மின் நூல்

Wednesday, May 29, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                      30


சென்ற   அத்தியாயத்தைப் படித்து விட்டு வல்லிசிம்ஹன் அவர்கள் 'பத்து  தபால்காரர்களா?.. குமாரபாளையம் பெரிய ஊர்  தான் போலிருக்கு' என்று வியந்திருந்தார்கள்.

குமாரபாளையம் மெயின் ரோடு தான் அந்த  ஊரின் இதய பாகம். மெயின் ரோடில் தான் சினிமா தியேட்டர், ஓட்டல், கடைகள், போஸ்ட் ஆபிஸ் என்று சகலமும்  இருந்தது.   நெசவுத் தொழில் குடிசைத் தொழிலாக புழக்கத்தில் இருந்த காலம் அது..  பெண்மணிகள் சம்பந்தப்பட்ட  ஒரு விஷயத்திற்கு மிகவும் பிரசித்திபெற்ற ஊர் குமாரபாளையம். அந்நாட்களில் பெண்கள் தங்கள் கூந்தலை பின்னி, நுனியை ரிப்பன் போட்டு முடிவார்கள் அல்லவா?..  அந்த ரிப்பன் தயாரிப்பில்  கொடிகட்டிப் பறந்த ஊர் குமாரபாளையம்.  கலர்க் கலராய் ரிப்பன்கள்-- அவற்றில் தான் எத்தனை வகைகள்,  வண்ணங்கள்!   அந்த  ரிப்பன் சுருள்கள் அழகாய் பேக் செய்யப்பட்டு பண்டில் பண்டிலாய் குமாரபாளையம் தபால் நிலையத்தில் பார்ஸல்  செக்ஷனில் நிறைந்திருக்கும். 

குமார பாளையமும்,  பவானியும் இரட்டைக் குழந்தைகளாய்  ஜமக்காளம்  நெசவில் கைதேர்ந்த  ஊர்கள்.  திருமணம் போன்ற குடும்ப குதூகல நிகழ்வுகளில் தரையில் விரிப்பார்கள் அல்லவா,  அந்த ஜமக்காளம்.  கல்யாண சீர்வரிசைகளில் பாய்--தலையணை-- ஜமக்காளம் என்பது அந்நாட்களில் மும்மூர்த்திகளாய் இருந்தன.   ஜமக்காள நெசவு குமாரபாளையத்திலும் உண்டு  என்றாலும்  பவானி ஜமக்காளம் என்று ஜமக்காளத் தயாரிப்புக்கு பவானி  பெயர் சூட்டி விட்டு.  ரிப்பனுக்கு குமாரபாளையத்தைக் கொண்டாடினார்கள்!  ஜமக்காளம் நெய்வதற்கு குழித்தறி என்று  அழைக்கப்பட்ட விசேஷ தறி இருந்தது.  விசைத்தறி பகாசுரன் வந்து அத்தனையையும் சாப்பிட்டு விட்டது இன்னொரு பரிதாபம்.

குமாரபாளையம் தபால் ஆபிசில் பார்சல் செக்ஷ்னில் பணியாற்றுவோருக்கு பெண்டு நிமிர்ந்து விடும்.  பார்சல்களைக் கையாள-- எடுக்க, எடை போட, உள்ளே உருட்டித் தள்ள என்று  உதவிக்கு இரண்டு மூன்று  இலாகா ஊழியர்களுக்கு எந்நேரமும்  வியர்வை வழிய வேலையிருக்கும்!

கிட்டத்தட்ட இருவாரங்கள் போஸ்ட் பாக்ஸ்   செக்ஷனின் வேலைக்குப் பிறகு  ரிஜிஸ்ட்ரேஷன் பிரிவில் பணியேற்றுக்  கொண்டேன்.  எனக்கு மிகவும்  பிடித்துப்  போன வேலையாக இது  ஆனது..  நிதானமாக  நறுவிசாக நாமுண்டு நம் வேலை  உண்டு  என்று பணி செய்ய  நல்ல  செக்ஷன்  இது.   கவுண்ட்டர் வழியாக நீட்டப்படும் கடித உறையை எடை போட்டு,  எவ்வளவு மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்ட வேண்டும் என்பதை  கவரின் பின்பக்கம் பென்சிலால் குறித்துக் கொடுத்து அவர் ஸ்டாம்ப் ஒட்டி வந்ததும் சரி பார்த்து அஞ்சல் தலையில் முத்திரை குத்தி கடித உறை கொடுத்தவருக்கு ரசீது கொடுத்து  உறையை பக்கத்திலிருக்கும் டிரேயில் போட்டு விட வேண்டியது  தான்.

வழக்கமாக மாலை மூன்று மணி வரைக்கும் தான் இந்தக் கவுண்ட்டர் செயல் படும்.  அப்புறம் அன்றைய பதிவுத் தபால்களை பட்டியல் இடுகிற மாதிரி விவரக் குறிப்புகளை எழுத வேண்டும்.   ஒரே ஊருக்கு பத்து உறைகள் இருக்கும் பட்சத்தில்  அந்த பத்து கடித உறைகளையும்  காக்கி  நிற பெரிய உறையில் போட்டு  அதன் மேல் எந்த ஊர் என்பதனை எழுத வேண்டும்.
இப்படியான உறைகளுக்கு  ஆர்.பி (Registered Budle)  கவர்கள்  என்று பெயர்.
இந்த நடவடிக்கைகள் எல்லாம்  அவசர கதியில் பின்னால் நடக்கப் போகும் கடிதப் பிரித்தல் வேலைகளுக்கு  உதவியாகத் தான்.

பிறகு  ஒவ்வொரு  பீட் தபால்காரரும்  பட்டுவாடா ஆன ரிஜிஸ்தர் தபால் விவரங்களைக் கொடுப்பார்.  பட்டுவாடா ஆகவில்லை என்றால் அதற்கான காரணத்தை ரிஜிஸ்தர் தபால் உறைகளின் பின் பக்கம் குறித்திருப்பார்.  (Door Locked, Not in Town,  Addressee not available,  Refused -- இந்த மாதிரி.)

ரு  ஞாயிற்றுக் கிழமை.  அத்தனை  பேருக்கும் விடுமுறை.

காலையில் காலைக்காட்சி என்று ஆங்கில படம்  எதற்கோ  ஒரு செட் ஆட்கள்  போய் வந்தனர்.  நான் காவிரிக்குப் போய் மனசார அமுங்கிக் குளித்து  விட்டு  வந்தேன்.   ரூமிற்கு வந்து உடை மாற்றி ராமாஸ் கேப் போய் சாப்பிட்டு வந்தேன்.  எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஏதாவது பாயசம் ஒரு கப்பில் வைப்பார்கள்.  அன்று எனக்குப் பிடித்த சேமியா பாயசம்.  ரூமிற்கு வந்த பொழுது  திம்மென்றிருந்தது.  பின்பக்க ரேழியில் நல்ல காற்று வரும்.  கதவை பரக்கத் திறந்து பாய் விரித்துப் படுத்தது   தான் தெரியும்.   பெண்டுலம் கடிகாரத்து மணியோசை தான் எழுப்பியது.  மணியைப் பார்த்தால் ஐந்து.    மாலை ஐந்து.

வீடு பூராவும் அமைதியாக இருந்தது..  ஈ காக்கை காணோம்.  முகம் கழுவி துடைத்து உடை மாற்றி வாசல் பக்கம் வந்தேன்.  மாடிக்குப் போகும் படிக்கட்டு வாசல் பக்கம் தான்.  வெளிக் கதவு திறந்து உள்ளே நுழைந்ததும் இருக்கும்.  மாடிப் பக்கமிருந்து பேச்சுக் குரல் வந்தது கீழே  கேட்டது.   ஆஹா!  அத்தனை பேரும் மொட்டை மாடிக்குப் போயிருக்கிறார்கள் என்று தெரிந்து படியேறினேன்.

வெளிப்பக்கம் போனதும் நல்ல காற்று..   வட்டமாக   உட்கார்ந்தும்,  சிலர் கைப்பிடிச் சுவரில்  அமர்ந்தும்  சுவாரஸ்யமாகப்  பேசிக்  கொண்டிருந்திருந்தனர்.   நான் போய்ச்  சேர்ந்ததும் தபால் ஆபிஸ் 2 வந்தாச்சய்யா என்று   யாரோ உரத்த குரலில் சொன்னார்கள்.  ரத்தினம்   தபால் ஆபிஸ்  1  அவர்களுக்கு.

என்னையும் ரத்தினத்தையும்  தவிர அத்தனை   பேரும் பள்ளி ஆசிரியர்கள் தேர்வுகளுக்குப் படித்தவர்கள்..  சொல்லப் போனால்  சிலர்  தமிழாசிரியர்களாகவும் தனியார்  பள்ளிகளில்  பணியாற்றியவர்கள்.   ஏதோ ஏற்பாட்டில்  தமிழில் பட்டப்படிப்பு  படிக்க   இங்கு  வந்திருப்பவர்கள்.   அந்நாளைய  தமிழாசிரியர்களில்   முக்கால்வாசிப் பேர்  திராவிட  முன்னேற்றக் கழக அனுதாபிகளாய்  இருந்தனர்.  பாக்கி கால்வாசி கிராமப்புறத்து ஆசிரியர்கள், காங்கிரஸ்.     இதெல்லாம்  அவர்களோடுப் பழகிய அந்தப் பதினைந்து  நாட்களில் நான் தெரிந்து கொண்டது.  வேலைக்குப் போனதிலிருந்து   மனசில் மறைந்திருந்த  திமுக மீதான பற்றும் பாசமும்
இந்தத் தமிழ் ஆசிரியர்களுடனான பழக்கத்தில் மீண்டும் என்னுள்  துளிர்த்திருந்தது.     நான்  மாதவி பத்திரிகையைக் கையாண்ட விஷயத்தை இவர்களிடம்  சொன்ன போது  மகிழ்ந்து போனார்கள்.  மாதவி தமிழ் தேசியக் கட்சி  பத்திரிகை என்று  இவர்களுக்குத் தெரிந்திருந்தது.   இரவில் ஒன்பது மணி சுமாருக்கு எல்லோரும் மலாய்  மிதக்கும் பால் சாப்பிட வெளியே போவோம்.  மாதவி பத்திரிகை சம்பந்தமாக  அரட்டை அடித்த அன்றைக்கு  அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில்  பன், பால், பழம் என்று  எனக்கு வாங்கித்  தந்து ஜமாய்த்து  விட்டார்கள்.

தமிழ் வாரப் பத்திரிகைகள் பற்றி பெரிசாக கருத்து ஏதும் அவர்களுக்கு இல்லாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.   கழக  செய்தித்தாட்கள், கழக  வார ஏடுகளைத் தாண்டி வாசிக்கும்   பழக்கம் இல்லாதிருந்தது.  சலூனில் முடிவெட்டிக் கொள்ளப்  போன பொழுது ஆனந்த விகடன் பத்திரிகையைப் பார்த்ததாகவும் அதிலிருந்த ஜோக்குகள் மிகவும் பிடித்திருந்ததாகவும் ஒருவர் சொன்னார்.

"புதுமைப் பித்தனைக் கூடப் படித்ததில்லையா?" என்று கேட்டேன்.

"புதுமைப்பித்தனை படிக்கறதா? திரைப்படம் இல்லையா அது?" என்று பதிலுக்குக் கேள்வி வந்தது.

அந்நாட்களில் டி.கே. சீனிவாசன் என்ற கழக எழுத்தாளர் இருந்தார்.  அவரது 'ஆடும் மாடும்'  என்ற  நூல் பரவலாக பேசப்பட்ட நூல்.  திமுக பகுதியிலிருந்து வந்திருந்த அந்த நாளைய நல்ல ஆக்கமாக எனக்கு  அறிமுகமாகியிருந்தது.  அந்த நூல் பற்றி நான் குறிப்பிட்டு  சிலாகித்த  பொழுது யாருக்குமே அது பற்றித் தெரிந்திருக்கவில்லை.  இன்றைக்குக் கூட திமுக சார்பான இலக்கிய அணி  என்று ஏதாவது  இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் தெரிந்திருக்காது.

இலக்கியங்கள் என்றால் சங்க இலக்கியங்கள் தான்  என்ற அளவில் அவர்கள் புரிதல் இருந்தது.   பாரதிதாசனை கழகத்தின் புரட்சிக் கவிஞர் என்ற மட்டில் அறிந்திருந்தனர்.  பாரதியாருடன் அவருக்கிருந்த தொடர்புகள் பற்றி விவரமாக அறியாதாராய் இருந்தனர். பாரதிதாசனை கழகத்தின் நாத்திகக் கவிஞர் என்பது போலவான தோற்றம் தான் அவர்களுக்கிருந்தது.   மயிலம் முருக பெருமான் மீது பக்தி கொண்டு, 'மயிலம் ஸ்ரீசுப்பிரமணியர் துதியமுதி' என்ற பெயரில் பாரதிதாசனின் பாடல் திரட்டு ஒன்று இருப்பதைப் பற்றி நான்  சொன்னபோது, 'அப்படியா?'  என்று ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டனர்.   அந்த நேரத்தில் பெருமாள் என்பவர்  அழகின் சிரிப்பிலிருந்து பாரதிதாசனின் கவிதை ஒன்றை ராகத்துடன்  அழகாகப் பாடினார்.

அவர்கள் கற்றது வேறு  வகையாக இருந்தது.   தொல்காப்பியம் பற்றி  முகிலன் என்ற ஆசிரியர்  சொன்ன கருத்துக்கள் பிரமிப்பாக இருந்தன.  ஆனால் அவர்கள் சொன்னது எல்லாம் சொந்த முயற்சியில் ஆய்வின் அடிப்படையில் அறிந்தது என்றில்லாமல் யாரோ எழுதியவற்றை மனனம் செய்து ஒப்புவிப்பது போல செயற்கையாக இருந்தது.

வெள்ளை வாரணர் என்ற பழந்தமிழ் அறிஞர் மேற்கொண்ட ஆராய்சிகளை பற்றி சொல்லும் பொழுது  கி.மு. 7-ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியை தொல்காப்பிய காலம் என்று எப்படி அவர் வரையறுக்கிறார் என்று ஒப்பிலக்கிய சான்றுகளோடு முகிலன்  விளக்கினார்.

'தொல்காப்பியத்திற்கு  பனம்பாரனார் என்ற புலவர் பாயிரம் தந்துள்ளார்.  'வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு  நல்லுலகத்து'  என்றும் இன்றும் பிரபலமாக இருக்கும் நாமறிந்த சொற்றொடர் பனம்பாரனாரின் பாயிரத்து ஆரம்ப வரி தான்.  நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையில் தொல்காப்பியம் பாடப்பெற்றதாக பாயிரம் பதிவு செய்திருக்கிறது.  நான்மறை  முற்றிய  அதங்கோட்டு ஆசான் என்ற புலவர் முன்னிலையில் தொல்காப்பியம் அரங்கேற்றமானதாக பாயிரம்  சொல்கிறது.  தொல்காப்பியர் காலம்  கி.மு. 700 என்றும் ஏழாம் நூற்றாண்டின்  ஆரம்ப காலத்தில் தொல்காப்பியம் அரங்கேற்றமாயிற்று என்றும் கொள்ளலாம்' என்று வெள்ளை வாரணர் வரையறுத்திருப்பதாக முகிலன்  சொன்னார்.

கொஞ்சம் கொஞ்சமாக வானம் இருட்டிக் கொண்டு வந்தது.    குருசாமி பாளையம் போனதிலிருந்து  இலக்கியம், வார இதழ்கள் போன்ற எண்ணங்களே என்னில் அறுந்த  மாதிரி இருந்து,  இன்று அதன் தொடர்ச்சி தொடர்ந்த மாதிரி ஒரு புத்துணர்ச்சி மனசில் பொங்கியது.

ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இப்படியான கலந்துரையாடல் அந்த இல்லத்தின்  மொட்டை மாடியில் நடப்பதாகத் தெரிய வந்தது.  அன்றைய பொழுதுக்கு எல்லோரும் மகிழ்ச்சியாகக் கலைந்தோம்.

ரத்தினம் பவானியில் இருக்கும் அவரது சொந்தக்காரரைப் பார்க்கப் போக வேண்டியிருப்பதாகச் சொன்னார்.

லேசாகப் பசிக்கத் தொடங்கியிருந்தது.    செருப்பை  மாட்டிக்  கொண்டு நான் ராமாஸ் கேப்பிற்கு புறப்பட்டேன்.

(வளரும்)



23 comments:

நெல்லைத்தமிழன் said...

வெறும்ன உங்க அனுபவங்களைப் படிக்கும்போது ரசனையாக இருந்தது.

இப்போ இலக்கியத்தையும் அதனையொட்டிய செய்திகளையும் சேர்த்து எழுதும்போது இன்னும் இண்டெரெஸ்டிங் ஆக இருக்கிறது.

இந்த ஜீவி சார்தானே முன்னொரு காலத்தில் சங்கத்தமிழ் பற்றியெல்லாம் எழுதினது என்ற நினைப்பும் மனதில் ஓடியது (அதைப் படித்துத்தான் உங்கள் இடுகைகளையே படிக்க ஆரம்பித்தேன்)

Bhanumathy Venkateswaran said...

உங்களின் நினைவாற்றல் பிரமிக்க வைக்கிறது. எப்போதோ நடந்த நிகழ்வு ஒன்றை, நேற்றுதான் நடந்தது போல சொல்லியிருக்கிறீர்கள்.
தமிழாசிரியர்களின் இலக்கிய அறிவு பற்றி நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரி.

ஸ்ரீராம். said...

கட்டுரை வடிவிலிருந்து, நிகழ்வைத் சொல்லும் லேசான கதை வடிவத்துக்கு மாறியிருக்கிறது. ஏதோ சம்பவம் நடக்கப் போவதற்கான மூட்டமா, தெரியவில்லை! காத்திருக்கிறேன்.

ஸ்ரீராம். said...

ஆசிரியர்களுக்கும் உங்களுக்குமான கலந்துரையாடல் சுவாரஸ்யம். ஒருவருக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொண்டு, பகிர்ந்துகொண்டு...

சுவாரஸ்யம்.

ஸ்ரீராம். said...

அந்நாளில் நீங்கள் இருந்த புகைப்படம் இருந்தால் வெளியிடலாமே... இளைய ஜீவியைப் பார்க்கும் வாய்ப்பு!

வல்லிசிம்ஹன் said...

தமிழ்ப் பதிவாக அமைந்திருக்கிறது. நல்ல தமிழ் இலக்கிய அரட்டை உங்களுக்கு
நிறைவைத் தந்திருக்க வேண்டும்.
பவானி ஜமக்காளம் மிக உயர்ந்தது.
அதன் உழைப்பை இன்னும் மறக்க முடியாது.
யந்திரத்தனமாக மாறியதுதான் கோரம்.

அந்த ராமாஸ் கஃபே இன்னும் இருக்கிறதா.
அலுவலக ஏற்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன.
மிக மிக நன்றி ஜி.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

இலக்கியத்தோடு அரசியல் ஈடுபாடுகளும் கலக்கும் பொழுது எப்படி ரசிக்கப்படப் போகிறது என்று தெரியவில்லை. சுயவாழ்க்கையை மீட்டிப் பார்க்கையில் ரசனையை விட நிகழ்வுகளின் தரிசனமும் அதை மூன்றாம் மனிதர் போல விலகிப் பார்க்கும் பார்வையும் முக்கியப்பட்டால் மனத்திற்கு திருப்தியாகி போகும்.

சங்கத் தமிழ் தொட்டு எழுதியதெல்லாம் புத்தகமாகியிருப்பதால் பதிவுகளிலிருந்து எடுத்து விட்டேன். இனி எழுதப் போகின்றவற்றை பதிவுகளில் பதிந்த பிறகு புத்தக ஆக்கம் பெறலாம். பதிவுகளில் பதிவது தாழ்வாரத்தில் குழந்தை தவழ்கிற மாதிரி. அதற்குப் பிறகு தான் எழுந்து நடப்பதெல்லாம்.

நன்றி, நெல்லை.

ஜீவி said...

@ பானுமதி வெங்கடேஸ்வரன்

என்றோ நடந்தவற்றை நேற்றுத் தான் அன்று நிகழ்ந்தவாறு மனசில் நிகழ்த்திப் பார்ப்பதால்
அப்படித் தோன்றுகிறது போலும். அடுத்து ஸ்ரீராம் சொல்கிற மாதிரி ஒரு சுவாரஸ்யத்திற்காக கதை வடிவில் நேரேட் பண்ணும் பொழுது 'அந்த' மெருகு ஏறுகிறது போலும்.

பாடத்திட்டத்திலும் சரி, ஆசிரியர்களின் ஈடுபாட்டிலும் சரி, தற்காலத்திய இலக்கியங்களுக்கு இடமே இல்லை போலும். நிகழ்கால அரசியலில் சம்பந்தப்ப்டிருப்பவர் தவிர மற்றவர்கள் அதன் போக்கை புரிந்து கொள்ளவோ தீர்மானிக்கவோ கூடாதென்றெ
ஒரு பெரிய சதி வலை பின்னப்படுகிறதோ என்ற ஐயம் கூட எனக்குண்டு. செய்தித் தாட்கள், பத்திரிகைகள், செய்தி ஊடகங்கள் எல்லாம் அந்தப் பின்னலுக்கான முழு ஒத்துழைப்பையும் தருகின்றன என்றே எண்ண வேண்டியிருக்கிறது.

நன்றி, சகோதரி..

ஜீவி said...

@ ஸ்ரீராம்

கழுகுக்கண் பார்வை என்றால் சரியான க.க. பார்வை தான். காத்திருப்பதில் தான் எத்தனை நம்பிக்கை! பல நேரங்களில் இந்த மாதிரி டிடெக்டிவ் நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை தான். :))

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

இளைய ஜீவி என்றால் 7 வயசு ஜீவி. மதுரை சிம்மக்கல் போட்டோ ஸ்டூடியோ ஒன்றில் எடுத்தது. அதைப் புறக்கணித்தால் ஒரேடியாக ரொம்ப நாட்பட்டது. அவசரத்திற்கு கிடைத்தது 35 வயசுக்கு மேலான புகைப்படம் ஒன்று இப்போதைக்கு. . உபயோகப்படுத்தியிருக்கிறேன்.

இடையில் தேடலில் கிடைப்பதை வெளியிடுகிறேன். நன்றி, ஸ்ரீராம்.

ஜீவி said...

@ வல்லி சிம்ஹன்

//அந்த ராமாஸ் கஃபே இன்னும் இருக்கிறதா?.. //

இருக்கும் என்றே நம்புகிறேன். இதையெல்லாம் இப்பொழுது போய்ப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாகத் தான் இருக்கிறது.

ஸ்ரீராம் என்ற உயரிய ராம நாமம் என் வாழ்க்கையில் குறுக்கிடும் நேர்த்தியான சம்பவங்களை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

ஸ்ரீராம் சிட் பண்டில் சேர்ந்ததிலிருந்து ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்கிறேன்.

'நம்ம' ஸ்ரீராமையும் சேர்த்துத்தான்.

கோமதி அரசு said...

எவ்வளவு விஷயங்கள் ! மடைதிறந்த வெள்ளம் போல் செய்திகள் தந்து கொண்டு இருக்கிறீர்கள்.

நினைவாற்றல் அருமை.
பவானி சமுக்காளம் கைத்தறி மிஷின் தறி யோடு போட்டி போட முடியாது.
இன்னும் சிலவீடுகளில் கைத்தறி உண்டு, அவர்களிடம் சொல்லி ஜமுக்காளம் வாங்குவார்கள் திருமணத்திற்கு என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.

உங்கள் இளமை கால படமா வலது கோடியில் இருப்பது?
ஓவ்வொரு ஞாயிறும் கலந்துரையாடல் உங்களால் அவர்கள் நிறைய விஷயம் தெரிந்து கொண்டு இருப்பார்கள்.

அடுத்த வேலை ஸ்ரீராம் சிட் பண்டா?
அனுபவங்களை படிக்க தொடர்கிறேன்.

ஸ்ரீராம். said...

மேசையில் வைத்து எடுத்த படத்தை ​வெட்டி தனியாக்கி வெளியிட்டிருக்கலாம். இன்னும் இருந்திருக்கும்.

நீங்களா அது? நம்பவே முடியவில்லை.

G.M Balasubramaniam said...

ஒரு நினைவைப் பகிர்ந்து கொள்கிறேன் 1963 அல்லது நான்கு என்று நினைக்கிறேன் திரு நாராயணசாமி நினைவு நாவல் போட்டி கலைமகளில் அறிவித்திருந்தார்கள் நானும் ஒரு நாவல் எழுதி ரெஜிஸ்தர் தபாலில் அக்/ நாலெஜ்மெண்ட் ட்யூ வுக்கு தேவைப்பட்ட ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பினேன் ஆனால் அனுப்பிய மறுநாளே அக்நாலெட்ஜ்மெண்ட்காகிதம் எந்தக் கையெழுத்துமில்லாமல் எனக்கு வந்து விட்டது என்நாவல் போய்ச் சேர்ந்ததா இல்லையா என்று கூட அறிய முடியவில்லை திருச்சி பொன்மலைப்பட்டி தபால் நிலையத்தில் கேட்டேன் அவர்களால் தவறுக்கு வருந்த மட்டுமே முடிந்தது

ஜீவி said...

@ கோமதி அரசு

//உங்கள் இளமை கால படமா வலது கோடியில் இருப்பது?//

ஆமாம். 35 வயசு இளமைக் கால புகைப்படம். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில்
Political Science பட்டப்படிப்பு தொலைதூரக் கல்வி திட்டத்தில் படித்தேன். பட்டப்படிப்பு சேர்க்கைக்காக எடுத்த புகைப்படம் கைவசம் இருந்ததைத் தேடி எடுத்தேன். ஸ்ரீராம் கேட்டாரே என்று புகைப்படத்தைப் போட்டேன்.

அதான் அரசாங்க வேலையில்-- அதுவும் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தாயிற்றே? அதற்கான பயிற்சி வகுப்புகள் தான் இந்த தபால் இலாகா பணி.

தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (4)

போட்டோவுக்கும் கைப்பேசி கேமராவுக்குமான இடைவெளியை எப்படி சரியாகக் கணிப்பது என்பது தெரியாததால் சிறிய புகைப்படமாய் வந்து விட்டது. போகப் போக பழக்கமாகி விடும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம். (இந்த பார்க்கலாம் வார்த்தையை எழுதினாலே காமராஜர் நினைவு வந்து விடுகிறது..) )

ஜீவி said...

@ ஜிஎம்பீ

இந்த விஷயத்தில் எனது யூகம் என்னவென்றால்-- The following are possibilities:

1. நீங்கள் அனுப்பிய உறையோடு இணைக்கப் பட்டிருந்த Acknowledgement card பாதி வழியில் கழண்டு வந்திருக்கலாம். அப்படியிருந்தால் கூட அனுப்பியவருக்கே அவர் முகவரி இருப்பதால திரும்பி வந்து விடும்.

2. தபால்காரர் கலைமகள் அலுவலகத்தில் கையெழுத்து வாங்க மறந்திருக்கலாம்.

கலைமகள் ஆபிஸ் சீல் Acknowledgement card-ல் இருந்தால் போதும். அவர்கள் வாங்கிக் கொண்டதாக அர்த்தம். நான் பணி செய்த காலத்தில் போஸ்ட் கார்டுகளுக்கே மிகுத்த அக்கறை எடுத்துக் கொண்ட காலம். அதனால் நிச்சயம் உங்கள் தபால் போய்ச்சேர்ந்திருக்கும்.

G.M Balasubramaniam said...

தபால் அனுப்பிய மறு நாளே ack due எந்த முத்திரையும்கையெழுத்தும் இல்லாமல்வந்தது நிச்சயம்தபால் ஆஃபீசில் அப்படியே அனுப்பிவிட்டார்களா என்நாவல் போயிற்றா என்று கூடதெரியவில்லை

ஜீவி said...

@ ஜிஎம்பீ

நிச்சயம் போய்ச் சேர்ந்திருக்கும். அந்த நாட்களின் கட்டுப்பாடுகள் அப்படி.

சாதாரண தபால் கார்டுகளுக்கு ஏகப்பட்ட மரியாதை அந்த நாட்களில். டெலிவரி ஆகாத கார்டுகளை வைத்துக் கொண்டு விழிப்போம். தகுந்த காரணங்களோடு ஒவ்வொரு கார்டுக்கும் ஒரு History எழுதி இணைத்து டெட் லெட்டர் ஆஃபிஸூக்கு அனுப்புவதற்குள் தாவு தீர்ந்து விடும்.

தனி மனிதர்களின் தார்மீக நியாயங்களின் அஸ்திவாரத்தில் அந்த நாட்கள் நகர்ந்தன.
வானம் மும்மாரிப் பொழிந்தது.

அந்த நாட்களில் வாழ்ந்து பார்த்த உங்களுக்குத் தெரியாது ஒன்றுமில்லை. சில உண்மைகள் கசப்பானவை.

அப்படியானால் இப்படியா? இப்படியானால் அப்படியா? என்றெல்லாம் குழம்பிக் கொள்ள வேண்டாம்.

அது அப்படித்தான் என்ற உறுதியான நம்பிக்கை அனுபவத்தின் அடிப்படையில் உங்களிடம்
நியாயம் பிறக்க வேண்டும்.

இந்தத் தொடரைத் தவறாமல் வாசித்து வாருங்கள். என் அனுபவப் பாடத்தைச் சொல்கிறேன்.

”தளிர் சுரேஷ்” said...

அந்த நாள் குமாரபாளையம், டவுனுக்கு நேரடியாக அழைத்து சென்றது போன்று ஒர் அருமையான வர்ணனை. நினைவில் பசுமையாக படிந்திருப்பதால்தால் இவ்வளவு சிறப்பாக எழுத முடிகிறது. அருமை! தொடருங்கள்!

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

அந்தந்த சந்தர்ப்பங்களை நினைத்தாலே நூல்கண்டிலிருந்து ஒரு முனையை இழுத்தால் போதும் என்கிற மாதிரி நினைவுகள் கோர்வையாக வந்து விடுகின்றன. பழகிய சிலரின் பெயர்கள் என்ன நினைத்தாலும் நினைவுக்கு வராமலிருப்பது ஒரு குறை. சில விஷயங்களை பட்டும் படாமலும் வேறு சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் பகுதிக்கு வரும் வாசகர்கள் வாசிப்பில் தேர்ந்தவர்கள் என்ற பெருமை எனக்குண்டு. அதனால் தான் பல விஷயங்கள் வாசித்த மாத்திரத்திலேயே வாசித்தவர்களும் அதே உணர்வை அனுபவிப்பது சாத்தியமாயிருக்கிறது.

வே.நடனசபாபதி said...

அஞ்சலகத்தில் செயல்படுத்தப்படும் நடைமுறைகளை விரிவாக விளக்கியதைப் படிக்கும்போது, ஈடுபாட்டுடன் அந்த பணியை செய்திருந்ததால்தான் , ஆண்டுகள் பல ஆன பின்பும் தங்களால் அவைகளை மறக்காமல் சொல்ல முடிகிறது என நினைக்கிறேன். தங்களின் நினைவாற்றலுக்கு பாராட்டுகள்!

//அந்நாளைய தமிழாசிரியர்களில் முக்கால்வாசிப் பேர் திராவிட முன்னேற்றக் கழக அனுதாபிகளாய் இருந்தனர்.//

உண்மைதான். அதனால் தான் தி.மு.க 1967 ஆம் ஆண்டு தேர்தலில் அமோக வெற்றி பெற்று அரசு அமைக்க முடிந்தது.

//அந்நாட்களில் டி.கே. சீனிவாசன் என்ற கழக எழுத்தாளர் இருந்தார். அவரது 'ஆடும் மாடும்' என்ற நூல் பரவலாக பேசப்பட்ட நூல்..... அந்த நூல் பற்றி நான் குறிப்பிட்டு சிலாகித்த பொழுது யாருக்குமே அது பற்றித் தெரிந்திருக்கவில்லை. //

இன்றைக்கு மாநிலங்கள் அவையில் உறுப்பினராக இருக்கும் திரு டி.கே.எஸ் இளங்கோவனின் தந்தைதான் திரு டி.கே.சீனிவாசன். அவருக்கு நிச்சயம் அவரது தந்தை எழுதிய நூல் பற்றி தெரிந்திருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடல் தங்களது இலக்கியப் பசிக்கு சிறிது தீனியைத் தந்திருக்கும் என எண்ணுகிறேன்.

தொடர்கிறேன்


ஜீவி said...

@ வே. நடன சபாபதி

இதை வாசிக்கும் யாராவது டி.கே.சீனிவாசன் அவர்களின் 'ஆடும் மாடும்' நூல் பற்றி- குறைந்த பட்சம் அவர் திரு. டி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் தந்தை என்றாவது குறிப்பிடுவார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

நீங்கள் குரிப்பிட்டு விட்டீர்கள், சார். என் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. ஒருகால் தத்துவமேதை டி.கே.சீனிவாசன் என்று குறிப்பிட்டிருந்தால் அந்நாளைய கழகத் தொட்ர்புள்ள யாராவது தெரிந்து சொல்லியிருக்கலாமோ?.. தெரியவில்லை.

பொதுவாக கழகத்தில் பரவலான பருவ இதழ்கள் வாசிப்பு இருந்ததில்லை. அந்நாளைய விகடன், கலைமகள் பத்திரிகைகள் அம்மாமி பத்திரிகைகளாய் அவர்களுக்கு இருந்தது.
கல்கி பத்திரிகையை அக்கிரஹாரத்து கெசட் என்றே குறிப்பிடுவார்கள்.

Related Posts with Thumbnails