மின் நூல்

Tuesday, March 31, 2020

மனக்கோலங்கள் கொண்ட மெளனி

மிழ்  எழுத்துலகிற்கு  தற்செயலாக  வந்தவர் தான் மெளனி.  மெளனியைப் பொறுத்த மட்டில் எல்லாமே தற்செயல் தாம்.

இவர் எழுத வருவதற்கு தூண்டுகோலாகவும் முழுமுதற் காரணமாகவும் இருந்தவர் 'மணிக்கொடி'  பி.எஸ்.ராமையா அவர்கள்.  தமிழில் எழுதுவது பற்றி எந்த நோக்கமும் இல்லாது இருந்த சுப்ரமணியனை ஊக்குவித்து அவரை எழுதச் சொல்லிக் கதையைப் பெற்றவர்,  'மெளனி'  என்கிற புனைப் பெயரையும் அவருக்குச் சூட்டி பெற்ற கதையை மணிக்கொடியில் பிரசுரித்தார்.  அப்படி அவர் பிரசுரித்த கதைக்குப் பெயர்  'ஏன்?'.  இதுவே தமிழில் மெளனியின் முதல் கதை ஆயிற்று.

மெளனியின் 'ஏன்?'  எழுப்பக் கூடிய கேள்வியே மிகப் பெரிதாய் நீண்டு விடை காண முடியாது நிலைகுலைந்தது. பதினாலு வயதுச் சிறுவன் மாதவன் பள்ளி முடிந்து வீட்டுக்குப் போகையிலே  தனது வகுப்புத் தோழி சுசீலாவிடம் தன் மனக்கட்டுப்பாட்டை இழந்து விட்டவன் போன்று, "சுசீ! நானும் வீட்டுக்குத் தான்.  சேர்ந்து போகலாமே?"  என்று பொருத்தமில்லாமல் கேட்கிறான்.

இதைக் கேட்டதும் சுசீலா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்து புருவங்களை உயர்த்தி  வியப்புடன்  கண்கள் விரியப் பார்த்தது,  'ஏன்?'  என்று  அவனைக்  கேட்பது போலிருந்தது.  இந்த 'ஏன்?'  அந்தப் பையனை பிசாசு போலப் பற்றிக் கொள்கிறது.   அதன் பின் இருவர் மனத்தையும் ஆட்டிப் படைக்கிறது.   அதோடு விட்டதா?..  இந்த  'ஏன்?' அவர்கள் சம்பந்தப்பட்டது  என்பதைத்  தாண்டி  வெளியுலகிலிருந்தும்  அவர்கள் எதிர்கொள்ளும் ஒன்றாக  வியாபிக்கிறது.  ஏன், எப்படி,  எதற்காக  என்று விடைப்புடன் நிமிர்ந்து நிற்கும் கேள்விகளுக்கு விடையில்லை.   அதற்கு மேலான கதையை நடத்திச் சென்று,   இதற்கு மேலான  யோசிப்பை  வாசிப்பவரிடம் விட்டு விடுகிறார்  மெளனி.

மெளனியின் கதையுலகம்  தனித்தன்மையானது. சிலந்தியென தன்னைச் சுற்றி  தானே பின்னிக் கொண்ட வலையிழைகள்  தாம் இவரது அத்தனை கதைகளும்.  மெளனிக்கு வார்த்தைகள் மிக மிக முக்கியம்.  ஒவ்வொரு வார்த்தையிலும் அவர் விரும்புகிற அர்த்தத்தைப் புதைத்து வைத்திருப்பார்.  புதைத்திருப்பது எது என்று கிளறிப் பார்ப்பவர்களுக்கு  புரிதலும் பல சமயங்களில்  அசாத்தியமான காரியமாக அமைந்து விடுவதும் உண்டு.,

இதெற்கெல்லாம் மெளனியையும் குறை சொல்லி விட முடியாது.   அத்தனை கதைகளையும்  தனக்காகத் தான்  எழுதிக் கொண்டாரோ  என்று கூடத் தோன்றும்.  அவரிடமிருஜ்து யாரோ  வலுக்கட்டாயமாகப் பிடுங்கி பிரசிரித்து விட்ட மாதிரி   அப்படியொரு தோற்றம். 

அவரது பெரும்பாலான கதைகளும்  'அவன்'  அல்லது 'அவள்' தான் கதைகளின்  நாயக,  நாயகிகள்.  தனக்குள் தோய்ந்து தான் சுமந்த நினைவுகளை  தான் விரும்புகிற போக்கில் சாவதானமாக  தனக்குள்ளாகவே மீட்டிப் பார்க்கிற மாதிரியான  'அவன்';  அதாவது   அவனாகிய    அவர்,    அவர் , அவனாகி  தன் அக உணர்வு  நிலைகளை  அவன் தோள் மாற்றி  சுமக்கச் செய்து  தன் மனச்சுமைகளைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்.

அவரது 'அழியாச்சுடர்'  லேசில் மறக்க முடியாத கதை.

தன்னையும் அறியாத ஒரு உத்வேகத்தில் ஒருவன் பெண்ணொருத்தியிடம்  உறுதிமொழி மாதிரி வெளிப்படுத்திய  வார்த்தைகளை பல  ஆண்டுகளுக்குப் பின்னும் நினைவில் நிறுத்திக் கொண்டு  புழுங்கும் கதை அது.   இத்தனைக்கும் அவள் மிக நெருக்கத்தில் அவனருகில் இருக்கும் பொழுது தான் அவன் அதை அவளிடம் சொன்னான்.

கோயில் சந்நிதி என்பதால்  சுற்றி பலர் இருந்தனர்.என்பது வாஸ்தவம் தான்.  இருந்தும் அந்த சூழ்நிலையில்  யாரும் இதைக் கேட்டிருக்க முடியாது.   இருந்தும் கோயிலில் ஈஸ்வரன்  சந்நிதிக்கு  முன் இதை அவன் அவளிடம் சொன்னதால்  உள்ளிருந்த விக்கிரகம்,  எதிர் தூணில் ஒன்றி நின்ற யாளி,  இதெல்லாம் அவன் சொன்னதைக்
கேட்டிருக்கும் என்று எண்ணுகிறான்.   கேட்டதை ஊர்ஜிதப் படுத்துவது போல  கீற்றுக்கு மேலே  சந்தனப் பொட்டுடன் வீபூதி அணிந்த அந்த விக்கிரகம்  உருக்கொண்டு புருவஞ்சுழித்து  சினம்  கொண்டது போலவும்,   தூணில் ஒன்றியிருந்த  யாளியும் மிக  மருண்டு பயந்து முகம் சுழித்து பின் கால்களில் எழுந்து நின்ரு பயமூட்டியதாகவும்  உணர்கிறான்.

மிஞ்சி மிஞ்சிப் போனால் அவளுக்கு   பதிமூன்று வயது இருக்கும்.     பின்னிய ஜடை பின் தொங்க,  மெதுவாகத் தன்னோடு  வந்தவர்களுடன் சதங்கைகள் ஒலிக்க அவள் போய்விடுகிறாள்.  பிராகாரத்தை அவன்  சுற்றி வருகையில் மீண்டும்  அவனைத் தனியே  பார்க்கிறான்.  அவளும் அவனைப் பார்க்கிறாள்.  'உனக்காக நான் எதுவும் செய்யக் காத்திருக்கிறேன். எதையும் செய்ய முடியும் என்று  அவளிடம் சந்நிதியில்  அவன்  சொன்ன வார்த்தைகளைத் திருப்பிக் கொள்ளும்படிக் கேட்டு அவள் அவனிடம்  கெஞ்சுவது போல அவள் பார்வை இருந்ததாக அவனுக்குத் தோன்றுகிறது.  அவளை நெருங்கும்  அவன் மறுபடியும்   ஒருதரம் 'என்ன வேண்டுமானாலும் உனக்காக..' என்று ஆரம்பித்து  முழுதும் சொல்லி முடிக்காமல் வேகமாகத் திரும்புகிறான்.

கிட்டத்தட்ட  ஒன்பது வருடங்கள் கழித்து  அவன்  கோயிலுக்குப் போகும் பொழுது  மறுபடியும் அவளைப் பார்க்க நேரிடுகிறது.    முன்பு அவளை அவன் பார்த்த மாதிரி இப்பொழுது அவள்   இல்லை.   ஒரு நவநாகரிகத் தோற்றம்.   'இதுவும் நல்லதுக்குத் தான்;    அப்பொழுது வேகத்தில் ஏதோ சொன்னதை  இப்பொழுது ஒரு பொருட்டாக அவள் எண்ண மாட்டாள் என்று அவன் நினைத்துக் கொள்கிறான்.

அதே சமயம் ஒருவித தியான நிலையில்  கடவுள் முன்  கைகூப்பி நிற்பவள் சடாரென்று திரும்பி அவனைப் பார்க்கிறாள்.    அந்தப் பார்வை அவள்,  அவனைக் கண்டு கொண்டு விட்டாள் என்று புலப்படுத்துகிறது.   அவள் பார்வை எதிரிலிருக்கும்  தூணில் படுகையில்  அவன் முன்பு அவளிடம் சொன்ன வாக்கின் அழியாத சாட்சியாக இருந்த அந்த
யாளியும்   எழுந்து நின்று  கூத்தாடுவது போல அவனுக்குத் தோன்றுகிறது.   ஆணை இடுவது போல அவள் பார்வை அவனை  ஊடுருவுகிறது.  என்ன நடந்தது என்று அவன் சுதாரிப்பதற்குள்   அவள்  போய் விட்டாள்.

இந்தக் கதையில் மெளனியின் பிரசித்தி பெற்ற் வாக்கியமான  'நாம்  சாயைகள்  தாமா?..  எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?'  என்ற வாக்கியம் வருகிறது.   அந்த வாக்கியத்தின் அடிப்படையில்  அவரவர் அவரவருக்குத் தோன்றிய  வழியில் இந்தக் கதையை  அவதானித்துக் கொள்ளலாம்.  ஏனெனில்  ஒன்றை ஒருவர் சொல்லும் வகை, இன்னொருவர் அவர் சொல்லும் வகையில் அர்த்தப்படுத்திக் கொள்ள வழி கோலலாம்.

மெளனியின் கதைகள் அந்தக் கதைகளுடான நேரிடையான பரிச்சயத்துடன் அர்த்தப்படுத்திக்  கொள்ள  வேண்டியவை.  அர்த்தச் செழுமையுடன் அவர்  பிரயோகிக்கும்  வார்த்தைகள் கொடுக்கும் அர்த்தங்கள்,  அவரவர் புரிதல்களுக்கு ஏற்ப எங்கெங்கோ  அழைத்துச்  செல்கின்றன.  ஒரு படிமத்தை  தீற்றலாகத் தீட்டிக் காட்டி விட்டு   'இனிமேல் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று  நம் பொறுப்பில் விட்டு விடுகிற மாதிரி படிப்பவர்களுக்கு  கட்டற்ற சுதந்திரத்தை  அளித்து அவர் ஒதுங்கிக் கொண்டு விடுகிறார்.   இந்த ஒதுங்கல் மெளனியின் கதைகளீல் விசேஷமாகத் தெரிகிறது..  இதுவே யாரிடமும் இல்லாத மெளனியின்  தனிச் சிறப்பாகவும் தெரிகிறது.

மெளனி பிறந்தது  தஞ்சை மாவட்ட செம்மங்குடியில்.    மெளனி கல்லூரியில் படித்தது  உயர் கணிதமும் தத்துவமுமே.  சாஸ்திரிய சங்கீதத்தில் வெகுவாக ஈடுபாடு  கொண்டவர்.  கும்பகோணத்திலும்  திருச்சியிலும் படித்தவர், சிதம்பரத்தில் வாழத் தலைப்பட்டார்.    அது என்னவோ தெரியவில்லை,  ஒருமாதிரியான வெறுமை சூழ்நிலை மெளனியின் ஆழ்மனத்தில் பதிந்து போய் விட்ட  உணர்வுகள் போலும்.    அத்தனை கதைகளிலும் தவறாது இந்த உணர்வுகளைப் பதிந்திருக்கிறார்.    வாழ்க்கை பூராவும் அதை வெல்வதற்கான உபாயங்களாகிப் போனவை அவரது கதைகள்.  பல கதைகளுக்கு  அவர் கொடுத்த தலைப்புகளும்  இந்த நிலையாமை உணர்வை பறைசாற்றத் தவறவில்லை.  மனதில் அடிக்கடி கவியும் இந்த உணர்வுகளுக்கு மாற்றாக  முகிழ்க்கத் துடிக்கும் காதலும் கைகூடாமல் போவதைக் கதைகளில் கூட தவிர்க்க முடிந்ததில்லை.


13 comments:

ஸ்ரீராம். said...

அவர் கதைகள், அவர் எழுத்தின் ஆழம் பற்றிய உங்கள் விவரங்கள் பிரமாதம்.  அழியாச்சுடர் ஏற்கெனவே படித்த மாதிரி இருக்கிறது.  அல்லது ஒரு அறிமுகமாய்ப் படித்திருக்கிறேனோ என்னவோ...   ஏனெனில், நான் இவரது கதைத்தொகுதி வாங்கி வைத்திருக்கிறேனே தவிர இன்னும் வாசிக்கத் தொடங்கவில்லை!

வெங்கட் நாகராஜ் said...

இதுவரை இவரது எழுத்துகளைப் படித்ததில்லை.

அழியாச் சுடர் - இந்த பெயரில் இணையத்தில் ஒரு வலைப்பக்கம் உண்டு.

உங்கள் எழுத்து அவரைப் படிக்கத் தூண்டுகிறது. இணைய வழி தேட வேண்டும்.

Yaathoramani.blogspot.com said...

நான் முழுத்தொகுதியையும் வாசித்து உணர்ந்தவன் என்கின்ற வகையில் உங்கள் விமர்சனத்தையும் முழுமையாய் உணரமுடிகிறது..அற்புதமான விமர்சனம்.வாழ்த்துகளுடன்..

Bhanumathy Venkateswaran said...

மௌனியை மிகச் சரியாக உள்வாங்கி கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களின் ஆழமான விமர்சனத்தில் புரிகிறது. லா.ச.ரா. போல ஐவரும் என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை என்னும் விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறார். 

நெல்லைத் தமிழன் said...

இவர் கதைகள் எதையும் படித்த நினைவு இல்லை. நான் ஒருவேளை வெகுஜன எழுத்தாளர்கள் கதைகளைத் தாண்டி எதையும் படித்ததில்லையோ என்று நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

மௌனியின் பிம்பத்தை சரியாக வடித்திருக்கிறீர்கள். நான் புரிந்து கொள்ள முடியாத
மனிதர்களில் இவரும் ஒருவர்.
அந்த யாளியும் அதைக் கேட்டிருக்கும் ..சரி இப்பொழுது அந்தக் காதலர்கள்
நிலை என்ன. அவள் கேள்விக்கு அவன் பதில் சொன்னானா.
பல எண்ணங்களைத் தூண்டுகிறது உங்கள் பதிவு.
அழியாச்சுடர் படித்தேனா என்று நினைவில்லை.
அந்த வெப்சைட் தான் மனதில் இருக்கிறது.
மிக நன்றி ஜீவி சார்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

வாசித்திருப்பீர்கள். வீடு மாற்றலில் புத்தகக் கட்டுகளோடு சேர்ந்து வந்திருக்கிறதா என்று பாருங்கள். வாசித்து எங்கள் பிளாக்கில் உங்கள் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மெளனியை இந்தத் தலைமுறை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது நமது கடமை.

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜன்

நீங்கள் குறிப்பிட்டிருக்கிற தளம் ஒரு புதையல். அழியாச்சுடரின் முழுப் பகுதியும் அந்த தளத்தில் கிடைக்கலாம். இணைய வழியில் கிடைத்தால் நான் குறிப்பிடப்போகிற அத்தனை எழுத்தாளர்களின் படைப்புகளையும் வாசித்து விடுங்கள். சென்ற காலத்தின் மிகச் சிறந்த அனுபவமாக அது இருக்கும்.

ஜீவி said...

@ Yaatho Ramani

வாவ்! முழுத்தொகுதியையும் வாசித்திருக்கிறீர்களா?.. இந்த வாசிப்பே உங்களுக்கான பெருமை. மொத்தம் அவரது 24 சிறுகதைகள் கிடைத்திருப்பதாக அறிந்திருக்கிறேன். நல்ல அனுபவம் தான். வாழ்த்துக்கள், சார்.

ஜீவி said...

@ Bhanumathy Venkateswaran

விமரிசனம்லாம் இல்லை, பா.வெ. ஜஸ்ட் ஒரு பகிர்ந்து கொள்ளல் தான். இந்த நீண்ட விடுமுறை அதற்கான ஒரு வாய்ப்பு. பழம்பெரும் எழுத்தாளர்களை இந்தத் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தலாமே என்ற எண்ணம் தான்.

ஜீவி said...

@ நெல்லைத்தமிழன்

இருக்கலாம். அதற்காகவே இந்த முயற்சி. நான் குறிப்பிடுகிற எழுத்தாளர்களின் படைப்புகளை இணையத்தில் தேடினால் நிச்சயம் கிடைக்கும். நண்பர் வெங்கட் குறிப்பிட்டிருக்கிற தளம் அருமையானது. அத்தனை பேரையும் ஓரளவு ஒரே இடத்தில் வாசிக்கலாம். விருப்பம் இருப்பின் முயற்சி செய்து பாருங்கள்.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

//...சரி இப்பொழுது அந்தக் காதலர்கள்
நிலை என்ன. அவள் கேள்விக்கு அவன் பதில் சொன்னானா.//

மெளனி சொன்னது அவ்வளவு தான். அவர் சொன்னதின் தொடர்ச்சியை நம் இஷ்டத்துக்கு இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டியது தான். அதான் மெளனி.

வெங்கட் குறிப்பிட்டிருக்கும் புதையலில் நிறைய வைடூரியங்கள் இருக்கிறது, வல்லிம்மா.

வே.நடனசபாபதி said...

எழுத்தாளர் மௌனி அவர்களின் கதைகளைப் படித்ததில்லை ஆனால் மறைந்த எனது அண்ணன் சபாநாயகம் அவர்கள், அவரது வலைத்தளத்தில்
இவர்களது எழுத்துமுறை என்ற தலைப்பில் திரு மௌனி அவர்களது எழுத்துமுறை பற்றி நான்கு பேர் அவரை சந்தித்து பேட்டி கண்டு எழுதியதை படித்திருக்கிறேன்.

Related Posts with Thumbnails