதையை படித்தவுடன் "சாது மிரண்டால்" படம் நினைவுக்கு வந்தது.

வீட்டில் அட்டகாசம் செய்யும் எலியை எலிபொறியில் பிடித்து அதை கொல்லமனம் இன்றி தூரத்தில் கொண்டு விட்டுவருவார்,அந்த படத்தின் கதாநயகன் டி.ஆர். ராமசந்திரன்.

எலியை பிடித்து கொல்ல மனம் இன்றி மைதானத்தில் விடுவது அவர் இரக்க குணத்தை காட்டுது.

அதை காகம் கொத்தி போனது அவருக்கு வருத்தம் தரும் தான். வீட்டுக்கு வந்து எலி பொறியில் வடை தின்னாமலே இருந்ததை பார்த்ததும் மேலும் வருத்தம்தான்.

பாவம் வடையை கால்கடுக்க வாங்கி வந்து வைத்து எலியை பிடிக்கதானே!
எலியை விடும் போது அந்த வடையை வெளியே போட்டு இருந்தால்
எலியை விட்டு விட்டு காக்கா வடையை கொத்தி போய் இருக்கும்.(சும்மா சிரிப்புக்கு)


ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

ரசித்துப் படித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. இருந்தாலும் இந்தக் கதையில் காணப்படுகிற ஒரு முக்கியமான அம்சத்திற்கு வெகு நெருக்கமாக நீங்கள் வந்தும் அந்த விஷயத்தை அழுத்திச் சொல்லாமல் விட்டு விட்டீர்கள். அதனால் அசோகமித்திரனின்
மன உணர்வுகள் வெளிப்படாமலேயே போய் விட்டது.

இந்த மாதிரி நிறைய கதைகள். பத்திரிகைக்கு எழுத வேண்டுமானால் எப்படி எழுத வேண்டும் என்ற கல்வியும் கூடவே கிடைப்பது போனஸ் சமாச்சாரம்.

தொடர்ந்து வாருங்கள், வல்லிம்மா.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

இந்த நகைச்சுவைக்கான கதை அல்ல. நம் போக்கில் திசை தப்பினால் எழுத்தாளன் சொல்ல வந்த விஷயத்தைக் கோட்டை விட்டு விடுகிற ஆபத்தும் இருக்கிறது.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

//எங்கே படிக்க ஓடுகிறது?//

இந்த சிக்கலான நேரத்தில் இருக்கிற சிக்கல்களிலேயே உழன்று போய் விடாமல் நம் மனதை வேறொன்றில் செலுத்துவது மன அளவில் சாந்தியாகவும், மருந்தாகவும் நமக்கு பிடித்த விஷயத்தில் பயிற்சியாகவும் இருக்கும். அதற்காகத் தான் இந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்தேன்.

நெல்லைத் தமிழன் said...

//வடையை அனுபவிக்க முடியாமலேயே மாண்டு போன எலி போன்றே இன்றைக்கு பலருடைய வாழ்க்கை.//

வெங்கட் எழுதிய இந்தப் பின்னூட்டம்தான், இந்தக் கதைக்கு முற்றிலும் வேறு மாதிரி சிந்தித்துப் பின்னூட்டம் இட்டிருக்கிறாரே என்று தோன்றியது. பொருத்தமாகவும் இருந்தது.

இறைவன் நம் கவனத்தை அவனை நோக்கித் திருப்புவதற்காக நம் வாழ்க்கையில் நிறைய இடர்களைக் கொண்டுவருகிறான். ஆனால் அதனைப் புரிந்துகொள்ளாமலேயே நாம் கடைசி வரை வாழ்ந்து இறந்துவிடுகிறோம்.

நிறைய பணத்தை இறைவன் (நம் முயற்சியில் என்று நான் புரிந்துகொள்ளவில்லை. இங்கு இன்னொருவந்தான் வடையை பொறியில் வைக்கிறான்) நமக்குக் கொண்டுவந்த போதும் அதை முற்றிலும் அனுபவிக்காமலேயே இறந்துவிடுகிறோம்.

இந்த மாதிரி பொருளை வெங்கட்டின் பின்னூட்டம் தருகிறது. சிந்திக்கத் தகுந்தது.

நெல்லைத் தமிழன் said...

எலிக்கதை சுருக்கமாகத் தந்ததற்கு நன்றி. இந்தக் கதை பல எண்ணவோட்டங்களைத் தருகிறது.

எலி தொல்லை தருகிறது. ஆனாலும் தான் செய்த செயலால் அது இன்னொருவரிடம் உயிரை இழக்க நேர்வது, அதற்குக் காரணமானவனுக்குக் குற்ற உணர்ச்சியைத் தருகிறது. நம் எல்லோருக்கும் பொதுவாக அப்படித்தான். ஒருவர் மீது, அவர் நமக்குச் செய்யும் செயலால் கோபம் கொண்டு, தண்டனை தருவோம் இல்லை தண்டனை வாங்கித் தருவோம். பிறகு, மன்னித்திருக்கலாமே... அவன் செய்தது அவ்வளவு பெரிய விஷயம் இல்லையே என்று தோன்றிவிடும்.

அசோகமித்திரன் அவர்கள் கீசா மேடத்தின் சித்தப்பா என்பதை முன்னமேயே கீசா மேடம் தளத்தில் பலமுறை படித்துத் தெரிந்துகொண்டிருக்கிறேன்.

நல்ல இலக்கியவாதிகளை நோக்கி செல்வம் சேர்வதில்லையா இல்லை செல்வம் சேர்ந்தவர்கள், அதற்கான வொர்த் இல்லாதவர்களா என்ற கேள்வி ஆராயத்தக்கது. புலமையும் வறுமையும் என்பதுதான் பழமொழி (அதற்கு அர்த்தம் வறுமையில் வாழ்ந்தார் என்பது அல்ல. பெரும் பணம் ஈட்டும் அந்த நோக்கம் இல்லை அதற்கான முயற்சி இல்லை என்பதுதான் அர்த்தம்)

ஜீவி said...

@ ஸ்ரீராம்

வடையின் உபயோகம் பல்வேறு மாதிரி என்பதினால் வடையின் மீதான அவெர்ஷன் பலருக்கு ஏற்பட வாய்ப்பில்லை.

அவெர்ஷன் எல்லாம் ஆளாளுக்கு அவரவர் மனநிலைக்குத் தக்க மாதிரி. அவெர்ஷன் என்று சொல்ல வந்தால் அந்த எலிப் பொறியின் மீது தான். ஒரு எலி மாட்டலுக்குப் பிறகு அதைக் க்ளீன் செய்ய வேண்டும். அடுத்த உபயோகத்தின் போது வடை மாட்டும் பொழுது மென்ன்மையான மனம் கொண்டோருக்கு விரல் நுனிகள் நமநமக்கும். பரணில் வைத்திருக்கும் எலிப்பொறியை எடுத்து தூசி தட்டி உபயோகத்திற்கான ஆரம்ப கட்டங்களிலேயே இந்த அவேர்ஷன் சிலருக்கு ஆரம்பமாகி விடும்.

எலிப்பொறிகளில் பல வகைகள் உண்டு. அசோகமித்திரன் சொல்வது வெறுமனே எலியைப் பிடிக்கிற கூண்டு வகை தான். அவர் நோக்கத்தை இந்தக் கதையைப் படித்த எவரும் டக்கென்று சொல்கிற மாதிரி கண்டு கொள்ளாததில் எனக்கு வருத்தமே.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

//என்னை பிடிச்சுக்கோ என்று சொல்லியா எலி வலையில் சிக்கியது.. //

நல்ல கேள்வி. இதான் ஜிஎம்பீ.

உங்களது இந்தக் கேள்விக்கான பதிலை நீங்களே சொல்லிப் பாருங்களேன். பதிவுக்கு என்ன எழுதலாம் என்று யோசிப்பத்தாக அடிக்கடி சொல்கிறீர்களே. அருமையாஹ மேட்டர் ஒன்று கிடைத்திருக்கிறது. நழுவ விட்டு விடாதீர்கள், சார்.

எத்தனை வலை சிக்கல்கள் இல்லை?.. ஒவ்வொன்றாக எழுத ஆரம்பித்தால் ஒரு தொடரே எழுதலாம்.

ஜீவி said...

@ கோமதி அரசு

எலியைக் கொல்வதா? அதற்கு கிலட்டின் இயந்திரம் மாதிரி வேறு வகை எலி பிடிக்கும் கருவி இருக்கிறது.

கணேசனின் எண்ணமே பிடித்து வெளியில் எங்காவது விட்டு விட்டு வர வேண்டும் என்பது தானே?

'கொஞ்ச தூரத்தில் இருக்கும் மைதானத்தில் கொண்டு போய் விட்டால் அது வழி தெரிந்து திரும்ப கொஞ்ச நாளாவது ஆகும் என்ற தீர்மானத்தில் கணேசன் மைதானத்திற்கு எலிப் பொறியைத் தூக்கிக் கொண்டு நடக்கிறான்'.

அசோகமித்திரன் எழுதுவதில் வெகு சிக்கனமாக வார்த்தைகளை உபயோகிப்பவர். அப்படிப்பட்டவர் கணேசனின் எண்ணத்தை நமக்குத் தெரியப்படுத்த நீண்ட ஒரு வரியையே உபயோகப்படுத்தியிருக்கிறார். அதுவும், 'வழி தெரிந்து திரும்ப கொஞ்ச நாளாவது ஆகும்' -- என்ற எதிர்பார்ப்பு வேறே! ஆக, அவர் எலியை கூண்டு வைத்துப் பிடித்தது ஒரு தற்காலிக ஏற்பாடே!

//எலியை விடும் போது அந்த வடையை வெளியே போட்டு இருந்தால்
எலியை விட்டு விட்டு காக்கா வடையை கொத்தி போய் இருக்கும்.(சும்மா சிரிப்புக்கு)//

சிரிப்புக்கு என்றாலும் அப்படி எழுதியிருந்தால் இந்தக் கதையின் சொல்ல வந்த உணர்வின் எஃபெக்ட் போயிருக்கும்!

இந்த மாதிரி கதைகளுக்கு பட்டு நூலை கத்திரிக்க மாதிரி ஒரே வரியில் முடிவு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அந்த முடிவை வைத்துக் கொண்டு வாசகர்களில் நினைப்பு பல்வேறு வகைகளில் ஓடுகிற மாதிரி இருக்கும்.

ஓ ஹென்றி என்று அமெரிக்க எழுத்தாளரின் கதைகள் இப்படி கடைசி ஒற்றை வரியில் பட்டென்று முடிக்கும் பெருமை பெற்றிருந்தது. அதனால் இப்படி முடிக்கப்படும் சிறுகதைகளுக்கு 'ஓ ஹென்றி முடிவுகள்' என்றே பெயராயிற்று. ஓ ஹென்றியின் இயற்பெயர் வில்லியம் சிட்னி பார்ட்டர் என்றாலும் இலக்கிய உலகில் ஓ ஹென்றி என்ற பெயரே நிலைத்துப் போயிற்று.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன் (1)

நண்பர் வெங்கட்டின் பின்னூட்டத்தை ரசித்திருக்கிறீர்கள்.

வெவ்வேறு சிந்தனைகளை அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப தூண்டி விடுவது தான் அ.மி.-யின் இந்த மாதிரி கதைகளின் சிறப்பு.

வழக்கமான நமது பதிவுலக வாசிப்பு இயல்பையும் அவற்றிற்கேயான பின்னூட்ட வழக்கங்களையும் தாண்டி வர இந்த மாதிரி கதைகள் உதவும்.

வே.நடனசபாபதி said...

//அவன் முந்தின இரவு கொக்கியில் மாட்டிய வடை அப்படியே தின்னப்படாமல் இருந்தது//

ஓ ஹென்றி தனது கதைகளின் இறுதியில் இவ்வாறு தான் ஒரு வரியில் முடிப்பாராம். எழுத்தாளர் அசோக மித்திரனும் அது போன்று இந்த கடைசி வரி மூலம் நம்மை சிந்திக்க வைத்திருக்கிறார்
.

அந்த எலி வடையைத் தின்னாமல் இருந்ததற்கு இருந்ததிற்கு பின்னால் ஒரு காரணம் உண்டு. அந்த எலி வடைக்கு ஆசைப்பட்டு பொறிக்குள் மாட்டிக்கொண்டதை அறிந்ததும், மரண பயத்தில் வடையைத் தின்னும் எண்ணம் மறைந்து தப்பிக்கும் எண்ணமே மேலோங்கியிருந்திருக்கும். கடைசி வரை உள்ளேயே ஓடி ஓடி களைத்திருக்கும். அதனால் அது வடையைத் தின்னவில்லை. அதுபோல மனிதர்கள் வாழ்வின் எல்லையில்/முடிவில் இருக்கும்போது வேறெதையும் நினைக்காமல் தப்பித்து வாழவே விரும்புவார்கள் என்ப்தை சொல்லாமல் சொல்கிறார் என நினைக்கிறேன்.


// அந்தக் காலத்தில் தமிழ் வகுப்புகளில் 'நயம் பாராட்டுதல்' என்று ஒரு பகுதி உண்டு.//


இதைப் படிக்கும்போது, எனக்கு பள்ளி இறுதியாண்டு (S.S.L.C) சிறப்புத்தமிழ் தேர்வில்


'தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்'

என்ற கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பாடலை 'செய்யுள் நலம் பாராட்ட' சொன்னது நினைவுக்கு வருகிறது.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன் (2)

அட! 'அந்த வடையை மட்டும் அந்த எலி சாப்பிட்டிருஜ்தால் இந்த கதையே இல்லையே' என்று நெட்டுயிர்க்கும் ஒரு பொறியை நம்மில் கிளர்த்தி விட்டது தான் இந்தக் கதையின்
சிறப்பு.

இதை தனிப்பட்ட ஒரு மனிதரின் பரிதாப உணர்ச்சியாக மட்டும் எண்ணிப் பாருங்கள்.

ஒவ்வொருவருக்கும் இந்த மாதிரி வெவ்வேறு எண்ணங்களைக் கிளர்த்துவது தான் இந்தக் கதையின் சிறப்பு.

நன்றி, நெல்லை. அடுத்த கதைக்கு வந்து விடுங்கள்.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

பொறியில் மாட்டிக்கொண்ட பின் எலி வடையைத் தின்னும் எண்ணமே அற்றுப் போனதற்கு அருமையாக சிந்தித்து ஒரு காரணத்தைச் சொல்லியிருக்கிறீர்கள், ஐயா.

இந்த கதையின் நாயகனான கணேசனின் உணர்வை நம்மைப் போல் பதட்டப்படாமல்
வெகு சாதாரணமாகவே ஒரு நிகழ்வு போலவே சொல்கிறார் அசோகமித்திரன். மிகவும் subtle ஆன எழுத்தாளர். 'என் கதையைப் படித்து விட்டு நீ என்னவேணாலும் நெனைச்சுக்கோ' என்று ஒதுங்கி விடுகிற பாணி.

'அவன் முந்தின இரவு கொக்கியில் மாட்டிய வடை அப்படியே தின்னப் படாமல் இருந்தது'
-- இது தான் அவரது அந்த எலி கதையின் கடைசி வரி.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

நீங்கல் புரட்சிக் கவிஞரின் பாடலைப் பகிர்ந்து கொண்டது பழைய நினைவுகளில் என்னை ஆழ்த்தி விட்டது, ஐயா. மிக்க நன்றி.

'தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிநதுகின்றாய்?'

அடுத்த வரி?..

விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி

--- இந்தக் காலத்தில் அதுவும் முடியும் என்பதனை நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார். என்னத்தை சொல்ல?..

Bhanumathy Venkateswaran said...

எலி, புலிக்கலைஞன் இரண்டுமே படித்திருக்கிறேன். நிஜ வாழ்க்கையின் சோகம், எதிர்பார்ப்பு, எதிர்பாராதது எல்லாவற்றையும் நுணுக்கமாக வடிப்பதில் அசோகமித்திரனுக்கு ஈடு கிடையாது. 

Related Posts with Thumbnails